மார்ச் மாத பலன்: ராஜயோகத்தை பெறும் விருச்சிக ராசி.. வீடு தொழில் பணம்னு தொட்டதில் எல்லாம் அதிர்ஷ்டம்
மார்ச் மாத பலன்: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் விருச்சிக ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் விருச்சிக ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசியில் குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பரிவர்த்தனை அடைந்த அமைப்பில் 11 ஆம் இடத்தில் 4, 5 சுபர்களால் பார்க்கக்கூடிய யோக மாதமாகும். 11 ஆம் இடம் என்பது வெற்றி மற்றும் லாபத்தை குறிக்க கூடியதாகும். ராசிநாதன் 8 இல் மறைந்திருப்பதால் பெரிய தடை அமைப்புகளை கொடுக்காது. ராசிநாதன் வலுவிழந்திருந்தாலும் ராசி வலுவாக இருப்பதால் என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும். அதிர்ஷ்டம் நிறைவாக இருக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.
2015, 2016, 2017, 2018 இல் ஜென்ம சனியின் ஆதிக்கத்தால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள். ஆனால், அந்த மாதிரியான அமைப்பு எதுவுமே இப்போது இல்லை. அர்த்தாஷ்டம சனி கூட உங்களுக்குப் பெரிய கஷ்டங்கள் எதுவும் கொடுக்கவில்லை. மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் 5 ஆம் இடத்துக்குப் போகிறார். உங்களுக்கு பெரிய பாதிப்புகளோ, கஷ்டங்களோ எதுவும் ஏற்படாது.
விருச்சிகத்துக்கு நல்ல அமைப்பாக இருக்கும். அப்பா, அம்மா மூலமாக மன வருத்தங்கள் உண்டாகும். விருப்பப்பட்ட பொருளுக்கு தாயோ, தந்தையோ தடையாக இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது. எல்லா வகையிலும் தாய் தந்தை பேச்சை கேட்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். சூரியன் ராகுவோடு சேர்கிறார். சூரியன், சந்திரன் ராகுவோடு சேரும்போது தாய், தந்தையருடனான மனக் கசப்புகள் ஏற்படும்.
வயதான தாய் தந்தை வைத்திருப்பவர்கள் அவர்களது உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. இளைய பருவத்தினருக்கு நன்மைகள் நடக்கும். வீடு, கார், வண்டி, வாகனம் வாங்குவதற்கான அனைத்து யோகங்களும் உண்டாகும். எதிலும் ஒரு நிறைவு உண்டாகும். காதல் நிறைவேறும். திருமணம் நடைபெறும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆண், பெண் மனக் கஷ்டங்கள் விலகும். வேலையில் நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகளின் தொந்தரவு ஏற்படாது. திறமையைக் காட்டுவதற்கான காலகட்டம் அமையும். வேலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் செய்வதற்கு சிறந்த காலகட்டமாக இருக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பீர்கள். வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யும் அமைப்பு உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் கொட்டும். வெற்றி காணக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications