ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023: அடி தூள்.. புது வேலை.. கூடவே புரமோசன் யாருக்கு கிடைக்கும்
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் பழைய கூட்டணி பிரிந்து புது கூட்டணி சிம்ம ராசியில் உருவாகிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் உள்ளது. நவகிரகங்களின் பயணம், வக்ர நிலை கூட்டணி, பார்வைகளைப் பொறுத்து தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் உள்ள மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசியில் குரு, ராகு, கடகத்தில் சூரியன், சிம்ம ராசியில் சுக்கிரன், புதன், செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் பயணம் உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன் செவ்வாய் கூட்டணி பிரிகிறது. சுக்கிரன் வக்ரமடைந்து பின்னோக்கி கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி கன்னி ராசிக்கு செல்கிறார். சனி பகவானும் வக்ர நிலையிலேயே பயணம் செய்கிறார்.
மூலம்: உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த நோய்கள் நீங்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் இல்லாவிட்டால் சிக்கல் நீடிக்கும். உடன் பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகள் கைகூடி வரும்.
பூராடம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக அமைந்துள்ளது. நிலப்பதிவுகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிரிகள் பிரச்சினை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். செவ்வாய் பகவானை வணங்கி வர சிக்கல்கள் நீங்கும்.
உத்திராடம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். கவுரவப்பதவிகள் தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். உற்பத்தியும் அதிகரிக்கும். பண வருமானமும் கூடும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சந்திராஷ்டம நாட்களில் கவனமும் நிதானமும் தேவை.
திருவோணம்: பெண்களுக்கு நகை சேர்க்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கேட்ட இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த மாதம் சொத்து சேர்க்கை ஏற்படும். பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.
அவிட்டம்: திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். ஆடியில் வரன் பார்க்க ஆரம்பித்தால் ஆவணியில் நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடுகளில் செய்யும் முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். சந்திராஷ்டம நாட்களில் சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை. அனுமனை வழிபட நன்மைகள் நடைபெறும்.
சதயம்: ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. ஆன்மீக பயணம் செல்வதற்கான காலம் என்பதால் குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் எளிதில் முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும்.
பூரட்டாதி: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதம் அபூர்வமான யோகம் கைகூடி வரப்போகிறது. வேலையில் இடமாற்றம் உண்டாகும். நிரந்தரமான வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. பணி நிரந்தரமாவதோடு உங்களுக்கு புரமோசனும் கிடைக்கும். கைகளில் பணம் சரளமாக புரளும், நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.
உத்திரட்டாதி: சனி பகவானை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். வேலை கடினமாகவே இருக்கும். நெருப்பு சாதனங்களை கையாளும் போதோ, இரும்பு, கூர்மையான சாதனங்களை கையாளும் போதோ கவனம் தேவை. ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.
ரேவதி: புதன் பகவானை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பண வருமானம் நன்றாக இருக்கும். வேலையில் மாற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அடுத்தவர்கள் விசயத்தில் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. தினசரியும் விநாயகரை வழிபட சண்டை சச்சரவுகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications