திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 30 #Margazhi,#Thiruppaavai
திருப்பாவை 30
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!

பாடல் விளக்கம்:
திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள். இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருளும், கண்ணனின் அருளும் கிடைக்கும்.
திருப்பள்ளியெழுச்சி 10
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவன் உய்யக்கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம்:
திருமாலும், பிரம்மனும் இந்த பூமியில் பிறக்க ஆசைப்பட்டனர், ஏக்கப்பட்டனர். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பூமியில் பிறந்த அனைவருமே திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுவதால்தான். அப்படிப்பட்ட அமுதனே, உனது பரந்து விரிந்த இந்தப் பெருந்தன்மையால், எங்களையும் ஆட்கொள்வாயாக. கருணைக் கடலே, உனது நித்திரையிலிருந்து எழுந்து வந்து எம்மை ஆட்கொள்வாயாக என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.












Click it and Unblock the Notifications