சனி பெயர்ச்சி பலன்: அஷ்டமத்து சனி, கண்டச்சனி.. ஏழரை சனி.. அர்த்தாஷ்டம சனி ஆட்டம் ஆரம்பம்.. உஷார்
சென்னை: சனி பகவான் வக்ர கதி முடிந்து கும்ப ராசியில் நேர் கதியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்யப்போகிறார். சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம்தான். அஷ்டமத்து சனி, ஏழரை சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? இந்த கால கட்டத்தில் புதிய தொழில் தொடங்கலாமா? என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
கடகம்: உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். தொட்ட காரியம் தடைகளாகும். அலுவலகங்களில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கவோ, புதிய வேலைக்கோ முயற்சி செய்ய வேண்டாம். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

சிம்மம்: சனிபகவான் கண்டச்சனியாக உங்கள் ராசிக்கு நேர் எதிரே அமர்ந்திருப்பதால் உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வேலையில் பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். பணியிடங்களில் பேசும் போது கவனம் தேவை. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.
விருச்சிகம்: சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். வேலை தொழில் விசயமாக குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
மகரம்: ஏழரை சனியில் பாத சனி காலமாகும். இரண்டரை ஆண்டு காலம் சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்ப சனி குழப்பத்தை ஏற்படுத்தும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து சேரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். புதிய தொழில் தொடங்க இது ஏற்ற காலம் அல்ல கவனம் தேவை.
கும்பம்: ஏழரை சனியில் ஜென்ம சனியாக உங்கள் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். பண விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கடனாக தர வேண்டாம். கடன் வாங்கி தொழில் தொடங்க வேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்தாகி விடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையில் அதிக கவனமும் நிதானமும் தேவைப்படும். உங்களுடைய வேலையை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்: சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரை சனியின் ஆட்டம் முழுதாக ஆரம்பிக்கப்போகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். கிடைக்கும் வேலையை முதலில் தக்கவைத்துக்கொள்ளுங்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அதிகமாக கடன் வாங்கி அகலக்கால் வைக்க வேண்டாம். இந்த கால கட்டத்தில் புதிய தொழில் தொடங்கும் முன்பாக தசாபுத்தியை சரிபார்த்துக்கொள்வது நல்லது. வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். ஏழரை சனியின் பாதிப்புகள் குறைய தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடவும்.












Click it and Unblock the Notifications