குரு பெயர்ச்சி 2022:சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும் -கிரகங்கள் சாதகமா?
சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு அவரது ஜாதகம், தசாபுத்தியின்படி இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: குரு பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழப்போகிறது. திருமணம், வேலை, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர் முதல்வர் மு.க ஸ்டாலின் ஸ்டாலின் ராசி ஜாதகத்திற்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். சனிபகவானின் பார்வையும், ராகு கேதுவும் சாதகமான பலனைத் தருமா என்று பார்க்கலாம்.
குரு பகவான் பொன்னவன் தனது பொன்னான பார்வையால் பலரையும் சுபிட்சமடைய வைப்பார். குரு பார்வைக்காக பலரும் காத்திருக்கின்றனர். திருமணம் குழந்தை பாக்கியம், பணவரவு, வேலை போன்றவைகள் நல்ல நிலையில் கிடைக்க குருவின் அருள் அவசியம். எனவேதான் குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த குரு பெயர்ச்சி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நிகழப்போகிறது. குரு பகவான் கடகம், கன்னி, விருச்சிகம் ராசிகளை பார்க்கிறார். சிம்ம ராசிக்கு அஷ்டம ஸ்தான குரு என்றாலும் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம். அவரது ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் உள்ளன. இத்தனை யோகங்கள் இருப்பதால்தான் முதல்வர் ஆகும் யோகம் கை கூடி வந்துள்ளது. நம்பர் 1 முதல்வர் என்ற பாராட்டும் கிடைத்து வருகிறது.

அஷ்ட குரு என்ன செய்யப்போகிறார்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வபுண்யாதிபதியான குருபகவான் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் அமரப்போகிறார். 8 நிற்கும் குருவால் சர ராசியில் பிறந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது. குருபகவான் உபய வீட்டில் மறைவதால் நல்லதே நடக்கும்.

ஆட்சி பெற்று அமரும் குரு தரும் பலன்
குருபகவான் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வெளிநாடு, வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். பாராட்டும் புகழும் கிடைக்கும்.

செல்வாக்கு புகழ் கூடும்
குரு பகவான் தனது நட்சத்திரமான பூரட்டாதியில் பயணம் செய்யும் கால கட்டத்தில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புகழும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நற்காரியங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த அயல்நாடு பயணம் சாதகமாக அமையும். வேற்றுமொழி பேசுவோரால் ஆதாயம் உண்டு.

ஆரோக்கியத்தில் அக்கறை
செப்டம்பர் முதல் நவம்பர் வரை குரு பகவான் சஞ்சாரம் சாதகமாக இல்லாமல் இருப்பதால் உடல் சோர்வு, அசதி அதிகரிக்கும். எதிரிகளின் கை ஓங்கும். மக்கள் செல்வாக்கை தக்க வைக்க பாடுபட வேண்டியிருக்கும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். புதிய அணுகுமுறையால் சில எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

கனிவும் துணிவும்
டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பேச்சில் கனிவும் செயல்களில் துணிவும் ஏற்படும். ஆட்சியில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி மக்களிடையே செல்வாக்கை தக்க வைப்பார் ஸ்டாலின். ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது தைரிய ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் செயல்களில் தைரியம் தன்னம்பிக்கை கூடும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சந்தோஷம் தரும் சனிபகவான்
சனிபகவான் சஞ்சாரம் சச யோகத்தை தரப்போகிறது. கும்ப ராசியில் ஆட்சி பெற்று அதிசாரமாக அமரப்போகும் சனிபகவான் கண்டச்சனி என்றாலும் கவலை வேண்டாம். ஆட்சி பெற்ற சனிபகவான் வெற்றிகளைத் தேடித் தரப்போகிறார். சனிபகவானின் பார்வை உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்களைக் கொடுத்தாலும் செல்வம் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வார். மொத்தத்தில் ஸ்டாலினுக்கு இந்த குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, அதிசார சனி பெயர்ச்சி அரசியல் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது.












Click it and Unblock the Notifications