சென்னை ஈசிஆர் பக்கம் போறீங்களா? 4 வழி உயர்மட்ட சாலை திட்டம் மீண்டும் தாமதம்! எல்லாம் போச்சு
சென்னை: சென்னையின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கட்டப்பட இருந்த 4 வழி உயர்மட்ட சாலை திட்டம் மீண்டும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் தினமும் இந்த சாலையை பயன்படுத்தும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் ஐடி ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திட்டத்தில் என்ன மாற்றம்?
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான சுமார் 13.4 முதல் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த உயர்மட்ட சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்தமும் விடப்பட்டிருந்தது. ஆனால், தவெக அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த திட்டத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த திட்டம் நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு, புதிதாக திட்ட அறிக்கை தயாரித்து, மீண்டும் புதிய டெண்டர் விட அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் இந்த திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்றாலும், பணிகள் தொடங்க இன்னும் நீண்ட காலம் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.
தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், முந்தைய ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை முழுமையாக முடிக்காமலேயே அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தில் இதுவரை 90 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத நிலத்தை கையகப்படுத்தாமல் பணிகளை தொடங்குவதில் சிக்கல் உள்ளது.
மேலும், கடந்த கால டெண்டர்களில் திட்ட மதிப்பீடு அதிகமாக இருந்ததாகவும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அரசு திட்டங்களின் செலவு 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் கடன் வாங்கி இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துள்ளதால், டெண்டர் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அப்படி வழக்கு தொடரப்பட்டால், திட்டம் இன்னும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் இழுபறியாக மாறும் அபாயமும் உள்ளது.
தினமும் சாலையில் தவிக்கும் மக்கள்
இந்த மேம்பாலம் வந்தால் 60 நிமிட பயணம் வெறும் 15 முதல் 20 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது திட்டம் தள்ளிப்போவதால் ஈசிஆர் சாலையில் பயணிப்பவர்கள் தொடர்ந்து கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 14 கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டும் 17 டிராபிக் சிக்னல்கள் உள்ளன. அதாவது சராசரியாக ஒவ்வொரு 820 மீட்டருக்கும் ஒரு சிக்னல் வருகிறது. இதுதவிர, இடதுபுறம் 190 மற்றும் வலதுபுறம் 157 என மொத்தம் 347 குறுக்கு சாலைகள் இந்த முக்கிய சாலையில் வந்து இணைகின்றன. இதனால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் நின்று நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஐடி ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதி
நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பனையூர், உத்தண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் ஆகிய ஓஎம்ஆர் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் காலை 8.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், திருவான்மியூர் எல்.பி. ரோடு சிக்னலை கடப்பதற்கே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.
அதேபோல், ஈசிஆர் சாலையில் ஏராளமான பிரபல பள்ளிகள் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான பள்ளி வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. தற்போது நீலாங்கரை - ஈஞ்சம்பாக்கம் இடையேயான 6.6 கிலோமீட்டர் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மட்டுமே நடப்பில் உள்ளது. எனவே, உயர்மட்ட சாலை பணிகளையும் அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
