இசை துறையில் சிறந்த பணி: உமையாள்புரம் சிவராமன்- பத்மா சுப்பிரமணியத்துக்கு சங்கீத நாடக அகடமி விருது
சென்னை: சங்கீத நாடக அகடமி சார்பில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் கே.சிவராமன், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்பட இசை, நாட்டிய, நாடகத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கலைஞர்களை கவரவித்தார்
இசை, நாட்டியம், நாடகம், நாட்டுப்புறம், பழங்குடியின இசை, பாவைக்கூத்து ஆகிய கலைகளின் வளர்ச்சிக்காக, டெல்லியில் உள்ள சங்கீத நாடக அகடமி பணியாற்றி வருகிறது. இத்துறைகளில் சிறந்து பணியாற்றும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சங்கீத நாடக அகடமியின் மிக உயர்ந்த விருதான அகடமி ரத்னா விருதுக்கு, தமிழகத்தை சேர்ந்த மிருதங்க வித்துவான் உமையாள்புரம் கே.சிவராமன், பரதநாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் உள்பட 11 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்த விருதை பெறும் கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ், சால்வை ஆகியவை வழங்கப்பட்டு கவரவிக்கப்படும்.
அதேபோல சங்கீத நாடக அகடமி புரஷ்கார் விருதிற்கு, தமிழகத்தை சேர்ந்த நடனக்கலைஞர் நர்த்தகி நடராஜ், நாதஸ்வர வித்வான் சேஷம்பட்டி சிவலிங்கம், நாடகத்துறையில் பழம்பெரும் நடிகர் ஏ.ஆர்.சீனிவாசன் உள்பட 36 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்த விருதை பெறும் கலைஞர்களுக்கு, ரூ.ஒரு லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ், சால்வை ஆகியவை வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications