Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன வெறியர்களா? இடது சாரிகளா?

Subscribe to Oneindia Tamil

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டீகரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 19ஆவது மாநாட்டில் சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி) வின் பிரதிநிதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு கட்சி மட்டுமல்ல. ஜே.வி.பி. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்தியாவிற்கு எதிரான நிலையை எடுத்து வந்திருக்கிறது.

இலங்கையில் நிலவிவரும் சிங்கள-பெளத்தப் பேரினவாதத்தின் கொடுமுடியாய் விளங்கும் கட்சி ஜே.வி.பி. ஆகும். தன்னை ஒரு மார்க்சியக் கட்சியாக அது அறிவித்துக் கொண்டாலும் அது உண்மையில் சிங்கள இனவெறிக் கட்சியாகும்.

இலங்கை அரசியலில் ஆதிக்கம் பெற இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அக்கட்சி இயங்குகிறது.

தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளது.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய லெனினின் கருத்துக்கு எதிர்மாறாக ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் கட்சி ஜே.வி.பி.

1970களில் இந்திய விரிவாக்க எதிர்ப்பைத் தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இன்னம் கொண்டுள்ள கட்சி ஜே.வி.பி.

இலங்கையில் நார்வே முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்குமிடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு எதிராகக் கொடி பிடிக்கிறது ஜே.வி.பி.

சிங்கள வெறிபிடித்த புத்தபிட்சுக்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நச்சுப்பிரச்சாரம் செய்து வருகிறது ஜே.வி.பி. இந்த இனவெறிக் கட்சி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டது கண்டு தமிழகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இக்கட்சியின் தேசியச் செயலாளரான தோழர் டி.ராஜா அவர்கள் இதற்குக் கூறியுள்ள காரணம் தமிழர்களின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.

""ஜே.வி.பி. கட்சியினர் இடதுசாரிக் கொள்கை உடையவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அந்த அடிப்படையில்தான் அவர்கள் கட்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர்.

தில்லியில் தொடங்கிய மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாட்டிலும் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் இந்த மாநாட்டுக்கு அவர்களை அழைத்ததால் அவர்களின் கொள்கையுடன் நாங்கள் முழுமையாக ஒத்துப்போகிறோம் என்று அர்த்தம் அல்ல.

எங்கள் கட்சி மாநாட்டுத் தீர்மானத்தில் கூட இலங்கையில் அமைதிப் பேச்சு வார்த்தை தொடர வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம் என்று கூறினார்.

தோழர் ராஜாவின் வாதம் ஏற்கத் தக்கதன்று. தமிழர்களுக்கு எதிரான பச்சை இனவெறியர்களை இடதுசாரிகளாகக் கருதுவது மார்க்சியத்திற்கே இழுக்குத் தேடித் தருவதாகும். கம்யூனிஸ்டு மாநாட்டுத் தீர்மானத்திற்கு விரோதமான கொள்கை உடையவர்கள் ஜே.வி.பி. கட்சியினர்.

தமிழர் பிரதிநிதிகளுடன் எத்தகைய பேச்சு வார்த்தையும் கூடாது என்றும், கூட்டாட்சி முறையை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்றும் பகிரங்கமாகக் கூறும் ஜே.வி.பி. யுடன் குலாவல் ஏன்? உண்மையான இடதுசாரி ஒருபோதும் இனவெறியராக இருக்க முடியாது.

1946ம் ஆண்டு இந்தியாவின் பல பகுதிகளில் இந்து முஸ்லீம் கலவரங்கள் ஏற்பட்டபோது ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் பி.சி.ஜோஷி அவர்கள் கலவரப் பகுதிகளில் வெள்ளைக் கொடியும், செங்கொடியும் தாங்கி ""இந்துமுஸ்லீம் ஒற்றுமை ஓங்குக என்ற முழக்கத்துடன் ஊர்வலம் செல்லுமாறு ஆணையிட்டார்.

அவ்விதமே கலவரப்பகுதியில் அமைதிப் பயணம் சென்ற கம்யூனிஸ்டு தோழர்களில் பலர் உயிரிழக்க நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் அஞ்சி ஓடவில்லை. மக்களிடையே ஒற்றுமையை நிலை நிறுத்த முயற்சி செய்தார்கள். உண்மையான மார்க்சியவாதியின் இலக்கணம் இதுதான்.

ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள வெறியர்கள் நடத்திய இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவோ அல்லது குறைந்தபட்சம் கண்டிக்கவோ ஜே.வி.பி. முன் வந்தது உண்டா?

மாறாக இனக்கலவரத்தைத் தூண்டி விட்டும், ஆதரித்தும் பேசிய கட்சி ஜே.வி.பி. தோழர் பி.சி.ஜோஷி போன்ற மாபெருந்தலைவர்கள் வழி நடத்திய கட்சியின் மாநாட்டில் இனவெறியர்கள் பங்கேற்பது அத்தலைவர்களுக்கு இழுக்குத் தேடித்தருவதாகும்.

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்குக் காரணமான சிங்களப் பேரினவாதத்திற்கு வரவேற்பா?

இதில் கம்யூனிஸ்டு தலைமைக்குத் தமிழகக் கம்யூனிஸ்டு தோழர்கள் உண்மை நிலவரத்தை விளக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.

இனி இந்தியாவில் உள்ள இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டு விட்ட இடதுசாரிக் கட்சியாகத் தன்னை ஜே.வி.பி. கட்சி பிரகடனம் செய்து கொள்ளத் தயங்காது.

இந்தியாவை ஆளுங்கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கும் கம்யூனிஸ்டுகளின் அங்கீகாரம் இந்திய அரசின் அங்கீகாரத்திற்குச் சமமானதாக ஜே.வி.பி. கட்சி தம்பட்டம் அடித்துக்கொள்ள இடம் ஏற்பட்டு விட்டது.

தமிழர் பிரச்சினையில் அகில இந்தியக் கட்சிகளின் தலைமைகள் அலட்சியம் காட்டுவதும், தமிழர்களின் பகைவர்களுடன் குலாவுவதும் புதிதல்ல. ஆனால் கம்யூனிஸ்டுகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது அளவற்ற வேதனையைத் தருகிறது.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+