2023 இயர் எண்டர் ஜோதிடம்: 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் 2024ல் அதிர்ஷ்டத்தை தரும் ராகு கேது
சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் ராகுவும் கேதுவும் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து பலனை தருவார்கள். ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். 2024ஆம் ஆண்டில் ரேவதி நட்சத்திரத்தில் ராகுவும் சித்திரை நட்சத்திரத்தில் கேதுவும் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் மேஷம் முதல் கன்னி ராசி வரை பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நிம்மதியும் சந்தோஷமும்: பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு என பலருமே 2023ஆம் ஆண்டில் பலரும் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகின்றனர். பிறக்கப்போகும் புத்தாண்டில் நல்ல வேலை கிடைக்குமா? நோய்கள் நீங்குமா? பொருளாதார நிலை உயருமா? மன நிம்மதி கிடைக்குமா என்று பலருமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ராகுவும் கேதுவும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் யாருக்கு தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

மேஷம்: கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்திற்கு கேது பகவான் பயணம் செய்வது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தில் அமைதி ஆனந்தம் ஏற்படும்.
ரிஷபம்: ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வருமானத்தையும் தரப்போகிறார். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.
மிதுனம்: பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையான பலனை கொடுக்கும் சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகள் உருவாகும். கடந்த காலங்களில் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு 2024ஆம் ஆண்டு யோகத்தை தரப்போகிறது. கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி கடன் சுமை படிப்படியாக குறையும்.
கடகம்: ராகு 9ஆம் வீட்டிலும் கேது மூன்றாம் வீட்டிலும் பயணம் செய்வது யோகமான அமைப்புதான். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரப்போகின்றனர்.
சிம்மம்: ராகுவும் கேதுவும் யோகத்தையும் பெருமை புகழையும் தரப்போகின்றனர். பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார் ராகு. சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் தேடி வரும்.
கன்னி: 2024ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரப்போகிறது. செய்யும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கூடும். கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் சொத்து சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். ராசியில் கேது பயணம் செய்வதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவுகாலம் பிறக்கும்.












Click it and Unblock the Notifications