August Matha Palan 2025: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான இந்த மாத பலன்கள்.. அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பேச்சில் வலிமை அதிகரிக்கும். பேச்சுக்களில் மிகுந்த தெளிவாக இருக்க வேண்டும். 2 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் உங்கள் பேச்சில், எண்ணங்களில் பெரிய எதிர்பார்ப்புகளை தூண்டும் என்பதால் கவனம் தேவை. அந்த எதிர்பார்ப்பால் ஏமாறாமல் இருப்பது நல்லது. குரு 6 ஆம் இடத்தில் இருப்பதால் அலைந்து திரிந்து செய்யக்கூடிய வேலை உண்டாகும்.
தகவல் தொடர்பால் பகைமை வரும் வாய்ப்புள்ளது. காதலில் பாதிப்பு ஏற்படும். தாயின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நன்மை. பகைவர்கள் நண்பராக மாறுவார்கள். தந்தைக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும்.
நல்ல வேலைவாய்ப்பு உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வேலைவாய்ப்பால் வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் நல்ல புகழ் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இரண்டாம் திருமணத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர் மாயங்களை நம்பக்கூடிய காலகட்டம் கவனம் தேவை. நவம்பர் மாதம் வரை எவ்வளவு உழைக்கிறீர்களோ அந்த உழைப்பின் பயனை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அனுபவிப்பீர்கள். உழைப்பின் மீதான உங்கள் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படும். கடின உழைப்பை போட்டால் அதற்கான பலன்கள் கட்டாயம் கிடைக்கும் காலகட்டமாக இந்த மாதம் அமையும்.
நட்பு விஷயங்களில் சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வேலைமாற்றம் ஏற்படும். எதிர்மறையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இதுவரை இருந்து வந்த பண நெருக்கடிகளில் இருந்து வெளிவருவீர்கள். திருமணத்திற்கான வரன் அமையும். சுபச் செய்திகள் நடைபெறும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசு வேலைகள் கிடைக்கும் யோகம் உள்ளது. பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழிலுக்குத் தேவையான கடன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் யோகம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாராஹி, மகாலட்சுமி வழிபாடு நன்மை பயக்கும்.
மீனம்
மீனம் ராசியினருக்கு காதல் மலரும் காலகட்டம். சிலருக்கு காதல் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. உடல்நிலை பாதிப்பு, வேலையில் நெருக்கடி, வேலை மாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். வேலை மாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்வது நல்லது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நல்ல வருமானங்கள் வரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரும் வாய்ப்புள்ளது.
சுக்கிர பகவான் அருளால் நகைகள், கார் வாங்கும் யோகம் உண்டாகும். 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அரசு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. காதல் திருமணம் கைகூடும். இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. தொழில் வாய்ப்புகள் கூடி வரும். அற்புதமான யோகமான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications