சித்திரை மாத ராசி பலன் 2023: அற்புத பலன்களை அனுபவிக்கப்போகும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் பயணம் செய்வதால் மேஷ மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் சூரியன் உச்சகதியில் தன் பயணத்தை தொடங்குகிறார். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சொக்கநாதருக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மீனாட்சி அம்மனுக்கும் இந்த மாதத்தில் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. மேலும் அம்மன் ஆலயங்களில் தேரோட்டமும் திருவிழாக்களும் மிக அதிகமாக இந்த மாதத்தில் நடக்கும். அத்தகைய சிறப்புமிக்க சித்திரை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம்.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் 27 ஆம் தேதி கடக ராசிக்கு இடம் மாறுகிறார். புதன் மேஷ ராசியில் அமர்ந்திருக்கிறார். குரு மீன ராசியில் இருக்கிறார். எட்டாம் தேதி குரு மேஷ ராசிக்கு இடம் பெயருகிறார் சுக்கிரன் ரிஷப ராசியில் இருக்கிறார். 19 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார்.

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
ஹோட்டல் தொழில் செய்றவங்க செங்கல் காளவாய் வச்சிருக்கவங்க நல்ல லாபம் பார்ப்பீங்க. வாகனம் ஓட்டும் போது கவனமா போகணும்ங்க. சின்ன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க. கிளுகிளுப்பாக பேசி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. சட்டப்படி நடவடிக்கை எடுத்து பூர்வீக சொத்துல பங்கை பெறுவீங்க. தொழிலை விரிவுபடுத்த ஏற்பாடு செய்வீங்க. சொந்த தங்கைக்கு உறவுக்குள்ளேயே வரன் பார்ப்பீங்க. நீண்ட காலமாக ஆசைப்பட்ட தென்னந்தோப்பை விலைக்கு வாங்குவீங்க. கோயில் திருப்பணிக்கு பண உதவி செய்வீங்க. பங்காளி சண்டைய பக்குவமா பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வருவீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.
ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
வியாபாரத்தை விறுவிறுப்பா நடத்துவீங்க. இடையூறாக இருக்கும் எதிர்ப்புகளை தகர்த்து எறிவீங்க. தொழில் துறைகளில் புதிய முதலீடு செய்து போட்டியாளர்களை அசத்துவீங்க. கரும்பாக பேசி இரும்பாக இருக்கும் மனச இளகச் செய்வீங்க. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு மருத்துவ நிபுணர் ஆலோசனைப்படி மருந்து சாப்பிடுவீங்க. நீண்ட காலமாக வெளிநாட்டில் வேலை செஞ்ச சிலர் சொந்த நாடு திரும்புவீங்க. நாணயமா நடந்து வங்கி அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீங்க. பொது காரியங்களில் ஈடுபட்டு புகழும் செல்வாக்கும் அடைவீங்க. கடுமையான வேலைகளை எளிமையா செஞ்சு முடிப்பீங்க. புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்துவீங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதில அதிக அக்கறை காட்டுவீங்க. வட்டிக்கடை திறந்து புதுக் கணக்கு போடுவீங்க. பலசரக்கு கடையாக இருந்ததை சூப்பர் மார்க்கெட்டா தரம் உயர்த்துவீங்க. அரசாங்க வேலையில சில சிரமங்கள் வந்தாலும் சாமர்த்தியமா சமாளிப்பீங்க. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில எச்சரிக்கையாக இருக்கணுமுங்க. யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்காதீங்க. சின்ன புள்ளத்தனமா நடந்தீங்கன்னா அவமானப்படுவது நிச்சயமுங்க. பிள்ளைகளோட நடவடிக்கையை அணுக்கமா பாருங்க. வெளியூர் பயணங்கள் ஏற்படுமுங்க. ஒரு சிக்கலான விஷயத்தை நண்பர்கள் மூலமாக பேசி தீர்ப்பீங்க.
திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.
கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
முன்பு வாங்கி போட்ட இடத்தை வித்து கடனை அடைக்க நினைப்பீங்க. ஆனா சுலபத்துல விற்பனை ஆகாதுங்க. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்குமுங்க. வாகனத்துக்காக வாங்கிய கடனை அடைச்சு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. தாயாருக்கு சர்க்கரை வியாதியால் ஏற்பட்ட கால் வீக்கத்துக்கு மருத்துவம் பார்ப்பீங்க. அரசியல்வாதிகள் நட்பால் தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்குமுங்க. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வெடிக்குமுங்க. அதனால கூடிய மட்டும் வீட்டுக்கு வர சங்கடப்படுவீங்க. உறவினர்கள் தொல்லை ஒரு பக்கம் தூக்கத்துக்கு இடையூற ஏற்படுத்துமுங்க. மனைவிக்கு தங்க நகைகள் வாங்குவீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறுமுங்க.
சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
வியாபாரத்துல திடீர் சறுக்கல் ஏற்படுமுங்க. அதை சாமர்த்தியமா சமாளிப்பீங்க. குடும்பத்துல யாருக்காவது உடம்புக்கு முடியாமல் வந்துகிட்டே இருக்குமுங்க. அதனால குல தெய்வத்தைக் கேட்டு பரிகார பூஜைகள் நடத்துவீங்க. அடுத்தவருக்கு உதவி செய்ய போயி ஆபத்துல மாட்ட கூடிய வாய்ப்பு இருக்குங்க. எச்சரிக்கையா நடப்பது நல்லதுங்க. புதிய ஆர்டர்கள் அரசாங்கத்தின் மூலமா கிடைக்குமுங்க. மனைவிக்கு கண் அறுவை சிகிச்சை செய்வீங்க. உறவினர் வகையில துக்க சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்குங்க. பழைய கடன்களை அடைக்க பெரும் முயற்சி செய்வீங்க. சங்க பொறுப்பில் இருக்கும் உங்களை கவுக்க சிலர் முயற்சி செய்வாங்க. அதுக்கு இடம் கொடுக்காதீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
குடும்பப் பிரச்சனையை சமாளிக்க முடியாம தடுமாறுவீங்க. கடன் வாங்கிய இடத்தில் உடனே பணத்தைக் கேட்டு நெருக்கடி பண்ணுவாங்க. வியாபாரத்தை நிலை நிறுத்த இரவு பகலா பாடுபடுவீங்க. உணவகத் தொழில் மூலம் ஓரளவு வருமானம் வருமுங்க. வெயில் தாக்கத்தால் தோல் பிரச்சினை ஏற்பட்டு வைத்தியம் பார்ப்பீங்க. மனைவி உங்கள புரிஞ்சுக்காம எதுக்கு எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசுவாங்க. விட்டுக் கொடுத்து போறது ரொம்ப நல்லதுங்க. தொழில் கூட்டாளியிடம் கவனமாய் இருங்க. புதிய முதலீடுகள் செய்ய வேண்டாமுங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பு மூலமா முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீங்க. காதலியின் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடப்பீங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.
துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
எதிரிகளை ஓட ஓட விரட்டுவீங்க. எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பார்த்த உதவி உங்களுக்கு வந்து சேருமுங்க. ஏழை மாணவனுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி அவங்க குடும்பத்துக்கு விளக்கு ஏற்றி வைப்பீங்க. திருமண பேச்சு வார்த்தை நடத்தி உறவினர் வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்குமுங்க. போட்டி பந்தயங்களில் சுலபமாக வெற்றியடைவீங்க. தோட்டத்தில் ஆட்டுப்பண்ணை வைக்க ஆசைப்படுவீங்க. பிரச்சனை காரணமாக குடும்பத்தை விட்டு சில நாள் பிரிந்து செல்வீங்க. வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீங்க. போட்டியாளர்களை வென்று காட்டுவீங்க.திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.
விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக கடன் வாங்க முடிவு பண்ணுவீங்க. மருத்துவம் படிக்க ஆசைப்படும் மகனுக்கு வேண்டிய உதவி செய்வீங்க. புதிய வீடு கட்டுவதற்கு இன்ஜினியரை வைத்து பிளான் போடுவீங்க. செங்கல், மணல், இரும்பு வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீங்க. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் கடின உழைப்பால் மிகப்பெரிய புகழடைவீங்க. வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திப்பீங்க. சாதுரியமாக காரியம் செய்து அதை சமாளிப்பீங்க. தாய் தந்தையை காசி யாத்திரைக்கு அனுப்பி வைப்பீங்க. அட்சய திருதியை அன்று மனைவிக்கு நகை வாங்கி கொடுப்பீங்க. அரசாங்க ஊழியர்கள் இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடை வீங்க. பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.
தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நினைத்துப் பார்க்காத லாபத்தை அடைவீங்க. கமிஷனாக கிடைத்த பணத்தை வைத்து மனை இடம் வாங்குவீங்க. வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் போவீங்க. பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுப்பீங்க. வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீங்க. உறவினர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பை போக்கி உறவுகளை பலப்படுத்துவீங்க. மாமனார் மாமியாரின் மனம் கோணாமல் நடந்து மனைவியின் அன்பை பரிசாக பெறுவீங்க. தென்னந்தோப்பு வாங்க ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க.பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
வரவேண்டிய பணத்தை கொடுத்தவரிடம் இருந்து ரொக்கமாக வாங்குங்க. செக்கா கொடுத்தா வேண்டாமுன்னு சொல்லிருங்க. பின்னாடி கோர்ட் கேஸ்னு அலைய வேண்டிய கட்டாயம் வருமுங்க. வீட்ல முடிஞ்ச அளவு விட்டுக் கொடுத்துப் போங்க. புரிந்து கொள்ளாமல் பேசும் மனைவி பிரிந்து அம்மா வீட்டுக்கு போற நிலைக்கு கொண்டு வராதீங்க. அலைச்சல் அதிகமாகி வேளா வேளைக்கு சாப்பிட முடியாமல் போகுமுங்க. காலையில் தலைச்சுத்தல் இருப்பதைப் போல் உணர்வீங்க. மருத்துவ பரிசோதனை செஞ்சா எந்த பிரச்சனையும் இருக்காதுங்க. இரவு நேரத்துல வீட்டுக்கு வெளியே இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குமுங்க. அது வெறும் மனப்பிரமை தாங்க. பயப்படாதீங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகுமுங்க.
கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
நினைத்ததை நடத்தி முடிக்க கடுமையாக பாடுபடுவீங்க. அதற்கான பலனையும் அடைவீங்க. கேட்ட இடத்திலிருந்து பணம் கைக்கு வந்து சேருமுங்க. வீட்டில் இளைய சகோதரிக்கு திருமண பேச்சு வார்த்தை நடத்துவீங்க. அதை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வருவீங்க. குடும்பத்தில் சிக்கல் சிரமங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுவீங்க. பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுப்பீங்க. தாய் தந்தையரை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போவீங்க. காதலியின் மனதை கொள்ளையடிக்க கம்மல் வாங்கி கொடுப்பீங்க. வியாபாரத்தில் நல்ல லாபம் அடைவீங்க. மேலும் விரிவுபடுத்த திட்டம் போடுவீங்க. ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.
மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
வீண் ஜம்பத்துக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசாதீங்க. நிறைவேற்ற முடியலைன்னா அவமானப்படுவீங்க. பைனான்ஸ் தொழிலில் கண்ணை மூடிக்கிட்டு பணம் போடாதீங்க. எந்த விஷயத்திலும் நிதானமா முடிவு எடுக்க பாருங்க. அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீங்க. எந்த முடிவாய் இருந்தாலும் சொந்த முடிவா எடுக்க பழகுங்க. தொழில் துறைகளில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் நஷ்டம் வராதுங்க. திடீர் செலவு வந்து கையிருப்பு கரைந்து போகுமுங்க. நெருங்கிய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீங்க. நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த குதிகால் வலி சரியாகி நிம்மதி அடைவீங்க. அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீங்க.அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையுமுங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.












Click it and Unblock the Notifications