மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 14
மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். 14வது பாசுரத்தில் சொன்ன சொல் காப்பாற்ற வேண்டும் என்றும் நான்கு கரங்களை உடைய சங்கு சக்கரங்களை ஏந்திய மகாவிஷ்ணுவின் பெருமைகளை பாட சீக்கிரம் எழுந்திரு என்று எழுப்புகின்றனர் பெண்கள்.
மார்கழி மாதம் 14வது நாளில் திருப்பாவை, திருவெம்பாவையின் 14வது பாசுரத்தை பாடலாம்.

திருப்பாவை - 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையணிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லா நாவினையுடையவளே ! எழுந்திரு என்று எழுப்புகின்றனர். கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
திருவெம்பாவை - 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம் :
காதில் அணிந்த தோடுகள் ஆடும்படியாகவும், உடம்பில் அணியப்பட்ட பொன்னாலாகிய அணிகள் ஆடவும், கூந்தல் மாலை ஆடவும், மாலையைச் சுற்றும் வண்டுக் கூட்டம் சுழலவும், குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, அவன் சென்னியில் சூடப்பெற்றுச் சூழ்ந்துள்ள கொன்றை மாலையையும் பாடி, அவன் ஆதியான முறையையும் பாடி, அந்தமான முறையையும் பாடி, வேறுபடுத்திச் சிறப்பாக வளர்த்துக் காத்த வளையல் நிறைந்த கையுடைய உமாதேவியின் திருவடிச் சிறப்பைப் பாடி நீராடுவோமாக! என்று அழைக்கின்றனர் இறைவனுக்காக நோன்பு நோற்கும் பெண்கள்.












Click it and Unblock the Notifications