For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருக்குறள் போட்டி: பதிமூன்று வயது சீதா 320, பஞ்சு அருணாசலம் மகள் கீதா 500!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்). அமெரிக்கத் தமிழர்கள் நடத்திய திருக்குறள் போட்டியில் 13 வயது சீதா 320 குறள்கள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார்.

பெரியவர்களுக்கான போட்டியில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் கதை, திரைக்கதை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் மகள் கீதா 500 குறள்களை முழு விளக்கத்துடன் கூறி சாதனை படைத்துள்ளார்.

டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்ட போட்டி பிப்ரவரி 9, சனிக்கிழமை நடைபெற்றது.

மொத்தம் 5463 தடவைகள், தொடர்ந்து ஐந்து மணி நேரம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குரலில் திருக்குறள் ஒலித்தது. குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி உட்பட, 5000 டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது

முதல் பரிசு பெற்ற சீதா

முதல் பரிசு பெற்ற சீதா

அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறும் இந்த போட்டியில், 2 வயது முதல் 16 வயது நிரம்பிய அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்த 200 தமிழ்க் குழந்தைகள் பங்கேற்றனர். இரண்டு வயது சிறுமி இரண்டு திருக்குறள் சொல்லி அனைவரையும் திக்குமுக்காடச் செய்து விட்டார்.

நான்கு வயதுக்குட்பட்ட மழலை பிரிவில் 60 குறள்கள் ஒப்புவித்த அபிராமி முதல் பரிசு பெற்றார். சஹானா, இலக்கியன், ப்ரானேஷ் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசை பெற்றார்கள்.

ஐந்து முதல் ஏழு வயதுக்குட்பட்ட முதல் நிலை பிரிவில் விதுலா 100 குறள்களுடன் முதல் பரிசை வென்றார். ஷ்ராவன், அஜய், ஷன்மதி ஆகியோர் இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசை வென்றார்கள்.

8 முதல் 11 வயதிற்கான இரண்டாம் நிலையின் முதல் பரிசு 160 குறள்கள் சொல்லிய அனுஸ்ரீக்கு கிடைத்தது. மிதுன், நந்தினி மற்றும் கிறிஸ்டோபர் இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசை வென்றனர்.

320 குறள்கள்

320 குறள்கள்

பன்னிரன்டு முதல் பதினைந்து வயதுகுட்பட்ட முதல் நிலை பிரிவில் வர்ஷினி, தர்ஷினி இரட்டை சகோதரிகளுக்கு இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ப்ரனாவ் க்கு சிறப்புப் பரிசும் கிடைத்தன.

320 குறள்களை தெள்ளத் தெளிய தமிழில், சொந்தமாக எளிய வார்த்தைகளுடன் விளக்கங்களையும் கூறிய சீதா முதல் பரிசை தட்டிச் சென்றார் கடந்த ஆண்டு இரண்டாம் நிலையில் முதல் பரிசு பெற்றவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சு அருணாசலம் மகள் கீதா

பஞ்சு அருணாசலம் மகள் கீதா

முதல் முறையாக பதினாறு முதல் இருபத்தைந்து வயது வாலிபர்களுக்கான பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டது. அதில் செஞ்சுரா முதல் பரிசை வென்றார்.

புதிதாக, 26 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான பிரிவிற்கும் போட்டி நடைபெற்றது. அலுவலக மற்றும் குடும்பப் பணிகளின் சிரமத்தையும் கடந்து, ஒன்பது பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பழநிசாமி, லதா மற்றும் ஜெய்சங்கர் இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசுகளை வென்றனர்.

தொடர்ச்சியாக, மூன்றரை மணி நேரம் 500 திருக்குறள்களை, விளக்கத்துடன் கூறிய கீதா முதல் பரிசை வென்றார். சென்ற ஆண்டு இவருடைய மகளும், பஞ்சு அருணாசலத்தின் பேத்தியும், கவியரசு கண்ணதாசனின் கொள்ளுப் பேத்தியுமான நிவேதா 200 குறள்களுடன் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 'மகள்' கலந்து கொள்ளவில்லை என்பதால் 'தாய்' களத்தில் இறங்கி, மகளுக்காக வெற்றியை தக்க வைத்துக் கொண்டார் போலும்.

திருக்குறள் பேச்சுப்போட்டி

திருக்குறள் பேச்சுப்போட்டி

முன்னதாக திருக்குறள் போட்டியின் ஒரு பகுதியாக, திருக்குறள் பேச்சுப்போட்டி முதன் முறையாக டல்லாஸில் நடைபெற்றது. முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். 320 குறள்கள் சொன்ன சீதா, பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசை வென்றார். இரண்டாம் நிலையில் நந்தினியும் முதல் நிலையில் ஸ்ரேயாவும் பேச்சுப்போட்டியில் வென்றனர். காவ்யா, விதுலா, நித்யா இரண்டாம் பரிசுகளையும், ஷன்மதி, அனுஸ்ரீ, சிவாத்மிகா, அர்ஜீன் மூன்றாம் பரிசுகளையும், நவ்யா, வர்ஷினி சிறப்புப் பரிசுகளையும் பெற்றார்கள்.

அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழில் மேடையில் பேசும் அளவுக்கு புலமை பெற்றுள்ளார்கள் என்பது பாராட்டுதற்குரிய விஷயமாகும். அடுத்த ஆண்டு குழந்தைகளுக்கான கவிதைப் போட்டியும் நடந்தால் ஆச்சரியமில்லை.

'தமிழ் இனி’ மணி ராம்

'தமிழ் இனி’ மணி ராம்

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா திருவள்ளுவர் விழாவாக சிறப்பு பெற்றது. பாலதத்தா, கொங்கு, வித்யா விகாஸ், கோப்பல் மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் நாடகங்கள நடைபெற்றன. ஒரு நாடகத்தில் திருக்குறளை அதிபர் ஒபாமா பின்பற்றி நடப்பது போலவும் காட்சியமைக்கப்பட்டிருந்தது. மார்ட்டின் லூதர் கிங் அகிம்சையை மகாத்மா காந்தியிடம் கற்றுக் கொண்வர் என்ற வகையில், அதிபர் ஒபாமா திருக்குறளை ஆங்கில வடிவத்தில் படித்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த காட்சி அமைத்து விட்டார்கள் போலிருக்கிறது!

தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல்,வீட்டிலும் பெற்றோர்கள் குழந்தைகள் தமிழில் பேச வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற 'தமிழ் இனி' குறும்படம் திரையிடப்பட்டது. படத்தை நடித்து இயக்கிய மணி ராம், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மகனைத் தமிழ் பேச வைக்க செய்த டெக்னிக்!

மகனைத் தமிழ் பேச வைக்க செய்த டெக்னிக்!

அவர் பேசுகையில் ‘வீடுகளிலும், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும், ஏனைய தமிழ் நிகழ்ச்சிகளிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசும் போது நமது குழந்தைகள் தமிழ் பேசுவதில்லையே என்று மனதில் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடு தான் ‘தமிழ் இனி' திரைப்படம் என்றார். மேலும் கூறுகையில், ‘ஐந்து வயது வரை நன்றாக தமிழ் பேசிய எனது மகன், பள்ளிக்கு சென்ற பிறகு பேசுவதை நிறுத்திவிட்டான். நாம் பேசுவது நன்றாக புரிந்தாலும், பதில் சொல்வதற்கு தெரிந்தாலும், ஒரு வித தயக்கம் ஏற்பட்டதை கவனித்தேன்.

நானும் எனது மனைவியும், அவன் தமிழில் பேசினால் தான் பதில் சொல்வது என்று முடிவு செய்து செயல்பட்டோம். பலன் கிட்டியது. அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக, படத்திலும் எனது மகனாக அவனையே நடிக்க வைத்து விட்டேன்' என்றார். தயவு செய்து குழந்தைகளுடன் வீட்டில் தமிழில் பேசுங்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

தமிழில் பேச குழந்தைகள் உறுதி மொழி

தமிழில் பேச குழந்தைகள் உறுதி மொழி

'தமிழ் இனி' என்பதை ஒரு இயக்கமாக தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்டார் மணி ராம். டல்லாஸ் குழந்தைகளின் தமிழ் ஆர்வம் குறித்து பெருமிதம் அடைந்து, அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். 'தமிழைக் காப்போம், எனக்குத் தமிழ் பிடிக்கும், தமிழ் எனது தாய்மொழி, நான் தமிழ் பேசுவேன்' என பல்வேறு விதமாக குழந்தைகள் தமிழில் அவரிடம் பேசி உறுதிமொழி போல் எடுத்துக் கொண்டனர்.

600 பேர் கலந்து கொண்ட விழா

600 பேர் கலந்து கொண்ட விழா

காலையில் திருக்குறள் போட்டி , இர்விங் டி.எஃப்.டபுள்யூ இந்துகோவில் வித்யா விகாஸ் பள்ளி அரங்குகளில் நடைபெற்றது. மாலை கார்லெண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடந்த விழாவில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அனைத்து குழந்தைகளும் டாலர் வைக்கப்பட்டுள்ள பரிசுக் கவர்களை, பெற்று செல்லும் போது பெற்றோர்கள் முகத்தில் பெருமிதம் காணப்பட்டது.

போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வேலு, விசாலாட்சி, வெங்கடேசன், டாக்டர் ராஜ், டாக்டர் தீபா, பழநிசாமி, முத்தையா, ஜெய்சங்கர், பாஸ்கர், லோகேஷ், மகாலட்சுமி உள்ளிட்டோர் தலைமையில் பல்வேறு குழுக்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். பழநிசாமி வரவேற்றார். விசாலாட்சி நன்றி கூறினார். நிகழ்ச்சியை அன்னபூரணி தொகுத்து வழங்கினார்.

English summary
Producer Panju Arunachalam's daughter Geetha gets first prize in Dallas based Tamil organisation's Thirukkural Contest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X