கர்நாடகா அரசியலில் ஆட்டம் காட்டப்போகும் சூரிய கிரகணம்..எந்த அரசியல்வாதிக்கு யோகம்..யாருக்கு சோகம்
சென்னை:மேஷ ராசியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. உச்சம் பெற்ற சூரியன் மீது சந்திரனின் நிழல் மறைக்கிறது. சில மணி நேரங்கள் கிரகணம் நீடிக்கும் என்றாலும் அரசு கிரகமான சூரியனின் ஆளுமைக்கு இது பாதிப்புதான். வியாழக்கிழமை நிகழ உள்ள இந்த சூரிய கிரகணம் சில ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்நாள் முதல்வர்களுக்கு சூரிய கிரகணத்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

முதல்வர் பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும் ஷிகான் தொகுதியிலும் போட்டியிடுகிறார். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் டி.கே. சிவகுமார் கனகபுரா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி குமாரசாமி
மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழப்போகும் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் சில நட்சத்திரங்களில் சில ராசிகளில் பிறந்த அரசியல் தலைவர்களுக்கு பதிப்பை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆளும் பாஜகவில் சில சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தற்போது பதவிகளில் உள்ள பிரபல தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க நேரிடலாம்.

பசவராஜ் பொம்மை: கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 2021ஆம் ஆண்டு யாருமே எதிர்பாராத நிலையில் முதல்வராக பதவியேற்றார். எடியூராப்பா பதவி விலகிய பின்னர் பசவராஜ் பொம்மைக்கு முதல்வர் பதவி தேடி வந்தது. கும்ப ராசியை சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு ஏழரை சனியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் 60வயதிற்கு மேற்பட்டவர் என்பதால் அரியணை தேடி வந்தது. அப்போது குருவும் சாதகமான நிலையில் இருந்தார். இப்போது ஜென்ம சனி நடக்கிறது. குருவும் இடப்பெயர்ச்சியாகி மூன்றாம் வீட்டிற்கு போகிறார்.
பசவராஜ் பொம்மைக்கு பரிகாரம்: கும்ப ராசியில் இருந்து மூன்றாவது இடமான மேஷ ராசியில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மூன்றாம் வீட்டில் மிக முக்கியமான 4 கிரகங்கள் சூரியன், ராகு, சந்திரன், புதன் என இருந்தாலும் கிரகண நாளில் ராகுவின் பிடியில்தான் சந்திரன், சூரியன் சிக்கியிருப்பார்கள். புதிய முயற்சிகளை அமாவாசை நாளில் செய்வார்கள். நாளைய தினம் கிரகணம் என்பதால் எந்த புது முயற்சியையும் செய்யாமல் இருப்பது நல்லது. சூரிய கிரகணம் பாஜகவை சேர்ந்த ஆளும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சாதகமற்றதாகவே உள்ளது. பாதிப்பில் இருந்து தப்பிக்க ஆதித்ய ஹிருதயம் படிக்கலாம்.

டி.கே.சிவகுமார்: கர்நாடகா மாநிலத்தில் எதிர்கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த சூரிய கிரகணம் சாதகமாகவே உள்ளது. அதே நேரத்தில் கட்சி தலைமை பதவியில் வகிப்பவர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் டி.கே. சிவகுமார் ரிஷப ராசியில் பிறந்துள்ளார். ரிஷப ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியன் உள்ளிட்ட 4 முக்கிய கிரகங்கள் ஏற்கனவே 12ஆம் வீட்டில் மறைந்திருக்கும் இந்த நேரத்தில் கிரகணமும் நிகழ்கிறது. பத்தாம் வீட்டில் சனி இருப்பதால் பதவியில் பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றாலும் தேர்தல் நேரத்தில் சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வழக்குகள் ரூபத்தில் வரலாம். டி.கே.சிவகுமார் ஏற்கனவே பணத்தை வீசியதாக சர்ச்சை எழுந்தது. எனவே செயல்களில் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் குரு பகவானும் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். எனவே பண விரையம் ஏற்படுவது மட்டுமல்லாது மதிப்பு மரியாதையிலும் பாதிப்புகள் வரக்கூடும். அரியணையில் அமர ஆசைப்பட்டால் மட்டும் போதாது கவனமாக அடி எடுத்து வைப்பது அவசியம்.

சித்தராமைய்யா: கும்ப ராசிக்காரர் சித்தராமைய்யா ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். 5 ஆண்டுகாலம் பதவியை நிறைவு செய்த முதல்வர் என்ற பெருமை பெற்றவர் சித்தராமைய்யா. தற்போதைய தேர்தலிலும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருக்கிறார். அதே நேரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி,மூன்றாமிடத்தில் ராகு உடன் சேரப்போகும் குரு எளிதில் பதவியை கொடுத்து விடாது. இந்த சூழ்நிலையில்தான் கும்ப ராசிக்கு மூன்றாமிடமான மேஷ ராசியில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. உச்சம் பெற்ற மூன்றாம் இடத்தில் வலு பெற்று இருப்பது யோகம்தான் என்றாலும் ராகு உடன் இணைந்து கிரகண தோஷம் பெற்ற சூரியன் பாதிப்பை ஏற்படுத்துவார் பதவியை தருவதில் தடைகளையும் ஏற்படுத்துவார். ஏற்கனவே அரச கிரகமான புதனும் வக்ர நிலைக்கு செல்வதால் சித்தராமைய்யா பதவியை பெற படாதபாடு படவேண்டும்.
எச்.டி.குமாரசாமி: யாருமே எதிர்பாராத அதிர்ஷ்டங்களுக்கு சொந்தக்காரர் என்றால் அது எச்.டி.குமாரசாமிதான். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை அமைந்தது பெரும்பான்மை இல்லாமலேயே காங்கிரஸ் கட்சியின் தயவினால் முதல்வராக அரியணை ஏறினார். அவரது கிரக சூழ்நிலை அவரால் முதல்வராக நீடிக்க முடியவில்லை. காரணம் மிதுன ராசிக்காரர்களுக்கு அப்போது கண்டச்சனி, அஷ்டமத்து சனி காலமாக இருந்தது. அவரது பதவியும் பறிபோனது. இப்போதய சூழ்நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு சனியும், குருவும் சாதகமாகவே உள்ளது. பாக்ய சனி பதவியே தேடி தரும். லாப ஸ்தானத்தில் உள்ள குரு, தொட்டதை துலங்க வைக்கும். நினைத்த காரியங்களில் வெற்றியை தேடித்தரும். சூரிய கிரகணமும் லாப ஸ்தானத்தில் நிகழ்கிறது. 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் 4 நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. இந்த கிரகங்களின் கூட்டணி மிதுன ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான யோகத்தை தரப்போகிறது. குரு பகவானின் பார்வையும் 7ஆம் வீட்டின் மீது விழுவதால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியும் பலமாகவே அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications