குரு பெயர்ச்சி 2022: மீன ராசியில் ஆட்சி பெற்று அமரும் குருவால் மோடி ராசிக்கு எப்படி இருக்கு
குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசி விருச்சிக லக்னத்தில் பிறந்த பிரதமர் மோடிக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: குருபகவான் இன்னும் சில நாட்களில் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நமது நாட்டின் பிரதமர் மோடிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
நரேந்திர மோடி 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பகல் 11 மணிக்கு பிறந்துள்ளார் அவரது ஜென்ம லக்னம் விருச்சிகம் ராசி விருச்சிகம் வளர்பிறை சஷ்டியில் அனுஷம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் பிறந்தவர். அவர் பிறந்த நேரத்தில் புதன் திசை நடந்தது. மோடி ஜாதகத்தில் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. இந்த இரு கிரகங்களின் சேர்க்கைதான் இன்று நரேந்திர மோடியை பிரதமர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. இந்த கிரக சேர்க்கை காரணமாக தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது.
கோச்சாரப்படி கிரகங்களின் சஞ்சாரமும் மோடிக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பகவான் ஜென்ம ராசி லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு விருச்சிக ராசிக்கு இரண்டாம் இடமான குடும்பம், தனம், வாக்கு ஸ்தான அதிபதி. அதே போல ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. ஐந்தாம் வீட்டு அதிபதி 5ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் இந்த குரு பெயர்ச்சி பிரதமர் மோடிக்கு அற்புதமான பலன்களை அள்ளித்தரப்போகிறது.

மோடி ஜாதக யோகங்கள்
மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. மோடியின் ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இது 'சண்டாள யோகம்' அமைப்பாகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது. மோடி ராசிக்கு கோச்சார பலன்களும் அற்புதமாக அமைந்துள்ளது.

மோடிக்கு லாபம்
இந்த குரு பெயர்ச்சியினால் மோடிக்கு லாபமே. எந்த பிரதமருக்கும் கிடைக்காத புகழும் கீர்த்தியும் மோடிக்கு கிடைக்கும். இவரது ஆட்சி காலத்தில் நாடு அபரிமிதான வளர்ச்சியை அடையும். நாட்டின் பொருளாதார மந்தநிலை மாறி வளர்ச்சியடையும். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். எதிரி மாதிரி நினைத்தவர்கள் நண்பர்களாவார்கள்.

எதிரிகளை சமாளிப்பார்
குரு தனது ஐந்தவது பார்வையாக பாக்ய ஸ்தானத்தை பார்க்கிறார். நிறைய வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. குரு தனது ஏழாம்பார்வையாக ராசிக்கு 11ஆம் வீட்டினை பார்க்கிறார். எடுத்த காரியங்களை இனி எதிரிகளின் தொல்லையில்லாமல் தைரியமாக முடிப்பார். வெற்றிகள் தேடி வரப்போகிறது. நாட்டின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கப் போகிறது.

வெற்றிகரமான தலைவர் மோடி
குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக ராசியை பார்வையிடுகிறார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முறியடிப்பார் பிரதமர் மோடி. எதிரி நாட்டினர் மோதல் போக்கை விட்டு நேசக்கரம் நீட்டுவார்கள். உலக அரங்கில் வெற்றிகரமான தலைவராக வலம் வரப்போகிறார் பிரதமர் மோடி. மோடியின் வாக்கு வன்மை அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தரப் போகிறது. வெளிநாட்டு பயணங்கள் அதிக வெற்றியைத் தேடித்தரும். நாட்டின் வளர்ச்சியும் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கும். பொருளாதார மந்தநிலை முடிவுக்கு வரும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும்.


Click it and Unblock the Notifications
