புதன் பெயர்ச்சி.. ஆட்சி பெற்ற குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்..நீச்ச பங்க ராஜயோகம் யாருக்கு?
மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் நீச்சம் பெற்று அமரும் புதனால் சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
சென்னை: புத்திநாதன் புதன் மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் சூரியனுடன் நீச்சம் பெற்று அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மார்ச் 16ஆம் தேதியன்று புதன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சி மற்றும் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான கால கட்டம் உருவாகிறது. திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். நிகழப்போகும் புதன் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நீச்ச பங்க ராஜயோகம் என்பது ஆட்சி பெற்ற கிரகத்துடன் நீச்சம் பெற்ற கிரகம் இணைவதன் மூலம் கிடைக்கும் யோகமாகும். மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் நீச்சம் பெற்ற புதன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் வரும். திடீர் எதிர்ப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டு கடைசியில் வெற்றியில் முடியும். இந்த புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களே.. குரு பகவானால் உங்களுக்கு ஏற்கனவே விபரீத ராஜயோகம் கிடைத்துள்ளது. இப்போது புதாத்திய யோகத்தினால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாகும். ராஜயோகத்தினால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிறிய அளவில் பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் திடீர் யோகம் கை கூடி வரும். அற்புதமான கால கட்டமாகும்.
ரிஷபம்

புதன் பகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் நீச்ச பங்க நிலையில் பயணம் செய்யப்போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பணவருமானம் அதிகரிக்கும். திடீா் வேலை வாய்ப்பு தேடி வரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும்.
மிதுனம்

புதன் உங்கள் ராசிக்கு அதிபதி. 4 ஆம் வீட்டு அதிபதி. ராசி நாதன் புதன் 10ஆம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று சஞ்சாரம் நிகழ்வது அற்புதம். திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வருமானம் வரும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். கர்ம, தொழில் ஸ்தானத்தில் இந்த சஞ்சாரம் நிகழ்வது உங்களின் தொழில் விவகாரங்களில் நன்மை அடையலாம். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கடகம்

புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் குரு உடன் இணைந்து பயணம் செய்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே.. புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற குரு உடன் பயணம் செய்வது ராஜயோக காலமாகும். திடீர் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
கன்னி

உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை குரு, சூரியன் உடன் இணைந்து பார்வையிடப்போகிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைத்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.
துலாம்

துலாம் ராசிக்காரர்களே.. புதன் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் நீச்சம் பெற்று பயணம் செய்யப்போவதால் ராஜயோகம் கிடைக்கப்போகிறது. இது மன திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். சிறிய முதலீடு செய்தால், நல்ல பலனைப் பெற்றிடலாம். பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். பிடித்த கல்லூரிகளில் உயர் கல்வி படிப்பீர்கள்.
கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் குரு, சூரியன் உடன் பயணம் செய்யப்போவதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும்.
தனுசு

புதன் நான்காம் வீட்டில் குரு, சூரியன் உடன் கூட்டணி அமைத்து பயணம் செய்யப்போவதால் வீடு மற்றும் பணி இடத்தில் ஆறுதலான, சுகமான பலனைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பணம் வருமானம் அதிகாிக்கும். மன தைரியம் அதிகரிக்கும்.
மகரம்

புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்துள்ளதால் பண வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது என்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிதி நெருக்கடியும் கடன் தொல்லையும் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பர்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும்.
கும்பம்

புதன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். பணவருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். புதன்கிழமை பெருமாளை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் இணைந்து சூரியன் உடன் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் அற்புத பலனை தர உள்ளார். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications