18.4 கி.மீ அதிசயம்! சென்னை ஜிஎஸ்டி சாலையில் தினமும் போறீங்களா? இனி பயணம் செய்யும் முறையே மாறப்போகுது
சென்னை: சென்னையில் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கிளாம்பாக்கம் - மஹிந்த்ரா சிட்டி இடையே 18.4 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. அதாவது சர்வே உள்ளிட்ட பணிகள் இந்த மாதம் தொடங்க உள்ளது.

கிளாம்பாக்கம் - மஹிந்த்ரா சிட்டி உயர்மட்ட சாலை திட்டம்
சுமார் ₹3500 கோடி மதிப்பீட்டில் இந்த ஆறு வழி உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது. தாம்பரம் - வண்டலூர் இடையே ஏற்கனவே மேம்பாலங்கள் இருப்பதால், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த உயர்மட்ட சாலையில் ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய மூன்று இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் (Entry / Exit) இருக்கும்.
சென்னையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான ஜி.எஸ்.டி சாலையில் நீண்ட காலமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த சாலை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பெருங்களத்தூர் மேம்பாலத்தின் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க ₹12.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் எட்டு வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசும் புதுப்பித்துள்ளது. இந்த விரிவாக்கம் நகரின் முக்கியமான நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
எட்டு வழிச்சாலை விரிவாக்கம்
சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் (CMDA) கீழ், நெடுஞ்சாலைத் துறையானது பெருங்களத்தூர் மேம்பாலத்தின் அடியில் 1.5 கி.மீ நீளத்திற்கு சாலையை விரிவுபடுத்த உள்ளது. அங்கிருந்து எட்டு வழி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளன. வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருப்பதால் முதற்கட்டமாக நடைமேடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
தற்போது ஜி.எஸ்.டி சாலையில் சில பகுதிகள் நான்கு வழிச்சாலையாக இருப்பதால், மழைநீர் தேங்கி அடிக்கடி இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களை சமாளிக்க எட்டு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
புதிய மேம்பாலங்கள்
சென்னைக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல ஜி.எஸ்.டி சாலை ஒரு முக்கியமான வழித்தடமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, ஜி.எஸ்.டி சாலையில் ஏழு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
கிராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜி.எஸ்.டி) சாலையில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அடுத்த ஆறு மாதங்களில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே லிஃப்ட் வசதியுடன் கூடிய ஏழு புதிய பாதசாரிகளுக்கான நடைமேடை மேம்பாலங்களை (FOBs) அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் ஆகியவை புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் அமையவுள்ள இடங்களாகும். இந்த இடங்களில் அதிக பாதசாரி போக்குவரத்து இருப்பதால் பாலங்கள் கட்டப்படுகின்றன.
இந்த திட்டத்திற்கு ₹16.3 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி சாலையில் எட்டு வழிச்சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.












Click it and Unblock the Notifications