டிசம்பர் மாத ராசி பலன் 2022: இந்த 2 ராசிக்காரர்களும் கவனம்..விபரீத ராஜயோகம் யாருக்கு?
சென்னை: கார்த்திகை மாதம் பாதி நாட்களும் மார்கழி மாதம் பாதி நாட்களும் இணைந்த மாதம் டிசம்பர் மாதம். மழைக்காலம் படிப்படியாக முடிந்து பனிக்காலம் தொடங்கும் மாதம் டிசம்பர் மாதம். ஆன்மீக அலைகள் அதிகம் வீசும். மாலை அணிந்த பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். மிதுனம், கடகம், சிம்ம ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டின் கடைசி மாதம் இந்த மாதத்தில் கிரகங்கள் தனுசு ராசியில் கூட்டணி அமைக்கின்றன. சூரியன் மாத பிற்பகுதியில் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 3ஆம் தேதி புதன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு சென்று புதனோடு இணைகிறார்.
ஆண்டு கிரகங்களைப் பார்த்தால் சனி மகர ராசியிலும் குரு மீன ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் பயணத்தால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரப்போகிறது. இந்த மாதத்தில் உங்கள் ராசிநாதன் புதனின் பார்வை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. கூடவே சூரியன், சுக்கிரனின் பார்வையும் உங்கள் ராசியின் மீது விழுவதால் உங்களுக்கு சந்தோஷமான மாதமாக அமையப்போகிறது. அஷ்டமத்து சனியால் சில தடைகள் ஏற்பட்டாலும் இந்த மாதம் தடைகளைத் தாண்டி வெற்றிகள் தேடி வரும். நேர்மறைய எண்ணங்கள் அதிகரிக்கும். குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து ஹம்ச யோகத்தை தரப்போகிறார். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறப்போகிறது.

கோபத்தை தவிர்க்கவும்
அஷ்டமத்து சனி விலகும் காலத்தில் அற்புதங்கள் நிகழப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது. குடும்ப உறவுகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். மிகப்பெரிய பாரம் நீங்கப்போகிறது. கசந்த உறவுகள் இனி மகிழ்ச்சியாக மாறப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். திடீர் விரைய செலவுகள் வரலாம் கவனம் தேவை. நிதானம் தேவை. திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக இணையப்போகிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். பெண்களிடம் இருந்த மன உளைச்சல் அழுத்தங்கள் நீங்கும். கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகவே உள்ளது. குருபகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வந்து போகும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சில பிரச்சினைகள் வந்து போகும். குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

குல தெய்வ வழிபாடு
திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். தெய்வ வழிபாடு மட்டுமே உங்களை எத்தகைய பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றும். மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற எண்ணங்கள் வந்து போகும். படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம் அதுவே சிக்கலை ஏற்படுத்தி விடும். பணத்தை பத்திரப்படுத்துங்கள். விலை உயர்ந்த நகைகள், பொருட்களையும் கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். பாதிப்புகள் குறைய பவுர்ணமி நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. டிசம்பர் மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரகங்களின் பயணத்தை பார்த்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையாக உள்ளது. மாத முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். ஐந்தாம் வீட்டில் புதன், சுக்கிரன் உடன் ராசி நாதன் சூரியன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம். செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வேலை தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நூற்றுக்கு நூறு நன்மைகள் தரப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும்.

விபரீத ராஜ யோகம்
குரு 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டமத்து குருவாக இருந்தாலும் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ஆட்சி பெற்ற சனியும், குருவும் ராஜயோகத்தை தரப்போவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தரப்போகிறது. திருமண சுபகாரியம் தொடர்பாக இந்த பேசி முடிக்கலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் வாழ்க்கையில் வெற்றிகள் தேடி வரப்போகிறது. குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு அற்புதம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். பாடங்கள் அத்தனையும் மனதில் பதியும். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சியும் நிறைவும் நிறைந்த மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications