ழகரம் பழகு!
தமிழின் "ழகரம்" தனியழகு!
தமிழா, அதை நீ தினம் பழகு!
அழகில் ழகரம் இருப்பதனால்
அச்சொல் அழகாய் ஒலிக்கிறது!
அழகின் ழகரம் தவறானால்
"அய்யோ!" என மனம் சலிக்கிறது...
நற்றமிழ் பயில்வோர் நாப்பழக்கம்
நம்மவர் இனத்தை அளக்கிறது!
கற்றதைச் சரியாய் உச்சரிக்கும்
கலைதான் தமிழை வளர்க்கிறது!
குழலிலும் யாழிலும் ழகரங்கள்
கொஞ்சிடும் இசையைக் கொடுக்குது பார்!
உழவிலும் மழையிலும் ழகரம்தான்
ஓசையின் அழகை விதைக்குது பார்!
அமிழ்தும் தமிழும் நிகரென்று
ஆன்றோர் சொல்வதை எண்ணிப்பார்!
தமிழில் ழகரம் தவறிவிட்டால்
தரணியில் யார் உனை மன்னிப்பார்?
வாழையும் பழமும் ழகரத்தால்
வழங்கும் சுவைதனை யார் மறுப்பார்?
தாழையின் பெயரில் ழகர ஒலி
தாணீத்திடும் நறுமணம் யார் மறப்பார்?
தொழுகையைச் சொல்லும் போதினிலே
தூய்மையை ழகரம் தருகுது பார்!
முழுமையின் ழகர ஓசையிலே
முத்தமிழ் மணமே பெருகுது பார்!
தரணியின் மொழிகள் எவற்றுள்ளும்
தமிழ்போல் ழகர எழுத்தில்லை.
உரமுறு தமிழா, இதை உணர்வாய்!
உன்னினும் சிறந்தோர் எவருமில்லை!
மொழியும் விழியும் ழகரமின்றி
முழுமை பெற்ழுறிட முடியாது.
மொழியில் "ழகரம்" வலுவடைந்தால்
மூத்த தமிழ்க்குடி மடியாது...!
- தொ. சூசைமிக்கேல்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications