ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 18 ஆண்டுகளுக்குப் பின் சில ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம் வரும்
ராகு, கேது நிழல் கிரகங்கள். 18 ஆண்டுக்குப் பின் மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் அமரப்போகின்றனர். சிலரது வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
மதுரை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றனர். அக்டோபர் மாதம் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு கேது பெயர்ச்சியால் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது. கூட்டணிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். சில ராசிக்காரர்கள் ராஜாதி ராஜயோகம் பெறப்போகின்றனர்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். நவகிரகங்களில் ஏழு கிரகங்களும் முன்னோக்கி நகர்ந்தால் நிழல் கிரகங்களான இரண்டு கிரகங்களுமே பின்னோக்கி நகர்பவை. இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். புது வேலை வாய்ப்பு அமையும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும்.மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிட்டும்.கிரகங்கள் மாறும் பொழுது தான் தெய்வ அனுகூலம் கிடைக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடவுள் அருள் கைகூடி வரும்.

ரிஷபம்
லாப ஸ்தானமான11ஆம் வீட்டில் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். லாபத்தை இரண்டு மடங்காக அள்ளிக்கொடுப்பார் ராகு. காரிய வெற்றியும் வாக்கு நாணயத்தையும் காப்பாற்றி கொள்ளலாம். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வஅருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

மிதுனம்
பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ராகு 10ஆம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிற்கும் வருகிறது. கை நிறைய சம்பாதித்து குடும்பத்தினரை சந்தோசபடுத்தியவர்கள் எல்லாம் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும். கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். வேலையில் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகள் உருவாகும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். அஷ்டம சனி கால நிலையில் துடுப்பில்லாத படகு போல தத்தளித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் நிம்மதியையும் தரப்போகிறது.

கடகம்
ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான். அலுவலகத்தில் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பம் ஓற்றுமை ஏற்படும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் நீங்கி மருத்துவ செலவு குறையும். ராகு கேது பெயர்ச்சி விடிவையும் விமோசனத்தையும் தரப்போகிறது. அஷ்டம சனி காலம் என்பதால் வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களே, கேது 2ஆம் இடத்திற்கும்,ராகு 8ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள். இந்த ராகு பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். தொழிலில் நிரந்தரமான வருமானம் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். சொல்லும் செயலும் வெற்றி பெறும். அதே நேரத்தில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். ராகு கேது பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

கன்னி
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறது. ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும் பண தேவைகளை பூர்த்தியாகும். உற்றார் உறவினர் நட்பு வட்டத்தால் உதவிகளை எதிர்பார்க்கலாம். பெற்றோர்களுக்கு வேதனையை கொடுத்த ஆண்கள் பெண்கள் இனி கருத்து வேற்றுமை மாறி ஓன்று சேரலாம். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும் கவனம் தேவை.

துலாம்
ஆறாம் வீடான எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். எதிரிகள் தொல்லை நீங்கும். போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வருமானம் கூடும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்புகள் உயரும். வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

விருச்சிகம்
இதுவரை போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ஆம் வீட்டிற்கு வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும். அர்த்தாஷ்டம சனி என்றாலும் ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தொழில் நிலை யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

தனுசு
இதுநாள்வரை காரியத்தடைகள்.தேவையில்லாத செலவுகள்,மனதெளிவு இல்லாத செயல்கள் வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லை இப்படி திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நான்காம் வீடான கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை தரும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

மகரம்
"ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். "காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும்.இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். சுப காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். புத்திர பாக்கியமும் பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். பிரச்சினைகள் பொடிப்பொடியாகப்போகின்றன.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வரலாம். ஆனால் கஷ்டங்களை தாண்டி உங்களுக்கு தேவைக்கு ஏற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும். தடைப்பட்ட சுப காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தொட்டது துலங்கும். கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். வருமானம் சிறப்பாக இருக்கும்.
ராகுவும் கேதுவும் நல்லதை மட்டுமே செய்வார்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.

மீனம்
ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே" என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார். ஜென்ம ராசியில் வருகிறார் ராகு. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு வரும். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications