ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை.. விபரீத ராஜயோகம்!
சென்னை: ஆகஸ்ட் மாதம் ஆடியும் ஆவணியும் பாதி பாதி நாட்கள் இணைந்த மாதம். அடைமழைக்காலம் தொடங்கிவிடும். சூரியன் கடக ராசியில் பாதி நாட்களும், சிம்ம ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்வார் கூடவே புதன் பயணிக்கிறார். மேஷத்தில் ராகு, குரு, சிம்மத்தில் சுக்கிரன், சூரியன், புதன், துலாம் ராசியில் கேது கும்ப ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் பயணத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு யாருக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. இந்த மாதம் தொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியன் புதன் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு மாறுகின்றனர். சூரியன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து புதனோடு சேர்ந்து யோகத்தை கொடுக்கிறார். இதுநாள் வரைக்கும் மன ரீதியாக சின்னச் சின்ன குழப்பங்களுடனேயே சில மாதங்களை கடத்தியிருப்பீர்கள் இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு தொழில் வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நிறைய நல்ல செய்திகள் உங்களுக்கு தேடி வரும். மனதாலும் உடல் ரீதியாகவும் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பிசினஸ் பார்ட்னர்கள் மூலம் இருந்த சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். மனதில் இதுநாள் வரை இருந்த பயம், பதற்றங்கள் நீங்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம், எதிர்கால படிப்புக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். புத ஆதிபத்ய யோகத்தினால் உங்களுக்கு கலைத்துறை சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். நீங்க விரும்பிய படிப்புகள் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க வேகமாக போவதை விட நிதானமாக போங்க. திருமண சுப காரிய முயற்சிகளில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. கணவன் மனைவி இடையே மாத முற்பகுதியில் சின்னச் சின்ன சண்டைகளும் மாத பிற்பகுதியில் சண்டைகள் நீங்கி சந்தோஷங்களும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும்.

விருச்சிகம்: சூரியனும் புதனும் உங்க ராசிக்கு இந்த மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளில் பயணிக்கிறார். குரு, ராகு இரண்டாம் வீட்டிலும் சனி நான்காம் வீட்டிலும் பயணிக்கின்றனர். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வருமானம் அதிகரிப்பதால் உங்களுடைய கடன்கள் அடைபடும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு நிறைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கசப்புணர்வுகள் வந்து போகும். வீண் விவாதங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் ஆட்சி பெற்ற சூரியன் பத்தாம் வீட்டில் இணைவது சிறப்பு. வேலையில் இடமாற்றம், சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தேர்வு எழுதி அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசு தொடர்பான காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். திருமணம் சுப முயற்சிகளை எடுக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில் கசப்புணர்வுகளை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்க. பணம் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க அப்புறம் திரும்ப வர வாய்ப்பு இல்லை.
தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு,ராகு மூன்றாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் உள்ள சூரியன் புதன் உள்ளதால் சில சங்கடங்கள் ஏற்படும். உங்க வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் எதையும் தெளிவாக யோசித்து முடிவு பண்ணுங்க. உங்க பொறுப்பை தட்டிக்கழிக்காதீங்க. வீண்பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. இந்த கால கட்டத்தில் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்ய ஸ்தானமும் வலுத்திருக்கும் போது அந்த இடத்திற்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும், திருமணம், சுப காரிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம் இந்த மாதம் தவிர்த்து விடலாம். மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம். உயர்கல்வி முயற்சியில் நன்மை நடக்கும். நினைத்த சப்ஜெக்ட் நினைத்த காலேஜில் படிக்க இடம் கிடைக்கும்.
மகரம்: இந்த மாதம் உங்களுடைய ராசிநாதன் சனி பகவான் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க நான்காம் வீட்டில் குரு, ராகு, ஏழாம் வீட்டில் வக்ர நிலையில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் செவ்வாய், சூரியன் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வாகன பயணங்களில் கவனம் தேவை. இருக்கிற வேலையில் கவனமாக வேலை பாருங்க. மன உளைச்சல் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்க. சண்டை சச்சரவு கார சார விவாதம் ஏற்படும். பேச்சில நிதானமாக இருங்க. கோபமாக பேச பேச பிரச்சினைகள்தான் அதிகமாகும். நிதானம் அவசியம். திருமண சுபகாரியத்திற்கு இந்த மாதம் முயற்சிகள் செய்ய வேண்டாம். தடைகள் ஏற்படலாம். விரக்தியான மனநிலையில் இருப்பீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்க. பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஏழரை சனியில் பாத சனி நடப்பதால் அதுவும் வக்ர நிலையில் இருப்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் எதுவும் சாதகமாக இருக்காது. வேகமாக போவதை விட நிதானமாக செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே குடும்ப விசயங்களில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. இந்த மாத துவக்கத்தில் உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை தரும். தேவையில்லாத விரைய செலவுகள் வரும். குருவும் ராகுவும் மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் தேடி வரும். சிறு பயணங்களால் நன்மைகள் நடைபெறும். ஏழாம் வீடான சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இந்த மாதம் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அதை அசால்டாக சமாளிப்பீர்கள். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுகிறது. திருமணம் சுப காரியங்களுக்காக முயற்சி செய்பவர்கள் மாத பிற்பகுதியில் முயற்சி செய்யலாம். வரன் பேசி முடிக்கலாம். எந்த ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.
மீனம்: உங்க ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்கும். உங்களுடைய தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்களுடைய உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். புதிய சொத்துக்களை கூட்டாகவும் வாங்கலாம். வேலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராது இருக்கிற வேலையில் பிரச்சினை இல்லாமல் கவனமாக இருங்க. சூரியன் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறுக்கு அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிர்பாராத பண வரவு வரும். இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. கால்வலி பிரச்சினைகள் வரலாம். வயிறு தொடர்பான பிரச்சினைகளும் வரும். திருமணம் தொடர்பான முயற்சிகளை செய்யலாம். குடும்பத்தில் எந்த குழப்பமும் இல்லை குதூகலமாக இருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சொந்தங்களுடன் கூடி மகிழக்கூடிய மாதமாகும்.












Click it and Unblock the Notifications