சேலம்: வேலூரை சேர்ந்த சேலம் விஜயபானு நினைவிருக்கிறதா? அவர்தான் இன்றைய ஹாட் டாபிக்.. அன்னை தெரசா அறக்கட்டளை ரூ.300 கோடி மோசடி செய்ததாக இவர்மீது ஏற்கனவே வழக்கு உள்ளது.. கைதாகி ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளார்.. ஆனால் போலீசுக்கு ரூ.48 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, கைதான விஜயபானு பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் விஜயபானு யார் தெரியுமா? அம்மாப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை நடத்தி வந்தவர்.. அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி, டபுள் லாபம் என்று ஆசை வார்த்தை கூறி பலரிடம் பணம் பெற்று, ரூ.500 கோடி வரை மோசடி செய்தாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
500 கோடியா? என்று அதிர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்தி, விஜயபானு உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.2 கோடியை முடக்கினர். அறக்கட்டளையில் சோதனை நடத்தி ரூ.12.65 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்து, விஜயபானு உள்ளிட்ட 4 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஆனால் விஜயபானுவுக்கு எதிரான மோசடி புகார்கள் இப்போதுதான் தொடங்கியவை இல்லை. கடந்த 2011-ல் ஒரு வழக்கில் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டவர்.. அங்கு சிறைக்கைதியாக இருந்துக்கொண்டே, டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறேன், சிறையில் நடக்கும் ஊழலை ரகசியமாக தெரிந்துகொள்ளவே இப்படி ஜெயிலுக்கு வந்திருக்கிறேன் என்று கதை கதையாக அளந்து விட்டவர்.. இந்த கதையையும் ஜெயில் வார்டன் விஜயா என்பவர் நம்பியிருக்கிறார். உடனே விஜயாவிடமும் 22 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை ஆட்டைய போட்டுவிட்டார்.. இதுதொடர்பான வழக்கும் 13 ஆண்டுகளாக நடந்தது.. கடைசியில், பூவிருந்தவல்லி கோர்ட் விஜயபானுவுக்கு 8 பிரிவுகளின் கீழ் மொத்தம் 17 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் சில மாதங்களுக்கு முன்பு விதித்தது. ஆனாலும், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, வேலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் விஜயபானு மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதே கவனத்தை ஏற்படுத்தி வந்தது.. இதில் சேலத்தையே அதிர வைத்தது 300 கோடி அறக்கட்டளை மோசடி விவகாரம்தான்.. பணத்தை இழந்தவர்கள் இன்னும் விடவில்லை. தங்களுக்கு பணம் கிடைக்காததால், பாஸ்டர் செந்தில்குமார் நடத்தி வந்த ஜெபக்கூடத்திலேயே தற்போது போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.. 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். "நாங்கள் செலுத்திய பணத்தை வாங்கிக் கொடுங்கள்.. பணம் கிடைக்காமல் இங்கிருந்து போக மாட்டோம்" என்று அவர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், நேரடியாகவே அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேசியுள்ளார்... போலீசில் புகார் தந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் செய்தார்.. ஆனாலும், "புகார் கொடுத்தால் எங்களுக்கு பணம் வராது.. நீங்களே பணத்தை வாங்கிக் கொடுங்கள்" என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்புக்கு நடுவே, விஜயபானு பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று திடீரென இன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில் விஜயபானு, மாநகர போலீஸ்காரர் ஒருவர் 48 லட்சம் ரூபாயை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என கூறி தங்களிடம் வாங்கி சென்றார் என தெரிவிக்கிறார். இந்த ஆடியோ போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆடியோவில் பேசுவது உண்மையிலேயே விஜயபானு தானா? யாரிடம் பணத்தை கொடுத்தார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது..!!சேலம் விஜயபானு யார் தெரியுமா?
சேலம் அறக்கட்டளை மோசடி
300 கோடி அறக்கட்டளை மோசடி
விஜயபானு ஆடியோ வைரல்