எதிர்காலத்தில் எல்லாரும் கோடீஸ்வரர்கள்தான்.. சூப்பர் மேட்டரை சொன்ன எலான் மஸ்க்! அது எப்படி?
வாஷிங்டன்: இந்தக் காலத்தில் நம்மில் பலரும் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தைச் சிறுகச் சிறுக சேமித்து வருகிறோம். இதற்கிடையே யாருமே பணத்தைச் சேமிக்கத் தேவையில்லை என்கிறார் எலான் மஸ்க்.. வரும் காலத்தில் அனைவருக்குமே அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் பணத்தைச் சேமிக்கத் தேவையில்லை என்கிறார். அவர் ஏன் இதுபோல சொல்கிறார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவில் அதிபராக இருக்கும் டிரம்ப் சமீபத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் பணத்தைச் சேமிக்கும் இந்தத் திட்டத்திற்கு டிரம்ப் அக்கவுண்ட்ஸ் பார் கிட்ஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பலரும் இதில் கணக்குகளை ஆரம்பிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

எலான் மஸ்க்
டிரம்பின் இந்தத் திட்டத்தை அங்குள்ள பிரபல முதலீட்டாளர் ரே டாலியோ வரவேற்றுள்ளார். இது அமெரிக்கர்களுக்கு மிக பெரியளவில் உதவியாக இருக்கும் என அவர் கூறியிருந்தார். இத்திட்டத்தை எலான் மஸ்க் வரவேற்றாலும், எதிர்காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் மிகப் பெரிய வருமானம் கிடைக்கும் என்பதால் இது போன்ற நடவடிக்கை தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் மேலும், "இந்தத் திட்டம் (டிரம்ப் அறிவித்த திட்டம்) நிஜமாகவே நல்ல திட்டம் தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வறுமை என்பதே இருக்காது.. அதனால் பணம் சேமிக்கத் தேவையில்லை. உலகில் அனைவருக்குமே அதிக வருமானம் கிடைக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஏஐ காரணமாக இந்த மாற்றம் ஏற்படும் என்பதே அவரது வாதமாகும்.
நெட்டிசன்கள்
இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒரு நபர், "அனைத்துப் பொருட்களின் விலை ஜீரோ என வந்துவிட்டால்.. பிறகு யார் தான் பொருட்களை உற்பத்தி செய்வார்கள். யாரும் எதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "பெரும் பணக்காரர்கள் நிச்சயம் இதை நடக்க விட மாட்டார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "தொழில்நுட்பப் புரட்சியால் வறுமையை நீக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அனைவருக்கும் அதிக வருமானம் கிடைக்கும் எனச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதர்கள் இருக்கும் வரை வறுமை மனப்பான்மை என்றென்றும் இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஏஐ
AI தொடர்பாக எலான் மஸ்க் இதுபோன்ற கருத்துகளைச் சொல்வது இது முதல்முறை இல்லை. ஒரு காலத்தில் உலகிற்குத் தேவையான அனைத்தையும் ஏஐ செய்யும் என்றும் அப்போது மனிதர்கள் வேலை செய்யத் தேவைப்படாது என்றே எலான் மஸ்க் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்தாண்டு பாரீஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்கிடம் ஏஐ ஏற்படுத்தும் வேலையிழப்புகள் குறித்துக் கேட்கப்பட்டது.
எல்லாவற்றையும் ஏஐ செய்யும்
அதற்குப் பதிலளித்த அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. எதிர்காலத்தில் ஒரு நல்ல சூழ்நிலையில், நம்மில் யாருக்கும் வேலை இருக்காது. உலகளாவிய அடிப்படை வருமானம் என்பதற்குப் பதிலாக அதிக வருமானம் அனைவருக்கும் கிடைக்கும். பொருட்கள் அல்லது சேவைகளுக்கு எந்தவொரு பற்றாக்குறையும் இருக்காது" எனப் பதிலளித்தார்.
அதாவது ஏஐ வந்த பிறகு.. ஒரு கட்டத்தில் உலகில் இருக்கும் அனைத்து வேலைகளையும் ஏஐ செய்யும்.. நாம் பணத்திற்காக எந்தவொரு வேலையையும் செய்யத் தேவைப்படாது. நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம் என்பதே அவரது கருத்தாகும்,












Click it and Unblock the Notifications