ஏஐ தான் எதிர்காலம்.. தமிழக அரசின் பட்ஜெட்டில் சூப்பர் திட்டம்.. கல்லூரி மாணவர்கள் அறிய வேண்டியவை
சென்னை: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) உள்ளிட்ட நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களுடனான நோக்கம் சார்ந்த கூட்டாண்மைகளையும், உலகத் தரத்திலான நவீன பயிற்சி உள்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, 2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளித்து, உலகத் தரத்திலான, ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க நமது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
நிதியமைச்சர் மரியா வில்சன் பட்ஜெட் உரையில், "வேகமாக மாறிவரும் உலளாவிய மற்றும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை ஆய்வு அடிப்படையில், எதிகாலத் தலைமுறையினருக்கான, திறன் சார்ந்த, முழுமையான கல்வியாக மாற்றியமைப்பது காலத்தின் கட்டாயமாகும். இத்துடன், பகுத்தறிவுச் சிந்தனை, படைப்பாற்றல், நிதிசார் அறிவு, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கணிப்பொறித் திறன், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் உலகளாவிய குடியுரிமைப் பண்பு (Global Citizenship) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு அடிப்படை மற்றும் முற்போக்கான பாடத்திட்டம், எதிர்காலத்திற்கு ஏற்ற தலைமுறையினரை உருவாக்க அவசியமாகிறது.

தமிழ்நாட்டை கற்றல் வெளிப்பாடுகளில் முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தை மறுசீரமைக்க இந்த அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள், உலகளவில் உருவாகி வரும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதை சாத்தியமாக்கும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் (AI and ML) என்ற புதிய தொழிற்பிரிவு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
இத்தொழிற்பிரிவு, ஆண்டுக்கு 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் வீதம், 5 ஆண்டுகளில் மொத்தம் 50 தொழிற்பயிற்சி நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், ஐந்தாண்டுகளில் 24,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகை செய்யப்படும். மேலும், 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் 90 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் நிறுவப்படும். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிநவீன திறன்களைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்களை வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாக உருவாக்குவதுடன், அவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தையும் வளர்க்கும் நோக்கில், இந்த அரசு 'வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தை' அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் தொழிற்துறை தேவைக்கேற்ப திறன் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்குப் பணியிடப் பயிற்சி வழங்கப்படும். இப்பணியிடப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கும் தொழிற்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவை எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்கும் உந்துசக்தியாகக் கருதி, இந்த டிஜிட்டல் மாற்றத்தில், தமிழ்நாட்டை முன்னணியில் நிலைநிறுத்திட நமது அரசு உறுதிபூண்டுள்ளது. இத்தொழில்நுட்பப் புரட்சியின் முதன்மைப் பயனாளியாக நமது இளைஞர்கள் திகழ்வதை உறுதிசெய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சித் திட்டம் (AI Industry Development Program) தொடங்கப்படும் என்பதை நான் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ், உயர் கல்வியின் பல்வேறு நிலைகளுக்கேற்பத் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்களை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்.
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) உள்ளிட்ட நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களுடனான நோக்கம் சார்ந்த கூட்டாண்மைகளையும், உலகத் தரத்திலான நவீன பயிற்சி உள்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, 2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளித்து, உலகத் தரத்திலான, ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க நமது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகை மாற்றியமைத்து வரும் சூழலில், இந்தத் தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்தும் விதமாக, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் இணையக் கருவிகள் குறித்த அறிவுக்கான தமிழ்நாடு பள்ளித் திட்டம் (TN SPARK) விரிவுபடுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தற்போதுள்ள 5,000 அரசுப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு 2026-27 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்படும்.
புதிதாக மறுசீரமைக்கப்பட்ட மூன்று நிலைகளைக் கொண்ட கட்டமைப்பின் கீழ், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த அடிப்படைப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலை அளவிலான பயிற்சியும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு விருப்பப் பாடங்களும் வழங்கப்படும். இக்குறிக்கோள் சார்ந்த முயற்சியானது, மாணவர்கள் புதியவற்றைப் படைக்கவும், தலைமைத்துவப் பண்பை வளர்த்துக்கொள்ளவும், உலகளாவிய அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தவும் நேரடியாக உதவும்.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது"இவ்வாறு மரிய வில்சன் கூறினார்.


Click it and Unblock the Notifications
