2026ல் AI எப்படி இருக்கும்.. அதை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும்! தெளிவாக விளக்கிய ஆனந்த் மஹிந்திரா
மும்பை: சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் சொல்லும் கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகும். அப்படித் தான் அவர் இப்போது ஏஐ தொடர்பாகவும் அதை நாம் எப்படிச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
இந்தக் காலத்தில் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ மூலம் நமக்கு மிகப் பெரிய நன்மைகள் நடந்தாலும் கூட பலரும் ஏஐ மூலம் ஆபத்துகளும் ஏற்படும் என அஞ்சுகிறார்கள். இதனால் உலகெங்கும் பெருங்குழப்பம் ஏற்படலாம் என்பதே அவர்களின் அச்சம். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு தொடர்பாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா
ஏஐ டூல்களை ஒரு அச்சுறுத்தலாகக் கருதாமல்.. அதை ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார். இது ஒருவரது திறனை மேம்படுத்துவதுடன், சர்வதேச அளவில் திறமையானவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதிலும் உதவும் எனக் குறிப்பிட்டார்.
புத்தாண்டு வாழ்த்து சொல்லி அவர் வெளியிட்டுள்ள உரையில், "செயற்கை நுண்ணறிவு தொழில்துறைகளை மொத்தமாக மாற்ற ஆரம்பித்துவிட்டது. இந்த மாற்றத்தின் போது, ஏகப்பட்ட இடையூறுகள் ஏற்படும் எனப் பலரும் அஞ்சுகின்றனர். ஆனால், இதில் உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவு என்பது நமக்கு கிடைத்துள்ள ஒரு புதிய சக்தி.. அது யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல.
ஏஐ தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நமது வேலை முறையை மாற்றி அமைக்கும். டிஜிட்டல் திறன்களுடன் நாம் செய்யும் வேலைகளின் மதிப்பை ஏஐ அதிகரிக்கும். இந்த தொழில்நுட்பத்தால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் நிலையில், அது பாரம்பரிய வேலைகளை மேம்படுத்தும். இதன் மூலம் புளு காலார் மற்றும் ஒயிட் காலர் பணிகளுக்கு இடையேயான இடைவெளி குறையும். இதன் மூலம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடித்து, உருவாக்கவும், வடிவமைக்கவும் முடியும்.. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே திறமையுடன் இருப்பவர்களுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும். இகு வேலை செய்யும் செட் அப்பையே மாற்றி அமைக்கும்" என்றார்.
சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு சந்தை மாறி வருகிறது. பல மேற்கத்திய நாடுகளில் விசா கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் திறமைமிக்க வெளிநாட்டினருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைப்பதுமே கூட சவாலானதாக மாறியுள்ளது. இதைக் குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா, இந்த நேரத்தில் ஏஐ வந்துள்ளது முக்கியமானது என்றும் இது திறமைசாலிகள் இந்தியாவிலிருந்து வெளியேறும் போக்கை மாற்றக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகள்
அவர் மேலும், "மேற்கத்திய நாடுகளில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. விசா விதிமுறைகளைக் கடுமையாக்குகின்றன. இந்த நேரத்தில் ஏஐ வந்துள்ளது உண்மையாகவே நமக்கு லாபத்தையே கொடுக்கும். சர்வதேச பொருளாதார மையமாக இந்தியா இந்த நேரத்தில் மாற சரியான வாய்ப்பு அமைந்துள்ளது. அதை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை ஆதரிக்க நாம் ஒரு சரியான கட்டமைப்பை வழங்க வேண்டும்.
மாற்றம் தேவை
மேலும், இந்த மாற்றங்களைச் சாதகமாக்க, இந்திய உயர்கல்வி அமைப்பை வலுப்படுத்துவது அவசியம். உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்குவது, AIஐ மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்குத் திறமையானவர்களைத் தயார்ப்படுத்துவதற்கு முக்கியம். இப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையை நாம் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தவும், புதிய வளர்ச்சிப் பாதைகளை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும்" என்றார்












Click it and Unblock the Notifications