Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை மாத ராசி பலன்: விருச்சிகத்தில் சூரியன்..இந்த 5 ராசிக்காரர்களுக்கு விடியல் நிச்சயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் பயணம் செய்வதால் விருச்சிக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்கும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி அளித்தது கார்த்திகை மாதத்தில் தான். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம்.

கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிரமடைந்து பின்னோக்கி வந்திருக்கிறார். விருச்சிக ராசியில் புதன் இடம் பெறுகிறார். மீன ராசியில் இருக்கும் குரு கார்த்திகை ஏழாம் தேதி வக்கிர நிவர்த்தி ஆகிறார். விருச்சிகத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் கார்த்திகை 19ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார்.

கார்த்திகை மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடப்பதால் இந்த மாதத்தை திருமண மாதம் என்று முன்னோர்கள் அழைத்தார்கள். சூரியன் நீச்ச கதியிலிருந்து உச்சத்தை நோக்கி பயணத்தை தொடர்வதால் திருமணத்திற்கு ஏற்ற மாதமாக கார்த்திகை கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சிவபெருமான் ஜோதி பிழம்பாக காட்சியளித்தது இந்த மாதத்தில் தான். கார்த்திகை மாதம் பஞ்சமி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் நாக தோஷம் நிவர்த்தி ஆகும். கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவார்கள். கார்த்திகை மாசம் துவாதசி நாளில் மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்து கொண்டார் என்பது ஐதீகம். ஆகவே இந்த மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
மாத முற்பகுதியில தொழில் துறைக்கு ஏதாவது இடைஞ்சல் வருமுங்க. வியாபாரம் கூட மந்தமாகத்தான் நடக்குமுங்க. ஆனா மாத பிற்பகுதியில் எந்த தொழிலும் ஓகோன்னு முன்னேற்றகரமா இருக்குமுங்க. கல்யாணம் காட்சி என்று வீடு களைகட்டி நிற்குமுங்க. உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க. வழக்கறிஞர் சிறப்பா தொழில் பண்ணுவாங்க. டாக்டர்கள் மருத்துவ சேவையில மகத்தான சாதனை புரிவாங்க. மாணவர்கள் சிறப்பாக படிப்பாங்க. இளசுகள் காதல் கத்தரிக்காய் என தன்மூப்பா நடப்பாங்க. பெத்தவங்க கொஞ்சம் கண்காணிப்பா இருங்க. பெத்தவங்க உடல் நலன பாதுகாக்கணும்ங்க. அம்போன்னு விட்றாதீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
வெளிநாட்டு பயணத்தால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்குமுங்க. நிலம் வாங்கி விற்பதில நல்ல லாபம் பார்ப்பீங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவருமுங்க. வெளிநாட்டில இருக்கறவங்க அளவோட நான்கு நம்பர் லாட்டரி சீட் எடுக்கலாமுங்க. அரசு பணியாளர்கள் புதிய அனுபவத்தை பெறுவாங்க. தனியார் துறை ஊழியர்களும் அக்கறையோட வேல பார்ப்பாங்க. பண வரவு தாராளமாக இருக்குமுங்க. செலவுகளும் அதற்கு தகுந்தார் போல வருமுங்க. பிள்ளைகள் அக்கறையோட படிப்பாங்க. வியாபாரம் சிறப்பாக நடக்குமுங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
மனைவி கொஞ்சம் மண்டக்கருவமா பேசுனா சண்டைக்கு நிக்காதீங்க. போயா நீயுமாச்சு உன் வீடுமாச்சுன்னு சொல்லிட்டு பிறந்த வீட்டுக்கு பெட்டியை கட்டிட்டு கிளம்பிடுவாங்க. அடுத்த வீட்டு பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ண போகாதீங்க. அது உங்களுக்கு சிக்கல ஏற்படுத்துமுங்க. கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவீங்க. நல்ல லாபம் கிடைக்குமுங்க. துணிக்கடை வியாபாரம் அமோகமாக நடக்குமுங்க. கலைத்துறையினர் புகழ் அடைவாங்க. வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீங்க. நண்பர்களுக்காக துணிச்சலான காரியத்துல இறங்குவீங்க. பிரிந்து போன உறவுகளை ஒட்ட வைக்க பாடுபடுவீங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
தொழில் சூப்பரா நடக்குமுங்க. வீட்ல விசேஷமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீங்க. குடும்பத்துல குதூகலமா இருப்பீங்க‌ மழலைச் செல்வத்தின் சத்தம் மங்களகரமா ஒலிக்குமுங்க. சிறிய முதலீடு பண்ணி பெரிய லாபம் பார்ப்பீங்க. விளையாட்டு வீரர்கள் வெளிநாட்டுக்கு போயி சாதனை புரிவாங்க. பங்குச்சந்தையில் துணிச்சலா முதலீடு பண்ணுங்க. ஆன்லைன் சூதாட்டம் மட்டும் ஆகவே ஆகாதுங்க. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீங்க‌. கடுமையாக பாடுபட்டு பழைய கடன்களை அடைப்பீங்க. மேல்படிப்புக்காக பிள்ளைகளுக்கு செலவு செய்வீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்தின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு கணக்கு போட்டு காரியம் செய்வீங்க. நாலும் நாலும் எட்டுன்னு நன்மைகள் அதிகமா நடக்குமுங்க. எதிர்பார்த்த இடத்தில் இருந்து இடையூறு இல்லாமல் உதவி வந்து சேருமுங்க. வங்கியில் நீங்க கேட்ட லோன் தடங்கல் இல்லாமல் சாங்ஸன் ஆகுமுங்க. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வளைந்து நடந்து கொடுத்து லாபத்தை பார்ப்பாங்க. அரசு வேலையில் அக்கறையோட பணியாற்றி மேலதிகாரிகளின் உற்சாகமான பாராட்டை பெறுவீங்க. வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிட ஆர்வம் காட்டுவீங்க. பெரிய மனிதரின் சந்திப்பால் வீட்டுப் பிரச்சனைக்கு முடிவு கட்டுவீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி

கன்னி


அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
கால்வாய் தண்ணிய கையில அள்ளுன மாதிரி பையில பணம் தங்குறது ரொம்ப சிரமமுங்க. திட்டம் போட்டு செலவு பண்ணுங்க. இல்லைன்னா உறவுகளும் நட்புகளும் கட்டம் கட்டி ஒதுக்கி விடுவாங்க. வியாபாரம் சற்று சறுக்கலாக நடக்குமுங்க. வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைப்பது கடினமுங்க. வெளியூர் சென்று வியாபாரத்துக்கு தேவையான ஆர்டர்களை பிடிக்க முயற்சி செய்வீங்க. அதில் ஓரளவு தான் வெற்றி கிடைக்குமுங்க. பெரிய பதவியில் இருக்கவங்க அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க. அசிங்கத்தை சுமக்க வேண்டிய நிலை உருவாகுமுங்க. இளம் பெண்கள் மனதை கட்டுப்படுத்தி நடக்கணுமுங்க. பேரு கெட்டுப்போனா ஊரு மதிக்காதுங்க‌ குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன செலுத்துவீங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
நீண்ட காலமாக இழுபறியாக இருந்த சொத்து விஷயத்தை சமூகமாக பேசி தீர்ப்பீங்க. புதிய வீடு கட்டுவதற்காக திட்டம் போடுவீங்க. முதலீடுகளை அதிகரிக்க நண்பர்களின் உதவியை நாடுவீங்க‌. கூடியவரை ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்த்தால் கையில் காசு தங்கமுங்க. மங்கல காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்குமுங்க. உங்களுடைய பக்குவமான பேச்சால் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையை எட்டுவீங்க. கமிஷன் வியாபாரத்தில் கை நிறைய சம்பாதிக்கலாமுங்க. வெளி வட்டாரத்துல உங்களுக்கு செல்வாக்கு அதிகமாக இருந்தாலும் வீட்டுக்குள்ள சற்று சங்கடமான நிலையிலதான் இருப்பீங்க. அவசரத்துக்கு வாங்கிய கடன இழுத்துப் போடாம கட்டி முடிங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
பணப் பிரச்சனை பெருசா இல்லாட்டியும் இனம் தெரியாத மனக்கவலை தூக்கத்தை கெடுக்குமுங்க. வயசுக்கு வந்த பிள்ளையை வாடாம வதங்காம கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு கடுமையா பாடுபடுவீங்க. நெருங்கிய உறவினர்கள் வகையில துக்க காரியத்துல கலந்துக்குவீங்க. வீட்டு மேல் மாடியில விருந்தினர்கள் தங்குவதற்காக அழகான அறை ஒன்றை ரெடி பண்ணுவீங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் சுமாராக நடக்குமுங்க. வியாபாரத்தில் நினைச்ச அளவுக்கு லாபம் கிடைப்பது கஷ்டமுங்க. வெளியூர் பயணங்களால பெருசா பலன் எதிர்பார்க்க முடியாதுங்க. பைனான்ஸ் தொழிலில பக்குவமா நடத்துக்கங்க. கண்டவங்களுக்கெல்லாம் காசு கொடுத்து கஷ்டப்படாதீங்க. பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
வாய் இருக்குன்னு சொல்லி வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க. பந்தயம் போட்டி இதுல மனச அலைபாய விடாம ஒதுக்கமா இருந்தா நல்லதுங்க. அடுத்தவங்க சொல்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி தொழில் துறையில கண்ண மூடிகிட்டு பணத்தை போடாதீங்க. மனை இடம் வாங்கி போடுங்க. மண்ணுல போட்ட பணம் பொண்ணா மாறி உங்களுக்கு பொருளாதார சிக்கல் வர காலத்துல பெரிய உதவியா இருக்கும்ங்க. அரசு வேல பாக்குறவங்க மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகுமுங்க. சின்ன சின்ன வியாபாரிகள் சிரமப்பட்டு உழைத்து தக்க பலனை அடைவாங்க. அரசாங்க அதிகாரிகளை எந்த காரணம் கொண்டும் பகைச்சுக்காதீங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
மனசுல நினைச்சதெல்லாம் நடந்து மனை நிறைவு தருகின்ற மாசமாக இது அமையுமுங்க. தள்ளிப்போன திருமணங்கள் தடையில்லாமல் நடந்து மனக்கஷ்டத்தை போக்குமுங்க. தொழிலுக்காக வாங்கிய கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பா நடந்து பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்குமுங்க. குடியிருக்கிற வீட்ட மாற்றக்கூடிய நிலை வரலாமுங்க. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்குமுங்க. சிலருக்கு பதவி உயர்வு வந்து நீண்ட நாள் கனவை நனவாக மாற்றுமுங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தி பெத்தவங்க மனச குளிர வைப்பாங்க. ஐ டி ஊழியர்கள் அமோகமான லாபம் அடைவாங்க. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் சாதனை புரிவாங்க. பங்குச்சந்தை வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்குமுங்க.ஆன்லைன் வர்த்தகங்களில் ஆசைப்பட்ட அளவுக்கு வருமானம் உண்டாகுமுங்க. மனதுக்குப் பிடித்த நண்பர்களிடம் குடும்பப் பிரச்சனைக்கு தீர்வு காண்பீங்க. இளம் வயதினர் காதலை வெளிப்படுத்தி கல்யாணத்துக்கு அடித்தளம் அமைப்பாங்க. ஆசைப்பட்ட நகைகளை வாங்கி கொடுத்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடிப்பீங்க. ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
உணவு கெட்டுப் போனா வெளியில கொட்டி விடணுங்க‌. மனசு கெட்டுப்போனா இறைவனோட பாதம் தொட்டு வழிபடனும்ங்க. எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலும் வீட்டில ஏற்படுற சண்டை சச்சரவுகள் மன நிம்மதியை கெடுக்குமுங்க. நீங்க அதிகமான நம்புன நபரே உங்களை ஏமாற்ற நினைப்பாருங்க. தொழிலுக்கு போட்டிகள் அதிகமாக முளைக்குமுங்க. நிதானமாக நடந்து சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. எலக்ட்ரீசியன், கொத்தனார் போன்றவர்களுக்கு இது பொற்காலமுங்க. வீடு தேடி வர்ற நல்ல வாய்ப்புகளை நழுவ விடாதீங்க. அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதினவங்க கண்டிப்பா வெற்றி பெறுவாங்க.
அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+