ராகு கேது பெயர்ச்சி 2023: அஷ்டம ராகு..குடும்ப கேது கஷ்டமா?.. சிம்ம ராசிக்காரர்களே.. பரிகாரம் இதோ
சென்னை: ராகு பகவான் மீன ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம ராகு குடும்ப கேது என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போகின்றனர். சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது.

சிம்மம் ராசி: குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டில் கேதுவும் 8ஆம் வீட்டிற்கு ராகு பகவானும் பயணம் செய்யப்போகின்றனர். ராகுவின் அஷ்டம ஸ்தான பயணம் மிகச்சிறந்த பலன்களைத் தரப்போகிறது. குருவின் வீட்டில் ராகு அமர்ந்து பயணம் செய்வதால் குரு பகவானைப் போல ராகு செயல்படுவார். உங்களால் பிள்ளைகளுக்கு சுகமான வாழ்க்கை அமையப்போகிறது. யோகமான கால கட்டமாக உள்ளது. விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார் ராகு பகவான். சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள்.
பொன் பொருள் சேர்க்கை: எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.
பண வருமானம்: குரு பகவானின் பார்வை வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கிடைக்கிறது. பல சிக்கல்களை சந்தித்து வந்த உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் தரப்போகிறது. செல்வ வளம் வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பிசினஸ் செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு நகை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நகை பணத்தை பத்திரப்படுத்துங்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
கவனம் தேவை: வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
குடும்ப கேது: இதுநாள் வரை தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும் அதிகரிக்கும். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும். பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும். சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். சொல்லும் செயலும் வெற்றியைத் தேடித் தரும். அதே நேரத்தில் பண விசயத்தில் கவனம் தேவை.
முன்னோர்களின் ஆசி: இரண்டாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். தன ஸ்தானம் சிறப்பாக அமைந்துள்ளது. எல்லையில்லாத அபரிமிதமான பண வருமானத்தை தரப்போகிறது. வியாபாரம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரப்போகிறது. பயம் பதற்றம் நீங்கப்போகிறது. நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வீடு கட்ட,பிசினஸ் செய்ய வங்கிக்கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு மிக அற்புதமான கால கட்டம்.
குடும்பத்தில் குதூகலம்: குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறும். பேச்சில் கவனம் தேவை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே பேச்சை குறைத்து செயலில் கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் பாம்பு கிரகம் அமரும் போது கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும் கவனம்.
ஆரோக்கியம்: மாணவர்களுக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்க யோகம் வரும். தடைகள் நீங்கி விசா கிடைக்கும். ஆன்மீக பேச்சாளர்களுக்கு இது அற்புதமான காலகட்டம். பேச்சினால் வருமானம் அதிகரிக்கும். கேது பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டின் மீது விழுகிறது. சுக ஸ்தானத்தில் கேதுவின் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகம் வரும். எட்டாம் வீட்டின் மீது கேதுவின் பார்வை விழுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும். அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றாலும் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு கேதுவினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும். மாணவர்கள் தினசரியும் விநாயகரை கும்பிட்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அடிக்கடி மவுன விரதம் இருப்பது நன்மையை கொடுக்கும். புதன்கிழமைகளில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று துளசி வழிபாடு செய்வது நல்லது. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி செல்வ செழிப்பையும் குபேரனாக்கும் யோகத்தையும் தரப்போகிறது.












Click it and Unblock the Notifications