Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர வருவதோர் நோய்

Subscribe to Oneindia Tamil

எந்த பத்திரிகையைப் பார்த்தாலும் நுகர்பொருட்களுக்கும் திரைப்படங்களுக்கும்இணையாக அல்லது விஞ்சும் வகையில் கல்விநிலையங்களின் விளம்பரங்கள் தென்படுகின்றன.அதேரீதியில் சிறுநகரங்கள் வரை திரையரங்குகளில், கேபிள் டி.வி.களில், சுவர்களில்,தெருமுனைகளில் ஸ்லைடுகளாக, செய்திப்படங்களாக, சுவரொட்டிகளாக,தட்டிபோர்டுகளாக, பேனர்களாக கல்விநிலையங்களின் விளம்பரங்கள் தூள்பறக்கின்றன.மின்கம்பங்களும் கூட தப்பிப்பதில்லை. எப்படியாவது கல்வியை பரப்பியே தீர்வதென்றுகங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் இக்கல்வி நிலையங்களைப்பற்றி அறியநேர்ந்தவை உங்களுக்குமாக.

Govr Schoolசீருடை, காலணி, நோட்டு, புத்தகங்கள் (அதற்கான அட்டை கூட),எழுதுபொருட்களின் விற்பனையாளர்களாகவும், முறையான கல்வித் தகுதியற்றவர்களைகுறைந்த சம்பளத்திற்கு ஆசிரியர்களாகவும் அமர்த்தி கல்விப்பணி ஆற்றிவரும் பள்ளிகள்ஒவ்வொரு ஊரிலும் உண்டு. பேருந்துகளை இயக்காமல் நிறுத்திவைத்திருக்கும்விடுமுறைக்காலங்களில் கூட ஒரு பைசாவையும் குறைத்து வாங்கத் தெரியாதவைஇப்பள்ளிகள். தனியாக ஒரு சாலையமைத்து அதில் தான் மாணவர்கள் வரவேண்டுமென்றுகட்டணம் வசூலிக்காமல் இருக்குமளவுக்கு அவைகளுக்கு மக்கள்மீது இன்னும் கருணைஇருக்கிறது.

இந்த உள்ளூர் பள்ளிகளைவிடவும் இப்போது பரபரப்படைந்திருப்பவை உறைவிடப்பள்ளிகளே. இவை பத்தாம் வகுப்பு வரை, +2 வரை, +2 க்கு மட்டும்பயிற்சியளிப்பவை என்று பலவகையிலானவை. கடந்த கல்வியாண்டில் அவற்றில்படித்தவர்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள், தேர்ச்சிசதவிகிதம், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் இடம்பெற்றவர்களின் புகைப்படங்கள் என்று இவ்விளம்பரங்கள் தம் பெருமையைபறைசாற்றுகின்றன. இதன்மூலம் மூலைமுடுக்கெங்கும் பதியவைக்கப்படும் செய்திஎதுவென்றால் படிப்பென்றாலே மருத்துவமும் பொறியியலும் தான். மற்றவற்றைபடிப்பதும் படிக்காமலிருப்பதும் ஒன்றே. அடுத்து, மதிப்பெண் என்றால் நூற்றுக்கு நூறுஅல்ல ஒன்றிரண்டு குறையலாம். அதில்லாமல் முதல் வகுப்பில் தேர்ச்சிஎன்பதெல்லாம்கூட தோல்விக்குச் சமமானதுதான்.

அரசாங்கப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது என்றிருக்கும் மக்களின்அவநம்பிக்கையையும் வேலைவாய்ப்பு அருகிவரும் இக்காலத்தில் தன்பிள்ளையைபோட்டிக்கு தகுதிப்படுத்தவேண்டும் என்ற பெற்றோரின் பதைப்பையும் மூலதனமாககொண்டுதான் இப்பள்ளிகள் அனைத்துமே துவங்கப்பட்டிருக்கின்றன. தமது சக்திக்கு மீறியகட்டணம்தான் என்றாலும் எப்படியாவது தாங்கிக்கொண்டு பிள்ளையை இங்கு படிக்கவைத்துவிட்டால் டாக்டராகவோ என்ஜினியராகவோ ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்றெண்ணும் நடுத்தர குடும்பங்களும் ஓரளவு வசதி கொண்ட விவசாயக்குடும்பங்களும் தான் இப்பள்ளிகளின் பிரதான இலக்கு. குடும்ப வருமானத்தின் கணிசமானபகுதியை மூலதனம்போல் செலவழிக்கத் துணிந்த பெற்றோர்களால் மாநிலத்தின் பலபாகங்களிலிருந்தும் துள்ளத்துடிக்க பிடுங்கியெடுத்து வந்து சேர்க்கப்படும் மாணவர்களைஇப்படியான பள்ளிகள் மதிப்பெண் பந்தயத்திற்கு எப்படி தயாரிக்கின்றன என்றுபார்ப்போம்.

சொந்த ஊரில் எட்டாம் வகுப்புவரை படிக்கும் தன்பிள்ளையை ஒன்பதாம் வகுப்பிலிருந்துமிகவும் கண்டிப்பானதொரு உறைவிடப்பள்ளியில் படிக்க வைப்பவரே பொறுப்புள்ளபெற்றோராக கருதப்படும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கே மிகவும்கண்டிப்பானது என்பது மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது படிப்பதற்கும் எழுவதுதற்கும்நேரம் காலம் கிடையாது. இரவில் வெகுநேரம் விழித்திருக்கவேண்டும். அதிகாலையில்சீக்கிரத்திலேயே எழுந்து விடவேண்டும். குறைந்தபட்ச நேரமே தூக்கம். குளிப்பதற்கும்தயாராகி சாப்பிடுவதற்கும் போர்முனையிலிருக்கும் ஒரு ராணுவ சிப்பாய்க்குகிடைப்பதைவிடவும் குறைவான நேரமே கொடுக்கப்படும். கனவிலும்கூடவிளையாடக்கூடாது. விளையாட்டாகக் கூட வேறு கனவுகளை கண்டுவிடக்கூடாது.அதெல்லாம் தமது எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வற்ற துக்கிரிகளின் செயல். இங்குபடிப்பு படிப்பு... எந்நேரமும் பாடப்புத்தகங்களை படிப்பது மட்டுமே அவர்களதுதொழில், கனவு எல்லாமே. இதற்கெல்லாம் சரிப்பட்டு பொருந்திவராதமாணவர்களை பழக்கி லாயத்தில் அடைக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் எவ்வளவுகடுமையானதாக இருந்தாலும் அதுகுறித்து புகாரற்று இருப்பதற்கான சம்மதம்பெற்றோர்களிடம் பெறப்படுகிறது. கண்ணுக்குள் வைத்து வளர்த்த தன் பிள்ளையைஎதுவும் செய்துகொள்ளுங்கள் இவ்வளவு மார்க் எடுத்தால் சரி என்று சிறிதும்குற்றவுணர்ச்சியற்று வதைக்கொட்டடியில் அடைத்துவிட்டு வருகின்றனர் பெற்றோர்.

தேர்வுக்காலம் என்றில்லாமல் ஒவ்வொரு நாளுமே ஒரு பொதுத்தேர்வை அல்லது ஒருவேலைக்கான நேர்முகத்தேர்வை சந்திக்கும் மனநிலையோடு கடந்தாக வேண்டும்.விடுமுறைநாட்களும் கூட கூடுதல் வேலைநாட்கள் தான். ஞாயிற்றுக்கிழமைகளில்கைதியைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதைப்போல எல்லாம் உன்நன்மைக்குத் தான், இன்னும் கொஞ்சநாள் பல்லைக் கடித்துக்கொண்டுபொறுத்துக்கொள்.... என்று பிள்ளைகளை பார்த்துப் பேச பெற்றோர்அனுமதிக்கப்படுகின்றனர். தனது படிப்புக்காக வருமானத்தில் பெரும்பகுதியைசெலவழித்திருக்கும் குடும்பத்தின் நிலையை எண்ணி வீட்டுக்கு திரும்பிப் போய்விடமுடியாததாலும் பள்ளிக்குள் நடக்கும் உடல், மனரீதியான வதைக்கு பயந்தும் பிள்ளைகள்பாடங்களை உருப்போடத் தொடங்குகின்றன. கவனம், இங்கு படிப்பு என்பது புரிந்துகற்றுக்கொள்வதல்ல. எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி அதாவது அட்டை டூ அட்டைமனப்பாடம் செய்வதுதான். பள்ளி விடுதியென்ற வித்தியாசமின்றி எங்கும் எந்நேரமும்கண்மண் தெரியாமல் பிரம்பால் விளாசும் ஆசிரியர்கள் காப்பாளர்களிடமிருந்துதப்பிக்கும் வழியறியாது எந்நேரமும் பயவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டவர்களாக மாறிமனனம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர் மாணவர்கள். அப்படியிருந்தும் முட்டிஉடைபடாமல் முதுகுத்தோல் உரியாமல் படித்து வந்த மாணவர்கள் என்று யாரும்கிடையாது.

சரி, இவ்வளவு முஸ்திபுகளோடு நடக்கும் பள்ளிகளில் மாணவர்கள் எவ்வாறுபயிற்றுவிக்கப்படுகிறார்கள்...? இவற்றில் பெரும்பாலானவற்றில் ஒன்பதாம் வகுப்புபாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புபாடங்கள் தொடங்கப்பட்டு விடுகின்றன. இதேபோல், +1 வகுப்பிலேயே +2பாடங்கள் தான். (பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளுக்கு பாடங்களைஉருப்போட்டு தயாராவதுதான் முக்கியமென்று முதல்வகுப்பிலிருந்தே அந்தப் பாடங்களைஇன்னும் நடத்தத் துணியாதது ஆச்சர்யம் தான்.) ஒருவருடத்தில் படித்து எழுதவேண்டியதேர்வுக்கான பாடங்களை இரண்டு வருடங்கள் உருப்போட வைப்பது, தொடர்ந்துஅடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்தி மாணவனின் மனப்பாட நேர்த்தியை மதிப்பீடுசெய்து தேவையான அளவுக்கு நல்வழிப்படுத்துவது, மீண்டும் மனப்பாடம், மீண்டும்மாதிரித்தேர்வு, மீண்டும் மதிப்பீடு.... தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் தலைகீழாய்ஒப்பிக்குமளவுக்கு எல்லோருடைய திறமையும் பழுக்கப் பழுக்க வெளுக்கக் காய்ச்சிகூராக்கப்படுகிறது.

Private School இப்போது பொத்தேர்வு. ஒரே பாடத்தை இரண்டு வருடங்கள் படிக்கும் சாதுர்யமின்றிபோதிய ஆசிரியர்களும் வசதிகளும் அற்ற நிலையில் அந்தந்த வருடத்தின் பாடங்களைஅந்தந்த வருடமே படித்துத் தயாரான விவரங்கெட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்ஒருபக்கமும் தேர்வு எழுதுவதற்கென்றே பயிற்சியளித்து வெறியூட்டி வளர்க்கப்பட்டதொருமிருகம் போன்ற தனியார்பள்ளி மாணவர்கள் மறுபக்கமுமாக நிற்க, தேர்வானது ஒருயுத்தம் போல் நடக்கிறது. எதிர்பார்த்தபடியே அரசுப்பள்ளி மாணவர்களைவிடதனியார் பள்ளி மாணவர்கள் தான் மிகக்கூடுதலான மதிப்பெண்கள பெறுகின்றனர்.இத்தகைய மதிப்பெண் உயர்வானது ஊளைச்சதை போன்றதுதானேயொழிய உண்மையானபலமல்ல. ஒப்பீட்டளவில் அந்தந்த வருடத்தின் பாடத்தை படித்து தேர்வைஎதிர்கொள்ளும் அரசுப்பள்ளியின் மாணவனின் கற்கும் திறன்தான் பாராட்டப்படவேண்டியதாயுள்ளது. அரசுப்பள்ளிகளின் தரம் தான் நமது உண்மையான கல்வியின் நிலை.ஆனால் யாருக்கும் வேண்டப்படாததாகிவிட்டது உண்மை.

ஒருவருட பாடத்தை இரண்டுவருட காலம் உருப்போட்டு தேர்வின் அதிகபட்ச மதிப்பெண்ணை 99, 100%என்று உயர்த்திப் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களை கீழே தள்ளி மேலேறிச் செல்கின்றனர் தனியார் பள்ளிமாணவர்கள். ஆரோக்யமற்ற இந்தப்போட்டியால் அரசுப்பள்ளிகளின் மீதான அவநம்பிக்கை கூடி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைஅடைக்கும் மனோபாவம் ஒரு

நோயைப்போல் பரவிவருகிறது. கல்வியின் பெயரால் நடக்கும் இந்த மோசடியாருக்கும் தெரியாமலில்லை. ஊரறிந்த ரகசியத்தை ஒருவரும் தெரியாதது போல்பாசாங்கு செய்கின்றனர். அல்லது தனது பிள்ளக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைதகவமைத்துக் கொடுக்க இதைவிட்டால் வேறு வழியில்லை என்று சமாதானம்கொள்கின்றனர். இயல்பிலேயே ஒரு மாணவனுக்கு இல்லாத திறமையை செயற்கையாகஏற்றும் கேவலத்தை சாமர்த்தியம் என்று கொண்டாடுகின்றனர்.குறுக்குவழியில் முந்திச் செல்லவேண்டுமென்ற மனப்பயிற்சியை வெகுஇயல்பாக உள்வாங்கும்தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன தனியார் பள்ளிகள்.

சிறுவயதிலிருந்தே ஆசிரியர்களின் வன்முறைக்காளாகி எப்போதும் அஞ்சி வாழுமாறு பழக்கப்படுத்தப்படும்மாணவர்கள் பிற்காலத்தில் சொந்தவாழ்க்கையிலும் சமூகத்தின் அங்கமாகவும் எத்தகையஆளுமைகளை வெளிப்படுத்துவார்கள்? படிப்புக்காலம் முழுவதும் சக மாணவர்கள்உள்ளிட்ட புறவுலகுடனும் தனது அகவுலகுடனும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுபாடப்புத்தகங்களோடு மட்டுமே உழல அனுமதிக்கப்பட்ட அவர்களிடமிருந்து இந்தசமூகம் பெறப்போவது எதை? இளைய தலைமுறையினரில் பெரும்பகுதி இப்படியாகஉள்ளொடுங்கி தனிமைப்பட்டு சுயநலச் சிந்தனைகளால் பீடிக்கப்பட்டுவிடுமானால்சமூகத்தின் கதி என்னவாகும்? படிப்பின் பெயரால் தனது இளமைக்காலம் முழுவதும் கலாச்சார நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கிவக்கப்படும் இளைஞர்களிடமிருந்து கலைஇலக்கிய படைப்புகள் ஏதேனும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறதா? இவர்கள்தான்எதிர்காலச் சமூகம் என்றால் அப்படியொன்று உருவாவதை அனுமதிக்கும் எல்லோருமேகுற்றத்தின் பங்குதாரர்கள்தான்.

இன்னொருபுறம் அரசுப்பள்ளி மாணவர்கள். நிலவும் சூழலால் அதிகம்பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். ஆரோக்யமற்றதொரு போட்டியின் பலிதானமாகஆக்கப்பட்டவர்கள். அரசுப்பள்ளிகளில் படித்து எதற்கு பிரயோஜனம் என்று உலவும்கருத்தை உள்வாங்கிக் கொண்டிருப்பதால் இயல்பிலேயே தாழ்வுணர்ச்சி கொண்டுள்ளனர்.தங்களது கற்கும் திறன் மதிக்கப்படாதது குறித்தும் பொருத்தமற்றவர்களுக்கு கிடைக்கிறஅங்கீகாரத்தாலும் கொள்கிற குமைச்சலால் அவர்களின் கற்கும் ஆர்வம் குறைகிறது.என்ன படித்து என்ன செய்ய... மதிக்கத்தக்க வாய்ப்புகளெல்லாம் தனியார் பள்ளியில்படிப்பவர்களுக்குத்தான் கிடைக்கப்போகிறது என்ற விரக்தியால் அவர்களது கவனம்சிதறுகிறது. அவர்களை ஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையூட்டி படிப்பதில் ஆர்வம்கொள்ளவைக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.

சுயநல படாம் கட்டிக்கொண்டுதிரியுமொரு சமூகத்தில் ஆசிரியர்கள் மட்டும் அர்ப்பணிப்பு உணர்வு, தியாகம், புனிதம்என்றெல்லாம் லட்சியத்திரைகளை சுமக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.எதிர்கால சமூகத்தை உருவாக்குகிறோம் என்ற குறைந்தபட்ச கவனத்தோடுமாணவர்களை கையாளும் வெறும் சம்பளக்காரர்களாக அவர்கள் இருந்தால்கூடபோதுமானது. ஆனால் நிலையோ தலைகீழ். அரசுப்பள்ளிகளில் நிலவும்பொறுப்பின்மையை தட்டிக் கேட்குமளவுக்கு செல்வாக்கற்றவர்களாய் இருக்கும்எளியவர்களின் பிள்ளைகளே இங்கு படிப்பதால் தடுப்பற்று நிலைமை சீரழிந்துவருகிறது.படித்து அதன்வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாதவர்களாக அரசுப்பள்ளிமாணவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

போட்டியிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்களை விலக்கிவைப்பதற்காக தனியார் பள்ளிகள்கடைபிடிக்கும் மலிவான தந்திரங்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும்,அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களை கண்ணியமாகநடத்துமாறு தனியார் பள்ளி நிர்வாகங்களையும் ஆசிரியர்களையும் அறிவுறுத்துவதோடுகண்காணிப்பதற்கான அமைப்புகளை உருவாக்கவும், கல்வி பெறுவதில் மக்களுக்குள்ளஉரிமைகளை பரப்பவும், கல்வியை ஒரு பண்டமாக மாற்றுவதைத் தடுக்கவும் அரசுதலையிடவேண்டும். சுயசிந்தனையும் தன்னம்பிக்கையும் கொண்டதொரு ஆளுமைமிக்கஅறிவார்ந்த சமூகம் உருவாவதை தடுக்கும் இன்றைய கல்விச்சூழலின் அபாயத்தைமுன்னுணரும் கல்வியாளர்களும் சமூக அக்கறையுள்ளவர்களும் இதற்காக செயலாற்றமுன்வர வேண்டியது அவசியம்.

- ஆதவன் தீட்சண்யா([email protected])

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+