எதிராளியாக வந்து என் சகோதரனானவர்! வில்லியம்சன் ஓய்வுக்கு விராட் கோலி உருகி எழுதிய எமோஷனல் கடிதம்

  • மும்பை: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி உலக கிரிக்கெட் வட்டாரங்களை உலுக்கியுள்ளது. வில்லியம்சனின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரரும் அவரது நீண்டகால சமகாலப் போட்டியாளருமான விராட் கோலி சோசியல் மீடியாவில் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    மைதானத்தில் தீவிரமான எதிராளிகளாக களம் கண்ட இவ்விரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும், காலப்போக்கில் தங்களுக்குள் வளர்த்துக்கொண்ட ஆழமான நட்பை விராட் கோலியின் இந்தப் பதிவு வெளிப்படுத்தியுள்ளது. கேன் வில்லியம்சனுடனான தனது பல ஆண்டுகால நினைவுகளையும், விளையாட்டைத் தாண்டிய அவர்களது தனிப்பட்ட புரிதலையும் விராட் கோலி அழகாக விவரித்துள்ளார்.

    Advertisement

    அதில், இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில், மைதானத்தில் ஒரு கடுமையான எதிராளியாக இருந்து எனக்கு ஒரு சிறந்த நண்பனாக மாறியவர் நீங்கள். இவ்வளவு வருடங்களாக நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதும், உங்களுக்கு எதிராக களத்தில் போட்டியிடுவதும் எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி.

    ஆனால் அதையெல்லாம் விட கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதைத் தாண்டிய பொதுவான விஷயங்களில் நமக்குள் இருக்கும் தனிப்பட்ட நட்புக்கும், நாம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கும் நான் எப்போதும் அதிக மதிப்பு கொடுக்கிறேன். நாம் இருவரும் பேசும்போதோ அல்லது சந்திக்கும்போதோ ஏற்படும் அந்தத் தருணங்களை நான் எப்போதும் போற்றி மகிழ்வேன்.

    Advertisement

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே. நாட்டுக்காகவும் கிரிக்கெட்டிற்காகவும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் மிகச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டீர்கள்.. இனிமேல் உங்கள் கால்களை நீட்டி நிம்மதியாக வாழ்க்கையை அனுபவிக்க உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது. உண்மையான வாழ்க்கை என்பது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளார்.

    விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரின் சர்வதேச கிரிக்கெட் பயணமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில்தான் தொடங்கியது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டது முதல் இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது.

    Advertisement

    சமகால கிரிக்கெட்டின் 'ஃபேப் ஃபோர்' என்று அழைக்கப்படும் உலகின் மிகச்சிறந்த 4 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இவ்விருவரும் தூண்களாகத் திகழ்ந்தனர். கேன் வில்லியம்சன் இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரின் நடுவே தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Virat Kohli: Virat Kohli Pens Heartfelt Message as Kane Williamson Retires from International Cricket