Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேது சமுத்திர திட்டம்: 145 ஆண்டு கனவு !!!

Subscribe to Oneindia Tamil

சேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதன் மூலம் தமிழக மக்களின் 145 ஆண்டு கால கனவு நனவாகப்போகிறது.

தமிழன் கால்வாய், சேது சமுத்திரக் கால்வாய் என பல பெயர்களில் அழைக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம், கமாண்டர் டெய்லர் என்றஆங்கிலேயே பொறியாளர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் முதன் முதலில் சேது கால்வாயை அமைக்க வேண்டும் என்றயோசனையை முன் வைத்தவர்.

திட்டம் மேல் திட்டம்:

1860ம் ஆண்டு டெய்லர் இதுதொடர்பான திட்டத்தை அறிவித்தார். அதன் பின்னர் 1861ம் ஆண்டு டவுன்சென்ட் என்ற பொறியாளர் ஒருதிட்டத்தை வெளியிட்டார். பின்னர் 1862ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு ஒரு திட்டத்தை அறிவித்தது. 1863ம் ஆண்டு சர்வில்லியம் டென்னிசன் ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தார்.

பின்னர் 1871ம் ஆண்டு ஸ்டோடர்ட் என்ற அதிகாரி ஒரு திட்டத்தை வெளியிட்டார். நாடாளுமன்றக் குழு கூறிய திட்டத்தை இதுஒத்திருந்தது. 1872ம் ஆண்டு ராபர்ட்சன் என்பவர் ஒரு திட்டத்தை முன் வைத்தார். பின்னர் 1884ம் ஆண்டு சர் ஜான் கோட் என்பவர் ஒருதிட்டத்தை பரிந்துரைத்தார்.

தென்னிந்திய ரயில்வே பொறியாளர்கள் இணைந்து 1903ம் ஆண்டு ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தனர். 1922ம் ஆண்டு சர் ராபர்ட்பிஸ்டோ என்பவர் புதிய திட்டம் ஒன்றைப் பரிந்துரைத்தார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் 5 திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. 1956ம் ஆண்டு முதல் முறையாக சேது சமுத்திரத் திட்டக் குழு ஒருபரிந்துரையை வைத்தது.

பின்னர் 1967ம் ஆண்டு நாகேந்திர சிங் குழு ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தது.

உயிர் கொடுத்த அண்ணா:

இத் திட்டம் குறித்து முதல் முறையாக அறிஞர் அண்ணா தான் நாடாளுமன்றத்தில் பேசினார்.

தனது பேச்சுத் திறமையால் சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியம் குறித்தும், அவசரம் குறித்தும் அண்ணா கூறியது, மத்திய அரசின்காதுகளில் சற்று ஓங்கியே ஒலித்தது. அண்ணாவைத் தொடர்ந்து எம்.பி. கோசல்ராம் சேது சமுத்திரத் திட்டம் குறித்து நாடாளுமன்றதில்பலமுறை பேசியுள்ளார்.

உயிருடன்வைத்த வைகோ:

இப்படி நூறாண்டுகளுக்கும் மேலாக வெறும் திட்டமாக இருந்த சேது சமுத்திரத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரேதமிழக எம்பி வைகோ தான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதைப் பற்றிப் பேசி இத் திட்டத்தை உயிருடன் வைத்திருந்தார்.

இந் நிலையில் 1996ம் ஆண்டு சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழக ஆலோசனை சேவை மையம் ஒரு திட்டத்தை கூறியது. கடைசியாக கடந்த 1998ம்ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு கழகம் (நீரி) ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.

சேது சமுத்திரத் திட்டத்தை மேற்கொள்வதால் சுற்றுச்சூழல் ஆபத்து ஏதும் இல்லை என்று நீரி அமைப்பு பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து இந்தத்திட்டம் தற்போது அமலுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது.

கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது வைகோ தான் இது குறித்து அடிக்கடி மத்திய அரசுக்கு நினைவூட்டி வந்தார்.

இத் திட்டம் தொடர்பாக 1998ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த மதிமுக கூட்டத்தில் பேசிய அப்போதைய பிரதமர்வாஜ்பாய், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என முதல் முறையாக உறுதிமொழி தந்தார்.

திமுகவால் கிடைத்த பலன்:

Dhayanidhi Maran, Karunanidhi and Sonia Gandhi
இந் நிலையில் காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின், இத் திட்டத்தை திமுக கையில் எடுத்தது. திமுக தந்தநெருக்குதல்களினால் தான் இப்போது சேது சமுத்திரத் திட்டத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

டெல்லியில் இருந்தபோது அழகாக காய் நகர்த்தி, இத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெறச் செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் திமுகதலைவர் கருணாநிதி.

இதன் மூலம் இத் திட்டம் நிறைவேற்றப்பட இனி தடையேதும் இல்லை.

சேது சமுத்திரக் கால்வாய் என்றால் என்ன?

சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். இந்தியப் பொருளாதாரத்திற்கும் இது மிகப் பெரும் ஏற்றத்தைக்கொடுக்கும்.

தற்போது அரபிக் கடலில் இருந்து இந்து மகா கடலுக்கும், இந்து மகா கடலில் இருந்து அரபிக் கடலுக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையைசுற்றித்தான் செல்ல வேண்டி இருக்கிறது.

காரணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாக் ஜல சந்தியில், மன்னார் வளைகுடா பகுதியில் ஆழம் குறைவு. இங்கு பெரிய கப்பல்கள்தரைதட்டிவிடும். எனவே, இந்தப் பகுதியில் கடலை ஆழமாக்க வேண்டியுள்ளது. இது தான் சேது சமுத்திரத் திட்டம்.

89 கி.மீ நீளம், 12 மீ ஆழம்:

மொத்தம் 89 கி.மீ தூரத்துக்கு கடல் ஆழப்படுத்தப்படும். அதாவது கடலில் கால்வாய் தோண்டப்படும்.

அதாவது மொத்தம் 8.25 கோடி கன மீட்டர் பரப்புக்கு கால்வாய் தூர் வாரப்படும். தோண்டப்படும்போது வரும் மண், கல், பவளப் பாறைகள்போன்றவை கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் 30 அடி ஆழத்தில் கொட்டப்படும்.

இலங்கை-ராமேஸ்வரம் இடையிலான தொடர் பாறைத் திட்டுக்களால் ஆன ஆதம் பாலத்துக்கு அருகே 35 கி.மீ. நீளத்துக்கும், பாக் ஜலசந்தி பகுதியில் 54கி.மீ. தூரத்துக்கும் சேது சமுத்திரக் கால்வாய் தோண்டப்படும்.

இந்தக் கால்வாய் 300 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். கால்வாயின் ஆழம் 12 மீட்டராக இருக்கும். இரு வழிப் பாதையாக செயல்படும்இந்தக் கால்வாயில் 10 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் (10 மீட்டர் வரை மூழ்கும் பரப்பு கொண்ட) சென்று வர முடியும்.

50,000 டன் கப்பல்கள் செல்லலாம்:

அதாவது 50,000 டன் வரை சரக்கு ஏற்றிய கப்பல்கள் இந்தக் கால்வாயில் சென்று வர முடியும். அதே போல காலியாகச் செல்லும் எவ்வளவு பெரியகப்பலும் இதில் சென்று வரலாம்.

33 மீட்டர் அகலம், 215 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்கள் இக் கால்வாயை பயன்படுத்தலாம்.

சேது கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களைக் கண்காணிக்கவும் வழி நடத்தவும் 4 போக்குவரத்து நிர்வாக நிலையங்கள் அமைக்கப்படும். இதில்ஒன்று ராமேஸ்வரத்திலும், ஒன்று கோடியக்கரையிலும், மேலும் இரண்டு கடலில் கால்வாய்க்கு அருகிலும் அமைக்கப்படும்.

இக் கால்வாயில் ரோந்துப் படகுகள், இழுவைப் படகுகள், நிலைப்படுத்தும் படகுகள் ஆகியவை தயார் நிலையில் இருக்கும்.

இந்தியாவுக்கு லாபம்:

இந்தக் கால்வாயால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் 424 கடல் மைல்அளவுக்குக் குறையும். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 முதல் 30 மணி நேர பயணம் மிச்சமாகும்.

வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையை சுற்றி இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்குப் பதில் நேரடியாக இந்திய கடல் எல்லை வழியாகவே இந்தியத்துறைமுகங்களுக்கு வர முடியும். இதனால் வெளிநாட்டு கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கும், கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரைக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையைசுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இலங்கை அரசுக்கு ஏராளமான தொகையை நுழைவுக் கட்டணமாகவும், வாடகைக் கட்டணமாகவும்செலுத்த வேண்டியுள்ளது. அது இனிமேல் தேவையிருக்காது.

தமிழக தொழில் வளர்ச்சிக்கு உதவும்:

மேலும் அரபிக் கடலில் இருந்து இந்து மகா சமுத்திரம், இந்து மகா சமுத்திரத்தில் இருந்து அரபிக் கடலை அடைய வேண்டிய வெளிநாட்டுக் கப்பல்கள்இலங்கையை சுற்றாமல் இந்தியக் கடல் பகுதி வழியாகவே செல்லும். இதனால் இந்தியத் துறைமுகங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலபலன்கள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகும்.

ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டனம் உள்ளிட்ட சிறு துமுறைக நகரங்கள் பெரும் அபிவிருத்தி அடையும். தூத்துக்குடி துறைமுகம் மிகப் பெரும் துறைமுகமாகமாறும் வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம் துறைமுகமும் வளர்ச்சி பெறும்.

இதனால் தமிழகத்தில் கடல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டனம் ஆகியவற்றில்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

மீன்பிடி தொழிலும் பெரும் வளர்ச்சி காணும். மொத்தத்தில், சேது சமுத்திரத் திட்டத்தால் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின்பொருளாதாரம் மிகவும் ஏற்றமடையும், வர்த்தகம் பெருகும்.

பிரதமருக்கு பாலு நன்றி:

T R Balu with Manmohan Singh
இத் திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த மத்திய கப்பல்போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த கருணாநிதியும் பொன்னாடை போர்த்தி அவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜெ.வுக்கு அழைப்பு உண்டா?:

இந்த சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு கூறி தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் முதல்வர் ஜெயலலிதாஉள்ளிட்டவர்களுக்கு அழைப்பு அனுப்புவார் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா ஜூன் மாதம் 3வது வாரத்தில் நடைபெறலாம். இதில்கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு நேற்றே நேரடியாகஅழைப்பு விடுத்தேன். அவர்களும் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

(அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்பீர்களா என்று கேட்டபோது) இதுதொடர்பாக தூத்துக்குடி துறைமுகப்பொறுப்புக் கழகத் தலைவர், திட்டத்தை அமல்படுத்தப் போகிறவர் என்ற வகையில் முறையாக அழைப்பு அனுப்புவார் என்றார் பாலு.


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+