ஜூன் ராசி பலன்: மீன ராசிக்கு மீண்டும் மீண்டுமா.. தொழில், பண விஷயத்தில் ரொம்ப கவனம்
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோஷம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவாசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் மீன ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களைச் சந்தித்து வந்து கொண்டிருப்பீர்கள். குரு பகவான் தற்போது 4 ஆம் இடத்துக்குப் போயிருப்பதால் ஆறுதலான காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பத்தாம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் தொழிலில் உங்களைக் கட்டாயமாக காப்பாற்றுவார்.
என்ன சோதனைகள் வந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. சனிக்கிழமை தோறும் காலை ஒன்றரை மணி நேரம் 6 முதல் 7 மணி வரை மெளனமாக இருப்பது அற்புத பலன்களைத் தரும். பேசினால்தான் உங்களுக்குப் பிரச்சனையே. சிலருக்கு, கால்கள் மற்றும் கைகளில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
குடும்ப வாழ்க்கை
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். சனி பகவான் 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பிரிவு, பிரச்சனைகள் இருக்கும். ஆனால், இந்த மாதத்தில் 4 ஆம் இடத்தில் இருக்கும் குரு உங்களை கட்டாயமாக காப்பாற்றுவார். 2 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரனின் அருளால் அனுசரித்துப் போவீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை, சம்பள உயர்வு கிடைக்கும்.
மாணவர்கள்
9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டு. 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டைப் பெறுவீர்கள். கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு 8 ஆம் தேதி வரைக்கும் சீட்டு கிடைக்கும் பிரச்சனை, படிப்பில் திண்டாட்டம் இருக்கும். அதற்குப் பிறகு கல்வியில் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். புரொபஷனல் கோர்ஸ் படிக்கும் மாணவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. மருத்துவத் துறையில் படிக்கும் யோகம் நிறைய பேருக்கு உண்டாகும்.
பெண்கள்
2 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். உங்களுடைய ஒத்துழைப்பு குடும்பத்தில் இருக்கும். மனைவிமார்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் என்னதான் பிரச்சனை இருந்தாலும் இந்த மாதம் ஆறுதல் தரும் மாதமாக இருக்கும்.
ஆரோக்கியம்
மீன ராசிக்காரர்களுக்கு பலருக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். மன அழுத்தம், கர்ப்பப்பை பிரச்சனை, மனநலம் பாதிப்பு, மரண பயம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். வேலையில் நிறைய அழுத்தம் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முருகப்பெருமான், ஆஞ்சநேயரை வழிபடுவது அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
தொழில், வியாபாரம்
5 ஆம் இடத்தில் செவ்வாய் நீச்சமாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சிலருக்கு பிரச்சனைகள் இருக்கும். ஆனால், 10 ஆம் பார்வையாக குரு உங்களைப் பார்ப்பதால் தொழில் ரீதியாக முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஆனால், வேலையாட்களால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. நம்பிக்கை துரோகம், முதுகில் குத்துவது போன்றவற்றை நீங்கள் சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் இதுபோன்ற சூழ்நிலை இருக்கும். ஆனால், தொழிலில் நல்ல முறையில் முன்னேறும் வாய்ப்பு பிற்பாதியில் கூடி வரும்.
நிதி
12 இல் ராகு இருப்பதால் பொருளாதாரத்தில் மிகப்பெரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இன்ட்ரா டே செய்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்கள் ஆலோசனையைக் கேட்டு முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்களாகவே அறிந்து புரிந்து செய்யும் முதலீடுகளில் லாபத்தைக் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
பரிகாரம்
குங்கும காளியை தரிசனம் செய்வது, எலுமிச்சை மாலை சாற்றுவது நற்பலன்களைத் தரும். மதுரை மீனாட்சியம்மனை புதன்கிழமைகளில் வழிபடுவது அற்புதமான முன்னேற்றத்தையும், தொழில், படிப்பில் வளர்ச்சியை ஏற்படுத்தும். பசுமாடுகளுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது கூடுதல் நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications