வர்த்தக நிறுவனங்களாக மாறும் குடும்பங்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வேதனை

12வது உலக சைவப் பேரவை மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது.
மாநாட்டு நிறைவு விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் திருப்பனந்தாள் ஆதீனம் பேசுகையில், 'தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல. எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம்.
அதற்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும். அப்போதுதான் நாடு வளம் பெறும்' என்றார்.
இலங்கை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பேசுகையில், 'யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்த ஆறுமுகநாவலரால் சிதம்பரத்தில் பாடசாலை மற்றும் அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது.
இங்கு யாழ்ப்பாண மடத்துக்கு நிறைய நிலங்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இலங்கையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். தற்போது அமைதி ஏற்பட்டு சமாதான சூழல் உருவாகியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மற்றும் சைவ சமயத்தை கைவிட்டு விடமாட்டோம். இன்றும் இலங்கையில் தமிழர் இல்லங்களில் தேவாரம், திருவாசகம் மற்றும் திருமுறைகளை ஓதி வழிபட்டு வருகிறோம்.
இலங்கையில் 4 மதங்கள் உள்ளன. இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு கட்டமைப்பு உள்ளது. இந்து மதத்துக்கு கட்டமைப்பு கிடையாது. கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இங்குள்ள சைவ ஆதீனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலிருந்து வரும் நாளிதழ் மற்றும் வானொலி செய்திகளில் சன்னியாசிகளை கார்ட்டூன் மூலமாகவும், பேச்சு மூலமாக கேலியாக சித்தரித்து வருவதால் இலங்கையில் உள்ள இந்து மதகுருமார்களை கேலி செய்யும் குழப்பநிலை உருவாகியுள்ளது.
வானொலி மூலம் திருமுறைகள் தவறாக பாடப்படுகின்றன. இதனை இங்குள்ள ஆதீனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
இலங்கையில் உள்ள மதத் தலைவர்களுக்கு ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இலங்கையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் 8 பாடங்களில் ஒரு பாடம் சமயப்பாடம் ஆகும். தமிழகத்திலும் அந்த நிலை வர வேண்டும்' என்றார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், 'சைவம் சமயம் மட்டுமல்ல, தத்துவம் மட்டுமல்ல, அது வாழ்க்கை முறை. அனைத்து வல்லமைகளும் கொண்டது.
இன்றைய அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்து உலகளவில் விடை சொல்லிக் கொண்டு வருகிறது சைவ சமயம். சட்டத்தின் வழியாக ஏற்படுத்த முடியாத மனமாற்றத்தை சைவத்தின் வழியாக ஏற்படுத்த முடியும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.
சமயங்கள் மானுடத்தை நெறிபடுத்துகின்றன. தற்போது சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாததால் இல்லங்களில் தங்கவைத்து நடைபெறும் விருந்தோம்பல் நின்று விட்டது. குடும்பங்கள் வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.
இதனால் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பெருகிவிட்டன. குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் இல்லை, ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்றார்.












Click it and Unblock the Notifications