ராகு கேது பெயர்ச்சி 2023: சட்டென்று மாறும் வாழ்க்கை.. திருப்புமுனை யாருக்கு? - மின்னல் வேக பலன்கள்
சென்னை: ராகுவும் கேதுவும் நிழல் கிரங்களாக இருந்தாலும் மனிதர்களின் வளர்ச்சியில் நிஜத்தோடு தொடர்புடையவை. ராகு பகவான் மீன ராசிக்கும் கேது பகவான் கன்னி ராகிக்கும் இடப்பெயர்ச்சியாகும் இந்த காலத்தில் ராகு ரேவதி நட்சத்திரத்திலும் கேது சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர். ராகு கேதுவின் பயணம் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த கேது பகவான் கன்னி ராசிக்குள்ளே அடி எடுத்துவைக்கிறார். ராகு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். கடனாக கொடுத்து வராமல் இருந்த பணமெல்லாம் இனி கைக்கு வந்து சேரும். ராகு ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் சொந்த பந்தங்களிடம் இருந்த பிரச்சினை நீங்கும். வருமானம் அதிகரிப்பதால் சுப விரைய செலவுகளும் கூடும். விலகிப்போன சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். தலைமேல் அமர்ந்த கேது விலகிப்போனதால் தடுமாற்றம் நீங்கும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. குல தெய்வ வழிபாடு குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும். கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: ஐந்தாம் வீடான மீனத்தில் ராகு பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பூர்வ புண்ணிய ராகுவினால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இதனால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சிலருக்கு வீடு இடம் மாற்றும் யோகம் வரும். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலகட்டத்தில் நரம்பு பிரச்சினைகள் வந்து நீங்கும். கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். கடன் வாங்கிக்கொடுப்பது ஜாமின் கையெழுத்துப் போடுவது போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம் பணம் திரும்ப வரவே வராது. கேது லாப வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். நிலம் வீடு வாங்கலாம். புது வீட்டுக்குக் குடிபோகும் யோகம் தேடி வரும். அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் கடன் பிரச்சினைகள் நீங்கும். மனக்கவலைகள் முடிவுக்கு வரும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். குரு பகவானைப் போல ராகு செயல்படுவதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை சத்தம் வீட்டில் கேட்கப்போகிறது குதூகலம் அடையப்போகிறீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஜூன் 2024 வரை ராகு ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்வதால் நல்ல வேலை கிடைக்கும் வருமானம் அதிகரிப்பது போல செலவுகள் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் செல்வம் செல்வாக்கு கூடும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் பொற்காலத்தை அனுபவிக்கப்போகிறீர்கள். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நலமடையும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள்.
திருமணம் நடைபெறும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் காலத்தில் திடீர் பண வருமானம் வரும். பாக்ய ஸ்தானத்தில் கேது பகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி தர வேண்டாம். சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

கும்பம்: குடும்ப ஸ்தானம், தன வாக்கு ஸ்தானமான 2வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்வதால் பண வருமானம் கட்டுக்கடங்காமல் வரும். அதே போல செலவுகளும் வரும். எனவே செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன்பாக யோசித்து பேசுவது நல்லது. கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். பண விசயத்தில் உங்களை ஏமாற்றியவர்கள் தேடி வந்து வாங்கிய பணத்தை கொடுப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூன் 2024 வரைக்கும் ராகு ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கேது பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் பண விசயத்தில் கவனம் தேவை. பணம் கேட்பவர்களுக்கு எடுத்து கொடுத்து விட்டு தவிப்பதை விட இல்லை என்று சொல்லிப் பழகுங்கள். சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் செலவுகள் அதிகரிக்கும் குடும்ப விசயத்தை அடுத்தவரிடம் கூற வேண்டாம்.
மீனம்: ஜென்ம ராகு வருமானத்தை கொடுக்கும் அதே நேரத்தில் செலவுகளையும் கொண்டு வருவார். பணம் பல வழிகளில் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது மட்டும் கவனம் தேவை. ரேவதி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யப்போகும் காலத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். களத்திர ஸ்தானத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் குடும்பத்தில் ஈகோ பிரச்சினை வரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும்.












Click it and Unblock the Notifications