திருவனந்தபுரம்: பள்ளிகளை சரி செய் என்று, வட மாநிலங்களில் கரப்பான் ஜனதா கட்சி (CJP) இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளை ஆய்வு செய்து.. அதன் மோசமான நிலைமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் அரசு பள்ளியை பார்த்து வட மாநில சுற்றுலா பயணி ஒருவர் ஆச்சரியமடைந்திருக்கும் சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.
கரப்பான் ஜனதா கட்சி என்கிற அமைப்பு சமீப காலமாக மத்திய அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள் குறித்து போராட்டம் நடத்தியிருந்தது. இந்த போராட்டத்தின் காரணமாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை காப்பாற்றுவோம் என்கிற முழக்கத்துடன், 'பள்ளிகளை சரி செய்' என்று பிரச்சாரத்தை CJP மேற்கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் ஒவ்வொரு அரசு பள்ளியாக ஆய்வு செய்து.. பள்ளிகளின் நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு CJP கொண்டு வந்திருக்கிறது. இந்த ஆய்வில்.. அரசு பள்ளிகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தபோது.. அங்கிருந்த அரசு பள்ளியை ஆய்வு செய்திருக்கிறார். அதன் தரம் குறித்து அவர் பதிவிட்டிருக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மூணாறு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இருக்கிறது. என்டரன்ஸில் கேட் இருக்கிறது. கேட்டை மூடிவிட்டால் அதைத்தாண்டி யாரும் உள்ளே போக முடியாது. உள்ளே மாணவர்களுக்கு என தனியாக பேருந்து இருக்கிறது. அட ஆமாங்க.. அரசு பள்ளிக்கு தனியாக பேருந்து இருக்கிறது. அதில் அரசு பள்ளியின் பேருந்து என்று எழுதப்பட்டிருக்கிறது. பள்ளியின் ஆபிஸ் ரூம் அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்கு என தனியாக இட வசதி இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து ஆச்சரியமடைந்த அந்த பயணி, பள்ளி அருமையாக இருக்கிறது என்று வீடியோவில் கூறியிருக்கிறார். வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் அரசு பள்ளிகளின் தரம் சிறப்பாக இருப்பதாகவும், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.