சனி பெயர்ச்சி பலன் 2023: சந்தோஷம் தரும் சனிபகவான்.. யாருடைய குடும்பத்தில் குதூகலம்?
சென்னை: சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. இரண்டாம் வீடு சனி குடும்ப சனி காலமாகும். ராசி நாதன் சனி பகவான் 2025ஆம் ஆண்டு வரைக்கும் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வேலை, கல்வி, திருமணம் வாழ்க்கை மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மகரம்: ராசி நாதனும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதியுமான சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. பாத சனி காலம் என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி என்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து போங்க.

பாத சனி : சனி ராசிக்கு இரண்டில் பயணம் செய்வதால் கோபத்தை கட்டுப்படுத்தவும். நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்து 4ஆம் வீடு, 8ஆம் வீடு 11ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். குடும்பசனி குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும்.
குடும்ப சனி: கடனாக கொடுத்த பணம் திரும்ப வீடு தேடி வரும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
சுபகாரியங்கள் நடக்கும்: இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம் வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனைகளில் இருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது.
வேலைவாய்ப்பு: சொந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் இடமாற்றம் காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.
சொத்து சேரும்: இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும்.
ஆரோக்கியத்தில் அக்கறை: கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீர்கள். பெருமை பேச வேண்டாம். யாரைப்பற்றியும் குறை சொல்லி பேச வேண்டாம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரை தேவையற்ற செலவுகளையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறும்.
மாணவர்கள் கவனம்: மாணவர்களே படிப்பில் கவனம் செலுத்துங்கள் உற்சாகமாக இருக்கப் பழகுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்றும் போரட வேண்டி வரும். சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியின் 4ஆம் இடத்தை பார்ப்பதால் தடைபட்ட உயர் கல்வி தொடரும்.
கடன் வாங்க வேண்டாம்: சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ஆம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் நிதானம் அவசியம். கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நிறைய சாதகமான பலன்களைத் தரப்போகிறது.












Click it and Unblock the Notifications