சனி பெயர்ச்சி பலன் 2023: கை நிறைய சம்பளம்.. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. யாருக்கு தருவார் சனி பகவான்
சென்னை: சனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கும்பம் ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்மம் ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியையும் பார்வையிடுகிறார். இந்த பார்வையால் யாருக்கு தொழில் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
சனிபகவான் பார்வை: சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். சனி பகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

யாருக்கு எந்த சனி: சனி பகவான் மேஷ ராசிக்கு லாப சனி, ரிஷப ராசிக்கு தொழில் சனி, மிதுன ராசிக்கு அஷ்டம சனி விலகி பாக்ய சனி தொடங்கியுள்ளது. அதே நேரம் கடக ராசிக்கு அஷ்டம சனி காலமாகும். சிம்ம ராசிக்கு கண்டச்சனி, கன்னி ராசிக்கு ருண ரோக சத்ரு சனி, துலாம் ராசிக்கு பூர்வ புண்ணிய சனி, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி, தனுசு ராசிக்கு ஏழரை சனி விலகி தைரிய சனியாக நீடிக்கிறது. மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாக உள்ளது.
மேஷம் லாப சனி: லாப ஸ்தானதாதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பயணம் செய்வதால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கிடைப்பதோடு அதிகமாக சாதகமான சம்பவங்களை நடைபெறும். எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்ட உங்களுக்கு இனி எல்லாம் ஜெயமே. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு மடங்கு லாபமாக திரும்ப கிடைக்கும்.
ரிஷபம் தொழில் சனி: உங்க ராசிக்கு சுப யோகர் சனி. காரணம் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி பயணம் செய்வது அதிக நன்மையான பலன்களைத் தரும். கும்ப ராசியில் உள்ள சனி பகவானால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம் பலமடையும். காரணம் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். தன யோகம் அதிகம் கிடைக்கும். கடந்த காலங்களில் கடன்கள் அதிகம் ஏற்பட்டது. தடை தாமதங்கள் அதிகம் இருந்தது. இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுனம் பாக்ய சனி: அஷ்டம சனி காலம் முடிந்து ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய சனியாக பயணம் செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியும் பாக்யாதிபதியும் அவர்தான் என்பதால் ரொம்ப கெடுதல் செய்ய மாட்டார் கொடுத்து கெடுப்பார். தொழிலில் லாபம் வரும். புதிய தொழிலில் முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும்.
கடகம் அஷ்டம சனி: எட்டாம் வீட்டில் அஷ்டமாதிபதி சனி ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். அஷ்டம சனி என்பது கஷ்டங்களை கொடுக்குமே என்ற பயம் வேண்டாம். சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால் விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார். சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நிதானமும் பொறுமையும் அவசியம். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். புதிய தொழில் தொடங்குவதற்கு இது ஏற்ற காலமல்ல.
சிம்மம் கண்டச்சனி: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து பார்க்கும் கண்டச்சனியால் பெரிய அளவில் இருக்காது என்றாலும் தொழில் பார்ட்னர் குடும்ப பார்ட்டனர் விட்டுக்கொடுத்து போகவும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் சண்டை வரும் அப்புறம் சங்கடம்தான். எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருப்பீர்கள். சனி பகவான் சச யோகத்தை கொடுக்கிறார். உங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் சனியால் பெரிய அளவில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
கன்னி ருண ரோக சத்ரு சனி: தொழில் ஜீவனகாரகன் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் அற்புதமான கால கட்டமாக அமைந்துள்ளது. எத்தனையோ சோதனைகளை கடந்திருப்பீர்கள். தொழில் நஷ்டம், ஏமாற்றம், கடன் பிரச்சினைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். இனி எல்லாம் ஜெயமாகப்போகிறது. ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகமாகும். உங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.
துலாம் பூர்வ புண்ணிய சனி: ஐந்தாவது வீட்டில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பூர்வ புண்ணிய சனியால் நன்மைகளே நடைபெறும். பிள்ளைகளால் யோகங்கள் கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் தொடங்கும் தொழிலில் நன்மைகள் நடைபெறும். வீட்டில் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறப்போகிறது சந்தோஷமாக அனுபவிக்கத் தயாராகுங்கள்.
விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி என்றாலும் நல்ல பலன்களையே தருவார் வீடு நிலம் வாங்கலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நான்காம் வீட்டில் பயணம் செய்யும் சனி சச யோகத்தை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுமை தேவை. புதிய தொழில் தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
தனுசு தைரிய சனி: ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியோட தாக்கம் அதிகம் இருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காது. உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. ஏழரை சனி விலகி விட்டது. சனி பகவான் மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் தன்னம்பிக்கை தைரியம் கூடும். தொழிலில் லாபம் வரும் வீடு நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரும்.
மகரம்: சனி பகவான் உங்கள் ராசி அதிபதி. ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டில் பாத சனியாக தொடர்கிறார். வீண் வம்பு வாக்குவாதங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம். நா காக்க. காரணம் சனியின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும். எதையும் அவசரப்பட்டு பேசி தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும் என்பதால் சங்கடப்பட வேண்டாம்.
கும்பம்: உங்கள் ராசி அதிபதி சனி பகவான் ஜென்ம சனியாக அமர்ந்துள்ளார். சொந்த வீட்லயே அமரும் சனி சச யோகத்தை கொடுப்பார். ராசி அதிபதி ராசியில் அமர்வதால் யோகத்தை கொடுப்பார். 2025 வரை ஏழரை சனியாக ஜென்ம சனியாக தொடர்வதால் தொழில் ரீதியான மாற்றங்கள் மெதுவாக அமையும். புதிய தொழில் செய்ய அவசரப்பட வேண்டாம். பணத்தை அதிகம் முதலீடு செய்து அகலக்கால் வைத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
மீனம்: உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி சனி பகவான் விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். விபரீத ராஜயோக காலமாகும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் அதிக லாபத்தை தரும். பொருளாதாரத்தில் லாபம் அதிகரிக்கும் கூடவே செலவுகளும் வரும். சிக்கமான இருந்தால் நன்றாக பணம் சேமிக்கலாம்.
பலன் தரும் பரிகாரங்கள்: ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்ட சனியால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய விநாயகர் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம் செய்யுங்க. அன்னதானம் பண்ணுங்க. சனிபகவானுக்கு ரொம்ப பிடிக்கும். சனிக்கிழமை ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களிலும். சனியின் நட்சத்திரமான பூசம், அனுசம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும் தயிர்சாதம், வெண் பொங்கல் தானம் கொடுக்கலாம். அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவும். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.












Click it and Unblock the Notifications