நான் ஊருக்குத்தான் சின்னம்மா உங்களுக்கு இல்லை - ஜல்லிக்கட்டு (2)
எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது பாகம் 2.
- லதா சரவணன்
நீங்களும் கிளம்பணுமா? வள்ளி வீரய்யனைப் பார்த்து கேட்ட கேள்வியில் ஏக்கத்தின் சாயல் இருந்தது?
பின்னே நான் போகலைன்னா என்னாகுறது வள்ளி. எனக்கும் உன்னை எப்போதும் பார்த்துகிட்டே இருக்கணும் போலத்தான் தோணுது. என்ன செய்ய வேலைன்னு ஒண்ணு இருக்கே. உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா ? யாரும் அறியாமல் வீரய்யனும் வள்ளியும் கண்களாலேயேப் பேசிவிட்டு நகர்ந்தார்கள். வேலையின் பொருட்டு கிளம்பினாலும் வீரய்யனின் மனம் வள்ளியை நினைத்து துடித்தது. எத்தனை அழகு,,,, எப்போது பார்த்தாலும் சிறுதுளி சோர்வு இல்லாமல் அவள் நிற்பதும், நடப்பதும், பாந்தமாய் மஞ்சள் பூசிய முகத்தோடு, நெற்றியில் அகலமாய் வைத்த குங்குமத்தோடு என்னை வழியனுப்புகிறாள். இதைவிடவும் ஒரு காதலனுக்கு என்ன வேண்டும். அகமும் மனமும் நிறைந்து போக வீரய்யன் வேலைக்குக். கிளம்பினான்.

என்னோட பேசமாட்டீங்களா ? ரோஜாவின் குரல். எதிர்பார்த்தபடியே சற்றுத் தள்ளிவந்ததும் பேச ஆரம்பித்துவிட்டாளே, ஒரு விநாடி மெளனத்திற்குப்பிறகு சொல்லுங்க சின்னம்மா என்றான்.
நான் ஊருக்குத்தான் சின்னம்மா உங்களுக்கு இல்லை....என்றாள் உஷ்ணமாய்....உங்க முடிவுதான் என்ன ?
ரோஜா நீ சின்னப்பொண்ணு, இது அலைபாயற வயசுதான். ஆனா அதுக்கு ஒரு தராதரம் வேண்டாமா, நம்ம இரண்டு பேருக்கும் எப்பவும் ஒட்டாது. பேசாமல் நல்லா படி அப்பா பாக்குறே நல்ல பையனை கல்யாணம் செய்துக்குகோ, என்னதான் நான் உங்க ஜாதியைச் சேர்ந்தவனாய் இருந்தாலும், நமக்குள்ள ஏழை பணக்காரன்ங்கிற பிரச்சனை இருக்கு, இது சினிமா இல்லை ரைடக்டர் சொன்னதும் கதாநாயகியின் அப்பாக்கு மனசு மாற ?! வாழ்க்கை சின்னப்பிள்ளையோட மனசைக்கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம்.
என்னால முடியலை பாண்டி உங்களை மறக்கிறதுக்கு. நீங்க அப்பாவுடைய சுபாவத்தைப் பற்றி தெரியாம சொல்றிங்க, அவரு ரொம்ப தங்கமானவரு, நான் சொன்ன எதையும் தட்டமாட்டாரு. அப்பாவிடம் சம்மதம் வாங்குவது என் பிரச்சனை, உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாம... இப்பவாவது சரின்னு சொல்லுங்களேன்.

ரோஜாவைப் பார்த்துப் புன்னகைத்தான். இப்பத்தான் எனக்கு பயம் அதிகமாகுது ரோஜா,
வாழ்வோ சாவோ அது உங்க கூடதான் பாண்டி, நான் உங்களை விட்டுத் தருவதா இல்லை, உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்லிடுங்க நான் செத்துப்போயிடறேன், அதுக்காக தட்டிக்கழிக்காதீங்க. நீங்க சரின்னு சொன்னாப் போதும், நான் இப்பவே உங்க கூட வந்திடறேன்.
ச்சீ இது தப்பு ரோஜா....எப்படி வேண்டுமானாலும் வாழலான்னு நினைக்கிறது வாழ்க்கை இல்லை. எனக்கும் உன்மேல அன்பு இருக்கு, நம்பிக்கைத் துரோகின்னு என்னை நினைச்சிடுவாங்களோன்னு பயமாகவும் இருக்கு. நானே உங்க அப்பாகிட்டே பேசறேன் அவர் ஒப்புக்கொள்ளும் வரையில் காத்திருப்போம் எத்தனை பிரச்சை சிக்கல்கள் வந்தாலும் எதிர்த்துப் போராடுவோம். ஓடிப்போவது மட்டும் வேண்டாம். யாருடைய அழுகைக்கும் கோபத்துக்கும் மத்தியில் நம்ம காதல் வளரவேண்டாம். உயிர் போனால் அது உனக்காக போகும் பாண்டியின் உணர்ச்சி வசமான பேச்சு ரோஜாவைச் சந்தோஷத்திற்குள்ளாக்கியது. இவர்களுக்குள் நடந்த சம்பாஷனைகள் அனைத்தும் வீரய்யன் கவனித்துக்கொண்டே வந்தான் அவன் பார்ப்பதையும் கவனிப்பதையும் இவர்கள் இருவரும் உணரும் மனநிலையில் இல்லை. காதல் கண்கட்டு வித்தையாயிற்றே,

அன்றிரவு கொல்லைப்புறத்தில் கிணற்றடியின் மேல் அமர்ந்துகொண்டு ரோஜாவின் அறை ஜன்னலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் பாண்டி. அவர்களின் மெளன சம்பாஷணைகளை நமுட்டுச் சிரிப்போடு பார்த்தபடியே வள்ளியிடம் சொல்லிக்கொண்டு இருந்தான் வீரய்யன். நிஜமாவா சொல்றீங்க ரோஜாம்மா, பாண்டியை விரும்புது. அதிசயமா இருக்கே ?! வள்ளியின் முகத்தில் விரிந்த ஆச்சரியத்தோடு அவள் முகத்தில் வீசிய மந்தகாச உணர்வையும் ரசித்தபடியே தலையசைத்த வீரய்யன். நம்மோட மனசு ஒன்றிப்போனா மாதிரி அவங்க மனசும் ஒன்றிப்போச்சு....!
அது சரி நாம இரண்டுபேரும் ஒரே இனம் அவுக அப்படியா ? பெரியய்யாவுக்கு தெரிஞ்சா ?
பிரச்சனை வரும்தான். எது எப்படி போனாலும் அவங்க அன்பிலே களங்கம் இருக்கிறாப்போல எனக்குத் தோணலை, நான் முடிவு பண்ணிட்டேன் அவங்க காதலுக்கு உதவி செய்யறதா நீ என்ன சொல்றே ?
ம்.... செய்யுங்க. அப்படியே நம்ம விஷயத்தையும் மறந்திடாதீங்க. இன்னும் இரண்டு நாளில் தை பிறக்கப்போகுது. ஜல்லிக்கட்டு இருக்கு அது முடிந்ததும் நம்முடைய......

நம்முடைய...
போங்க வெட்கமாயிருக்கு.... வள்ளியின் வெட்கத்தை ரசித்தபடியே தன் இருப்பிடத்திற்கு நகர்ந்தான் வீரய்யன்.
(தொடரும்)
(ஜல்லிக்கட்டு... (1)... பொங்கல் சிறப்பு தொடர் கதை!)












Click it and Unblock the Notifications