Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் புத்தாண்டில் குரு பலனால் கல்யாண யோகம் யாருக்கு கிடைக்கப் போகுது பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாண வயசுதான் வந்திருச்சுடா என்று நேரடியாகவே பாடினாலும் பல ஆண்களுக்கு பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது. 80,90 களில் பிறந்த பலருக்கு இன்னமும் கெட்டிமேளம் கொட்டவில்லை. எத்தனையோ பரிகாரம் செய்தும் குருபலம் வரலையே என்று ஜோதிடர்கள் சொல்வதால் சோக கீதம் பாடிக்கொண்டிருக்கின்றனர். விகாரி வருடமும் முடியப்போகிறது. திருமணம் முடியலையே என்று ஏக்கத்தில் இருக்கும் இளைய தலைமுறையினர் பலருக்கு பிறக்கப் போகும் சார்வரி தமிழ் புத்தாண்டிலாவது கல்யாண யோகம் கைகூடி வருமா என்று பார்க்கலாம்.

குரு பார்வை கிடைத்தால் கல்யாண யோகம் கூடி வரும். சார்வரி புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு குரு பலனும் குரு பார்வையும் கிடைக்கிறது என்று பார்த்தால் சார்வரி புத்தாண்டு பிறக்கும் போது குரு பகவான் அதிசாரமாக மகரம் ராசியில் சஞ்சரிப்பார். அந்த கால கட்டத்தில் குருவின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசியின் மீது விழுகிறது இந்த ராசிக்காரர்களுக்கு குரு பலன் வந்து விட்டது. கல்யாண யோகமும் கைகூடி வரும்.

அதே போல குருவின் பார்வை குடும்பத்ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுந்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கும் கல்யாண யோகம் கைகூடி வரும். வரன் பார்க்கலாம் திருமணம் பேசி முடிக்கலாம். குருவின் பார்வை மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தில் விழுகிறது. மிதுனம் ராசிக்கு இரண்டாம் வீடான கடகத்தின் மீது விழுகிறது. சிம்மம் ராசிக்கு இரண்டாம் வீடான கன்னியின் மீது விழுகிறது. விருச்சிகம், மகரம், மீனம் ராசிகளுக்கு ஏழாம் வீடுகளான ரிஷபம், கடகம், கன்னியின் மீது விழுவதால் அந்த ராசிக்காரர்களும் கல்யாணத்திற்கு வரன் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசி நேயர்களே உங்களுக்கு விகாரி ஆண்டில் குரு எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு வந்து உங்க ராசியை பார்த்து குரு பலனை கொடுத்தார். ஆனி மாதம் வரை அதிசாரமாக செல்லும் போதும் சில மாதங்கள் குடும்ப ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் பார்க்கப் போகிறார். மீண்டும் ஆனி முதல் கார்த்திகை வரை ஒன்பதாம் வீட்டிற்கு வந்து உங்க ராசியை பார்க்கும் போதும் சுபிட்சமாக இருப்பீர்கள். வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும். மீண்டும் குருபகவான் கார்த்திகை முதல் நேரடியாக உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு சென்று நீச பங்க ராஜயோகம் பெற்று உங்க குடும்ப ஸ்தானம் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் குரு பலனால் சுகங்கள் தேடி வரும். சந்தோஷமான மனதிற்கு பிடித்த கல்யாண வாழ்க்கை அமையும் கொண்டாட தயாராகுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசி நேயர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு அஷ்டமத்து குருவாக இருந்தாலும் உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, நான்காம் வீட்டினை குரு பார்க்கிறார். குரு பலன் வந்து விட்டது. அதிசாரமாக செல்லும் போதும் சரி, கார்த்திகை மாதம் குரு பெயர்ச்சி நடந்து மகரம் ராசிக்கு குரு பெயர்ச்சியாகும் போதும் சரி உங்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்போகுது. வீட்டில் இப்போதே கல்யாண பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பார்கள். மனம் போல் திருமணம் நடைபெறும் அனுபவிங்க மக்களே. வசதி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறப்போகிறது.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி என்றாலும் அசர வேண்டாம் உங்களுக்கு குரு பார்வை இருப்பதால் குதூகலமாக இருப்பீர்கள். அதிசாரமாக மகரம் ராசியில் அமரும் குரு பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். ஆனி முதல் கார்த்திகை மாதம் வரை உங்க ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. கார்த்திகையில் குரு பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு சென்ற பின்னரும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேரப்போகிறீர்கள். கல்யாண யோகம் வந்து விட்டதால் சொந்த பந்தத்தில் வரன் இருந்தாலும் வளைச்சு போடப்பாருங்க. உங்களுக்கு காதல் வாழ்க்கை குதூகலத்தை தரும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம். உங்க ராசிக்கு அதிசார குருவின் பார்வை கிடைக்கிறது. அதே போல ஆனி முதல் கார்த்திகை வரை தனுசு ராசிக்கு திரும்பும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. நல்ல குடும்ப வாழ்க்கை கிடைக்கப் போகிறது. ஜோடி நல்ல ஜோடி இந்த மாப்பிள்ளை பொண்ணையும் பாரு என்று சொந்தக்காரர்களே பொறாமைப்படும் அளவிற்கு திருமணம் உங்களுக்கு ஜாம் ஜாம் என்று நடக்கப் போகிறது. கொண்டாட தயாராகுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு குரு பலன் கிடைத்திருக்கிறது. விகாரி ஆண்டில் உங்களுக்கு சில சந்தோஷ சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் சார்வரி தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு 100 சதவிகிதம் பொன்னான ஆண்டாக அமையப்போகிறது. குடும்பம் குதூகலமாக இருக்கும். சொந்த பந்தங்களால் வீடு நிறைந்திருக்கும் விருந்து விஷேசம் என சுப நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களுமான இந்த ஆண்டு நகரப்போகிறது. கல்யாணத்திற்கு பார்க்கும் வரன் கை கூடி வரும். திருமண விஷேசங்களை கொண்டாட தயாராகுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு சில மாதங்கள் குரு பலன் கிடைக்கப் போகிறது. சித்திரை முதல் ஆனி வரையிலும் கார்த்திகை முதல் பங்குனி வரையிலும் குரு பார்வை கிடைப்பதால் நீங்க கல்யாணத்திற்கு வரன் பார்க்கலாம். திருமணத்திற்கு பேசி முடிவு செய்து கொள்ளலாம். சொந்த பந்தங்கள் புடைசூழ சிலருக்கு திருமணம் சில மாதங்களிலேயே முடியும் யோகம் வரப்போகிறது. நீங்க சேமித்து வைத்திருந்த பணத்தை சுப செலவுகளாக மாற்றுவதற்கு இது சரியான நேரம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை ஏழாம் வீட்டிற்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியங்கள் நடைபெற யோகம் கூடி வரப்போகிறது. சுக்கிரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் அடிடா மேளத்தை பிடிடா தாலியை என்று பிடி பிடி என்று கல்யாண காரியங்கள் மள மளவென நடக்கப் போகிறது. சில மாதங்கள் தடைகள் இருப்பது போல இருந்தாலும் ஆனி முதல் கார்த்திகை மாதத்திற்குள் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது சுய ஜாதகத்தில் குரு பலமாக இருக்கும் பட்சத்தில் சந்தோஷமான சமாச்சாரங்கள் வாழ்க்கையில் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களே ஏழரை சனி காலம் முடிந்து இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறீர்கள். குடும்பத்தில் குரு அமர்ந்தாலும் குதூகலம் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்க ராசிக்கு ஏழாம் வீடான ரிஷபம் ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கப் போவதால் சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கோர்ட் படியேறியவர்கள் கூட சமாதானமாக போகும் காலம் வரப்போகிறது. எனவே சந்தோஷமாக இனி வரும் காலம் கொண்டாடுங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே ஜென்ம குருவின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுந்தாலும் எந்த விஷேசமும் இல்லையே என்ற கவலை வேண்டாம். சித்திரையில் அதிசாரமாகவும், கார்த்திகை முதல் நேரடியாகவும் பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்திற்கு போகும் குருவினால் குதூகலம் அடையப்போகிறீர்கள். கல்யாண பேச்சுவார்த்தைகள் வீட்டில் பேசத்தொடங்குவார்கள். சுய ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியை பொறுத்து திருமணம் பேசி முடிவு செய்யலாம்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களே, நீங்க எதையும் யோசித்து முடிவு செய்வீர்கள். உங்க ராசிக்கு ஏழாம் வீடான கடகத்தின் மீது குருவின் பார்வை கிடைக்கும் போது
உங்களுக்கு கல்யாண யோகம் வரப்போகிறது. திருமணத்திற்கு வீட்டில் ஜோராக பெண்ணோ பையனோ பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்தாலும் இரண்டாம் சுற்றில் அதாவது 30 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு தைரியமாக திருமணம் செய்யலாம். பொங்குசனி புதையலை கொடுப்பார் கூடவே நல்ல மண வாழ்க்கையையும் தேடி கொடுப்பார்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்துள்ளது. வருட ஆரம்பத்தில் அதிசார குருவின் பார்வை சுக ஸ்தானத்தின் மீது விழுகிறது. சுகமான வாழ்க்கை அமையும், லாப குரு உங்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுப்பார். நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகும். திருமணம் முடிந்து குழந்தைகளோடு இந்த சார்வரி வருடத்தை கொண்டாட தயாராகுங்கள்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு பிறக்கப் போகும் சார்வரி புத்தாண்டில் நிறைய சந்தோஷங்கள் நிகழப்போகிறது. மனதிற்கு பிடித்தமான வரன் கிடைக்கும். காரணம் உங்க குடும்ப ஸ்தானத்தின் மீது சில மாதங்கள் குருவின் பார்வை விழுகிறது. ஆனி முதல் கார்த்திகை மாதத்திற்குள் சிங்கிளாக இருப்பவர்கள் குடும்பத்தில் மிங்கிள் ஆகி விடுவீர்கள். சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்கள் ஆசியோடு திருமண பந்தத்திற்குள் இணையும் நேரம் வந்து விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+