எதிரிகளால் இளமையான கருணாநிதி- வைரமுத்து

கருணாநிதியின் கதை, வசனத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள உளியின் ஓசை சரித்திரத் திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.
இயக்குநர் கே.பாலச்சந்தர் தலைமை வகித்தார். முதல் இசை சிடியை முதல்வர் வெளியிட அதை இயக்குநர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.
பின்னர் பாரதிராஜா பேசுகையி்ல்,
திருக்குவளையில் ஆரம்பித்த இந்த உளியின் ஓசை மந்திரி குமாரி' காலத்தில் இருந்து இன்றுவரை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கருணாநிதியின் உளியின் ஓசையில் தமிழ் கொஞ்சி விளையாடும்.
எந்த நேரத்தில் திருக்குவளையில் உளியை எடுத்தாரோ தெரியவில்லை. இன்னும் அதன் முனை மழுங்காமல், கூராகிக்கொண்டே போகிறது. அவரின் உளியின் சத்தத்தில், பாடம் கற்றுக் கொள்கிறவர்கள் நாங்கள்.
இன்னொரு தலை, இவர் மாதிரி கிடைக்காது. தலை என்றால், ஒரே தலைதான். தலைவர் கலைஞர்தான்.
உலகில் எட்டு அதிசயம் உண்டு என்றால், ஒன்பதாவது அதிசயம், கலைஞர்தான். அவர் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் வாழ்வதற்காக பெருமைப்படுகிறோம். அவரை 85 வயதில் அருகில் நின்று பார்த்து விட்டேன். 95வது வயதிலும் பார்க்க வேண்டும். 105வது வயதிலும் பார்க்க வேண்டும். அவர் சூரியன் என்றால், அவரை சுற்றுகிற பூமி நான் என்றார்.
கே.பாலசந்தர்:
கலைஞரை போன்ற சிறந்த அரசியல்வாதி இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. 85 வயதில் திரையுலகின் படைப்பாளியாக இருந்த அதிசயம் உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. இனி, நிகழப்போவதும் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி' என்ற கதையை படமாக்கும் தகுதி இருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்வதற்காக கலைஞர் என்னிடம் கொடுத்தார். எனக்கு சரித்திர கதையை இயக்கும் ஆர்வமும் இல்லை. அனுபவமும் இல்லை என்பதால், விட்டுவிட்டேன்.
சேது சமுத்திர திட்டம் பற்றிய கருணாநிதியின் வேண்டுகோளை, சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவனாக நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
வைரமுத்து:
தமிழ் இன வரலாற்றின் உச்சம் கலைஞர் என்று நான் கூசாமல் சொல்வேன். அவருக்கு முதுமையே வராது. எதிரிகள் அவரை இளமையாகவே வைத்து இருப்பார்கள்.
பொது வாழ்க்கையில் 15 வருடங்களுக்கு மேல் இருப்பது சுலபம் அல்ல. எழுத்துத் துறையில் 25 வருடங்களுக்கு மேல் இருப்பதும் சுலபம் அல்ல.
ஒன்று, காலம் அவர்களை விட்டு ஓடிப் போய்விடும். அல்லது காலத்தை விட்டு அவர்கள் ஓடிப் போய் விடுவார்கள். கருணாநிதி பேனாவை எடுத்து 75 வருடங்கள் ஆகிறது. காலத்தையும், தன்னையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது, கலைஞர் மட்டும்தான்.
அவர் அரசியலை சுமக்கிறார். கட்சியை சுமக்கிறார். குடும்பத்தை சுமக்கிறார். தோழமை கட்சிகளையும் சேர்த்து சுமக்கிறார். அவருக்கு இருப்பது ஒரு தோளா, இல்லை இரண்டு தோள்களா? என்றார்.
முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
நான் இந்த விழாவுக்கு வந்திருப்பதை வைத்து, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்தக் கருணாநிதி ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவுக்குப் போய் உட்கார்ந்து கொண்டானே என சிலர் கேட்பார்கள்.
ஒருவேளை நான் வராமல் போயிருந்தால், இந்தக் கருணாநிதிக்கு என்ன ஆணவம் பாருங்கள், தான் வளர்ந்த சினிமாத் துறையை மறந்துவிட்டானே என்று சிலர் குறை சொல்லக்கூடும்... என்ன செய்வது, நான் மனிதன். இரண்டு கால்கள் கொண்ட மனிதன். எனவே ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
இதில் ஆறு எது, சேறு எது என்று கூறி யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.
தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய எனக்கு அரசியும் தேவைப்படுகிறது, திரைத் துறையும் தேவைப்படுகிறது. தமிழர்களை வாழ வைக்க, தலைநிமிர வைக்க உதவும் கரங்கள் எங்கிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்குத் தயக்கமிருந்ததில்லை.
எனக்கு என்றைக்குமே பழிவாங்கும் உணர்ச்சி இருந்ததில்லை. அதிகாரம் என்ற சாட்டை நம் கையிலிருக்கிறதே என்பதற்காக நான் யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. அப்படி ஒரு ஆணவம் என் தலைக்குப் போகாதபடிக்குத்தான் நான் இருந்து வருகிறேன்.
எனக்கு யாரும் விரோதியல்ல... இன்று விரோதியாக இருப்பவர்கள் நாளை நண்பர்கள் ஆவது இந்த உலகில் சகஜம் என்பதாலேயே நான் யாரையும் விரோதியாகப் பார்ப்பதில்லை. அதைத்தான் மறப்போம் மன்னிப்போம் என்று இரண்டே வார்த்தைகளில் எனக்கு எனது ஆசான் அறிஞர் அண்ணா கற்றுத் தந்திருக்கிறார்.
நான் வாழும் நாள் வரை அகம்பாவம், விரோத மனப்பான்மை போன்றவை என் தலைக்குள் ஏறவே கூடாது என ஆண்டவனை.. அப்படி ஒருவன் இருப்பதாக நீங்கள் நம்புவதால்... பிராத்திக்கிறேன் என்றார்.
ஏவி.எம் ரூ.10 லட்சம்:
விழாவில், பட அதிபர் ஏவி.எம்.சரவணனும், அவருடைய மகன் எம்.எஸ்.குகனும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினர்.












Click it and Unblock the Notifications