அரசு ஊழியர்கள் நினைத்தே பார்க்காத மாற்றம்.. உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசு அதிரடி முடிவு
சென்னை : அரசு அதிகாரிகள், தங்களின் கீழ் பணியாற்றுவோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது, கவனத்துடன், சுய கட்டுப்பாட்டுடன் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநீக்க நடவடிக்கையில் முடிவு எடுக்கும்போது அவசரம் கூடாது என்றும் இடைநீக்கம் செய்யப்பட்டால் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை அரசிடம் ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு அரசாணை இருந்து வந்தது.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்ட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "அரசு அதிகாரிகள், தங்களின் கீழ் பணியாற்றுவோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது, கவனத்துடன், சுய கட்டுப்பாட்டுடன் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநீக்க நடவடிக்கையில் முடிவு எடுக்கும்போது அவசரம் கூடாது.

இடைநீக்கம் செய்யப்பட்டால் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை அரசிடம் ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்கள் அடிப்படையில், தேவைப்பட்டால் இடைநீக்கத்தை தொடரலாம். குற்றவியல் நடவடிக்கை தொடர்பான வழக்குகளுக்கு இது பொருந்தாது. தொடர் இடைநீக்கம் தேவைப்படாது என்று கருதினால், அதை திரும்ப பெறலாம்.
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்து, ஊழல் தடுப்பு இயக்ககத்தில் அறிக்கை தரவேண்டும். அறிக்கை கிடைத்ததும் 4 மாதங்களுக்குள் இறுதி உத்தரவை துறைத் தலைவர் செயல்படுத்தவேண்டும். இந்த வழிகாட்டுதலை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். இதில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அரசாணையில் கூறியிருந்தார்.
ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. அதிகாரிகள் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நடவடிக்கை எடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட பணியாளருக்கு அதுபற்றிய விவரம் புரிவது இல்லை என்பது அரசு ஊழியர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்கள் மீதான துறை ரீதியான விசாரணை மற்றும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க காலவரம்பை நிர்ணயம் செய்தது.
இதன்படி தமிழக அரசு புதிய காலவரம்பை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாணை அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கத்தைப் பெற்ற பின்பு, தேவைப்படின் விசாரணை அதிகாரியை 15 நாட்களுக்குள் நியமிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
விசாரணை அதிகாரி தனது விசாரணையை 30 நாட்களுக்குள் முடித்து அறிக்கை அளித்திட வேண்டும். விசாரணை அறிக்கை அடிப்படையில் பிற புகார்களுக்கு 20 நாட்களும், லஞ்சப்புகாரை பொறுத்தமட்டில் 80 நாட்களும் எடுத்துக்கொள்ளலாம். துறைரீதியான இறுதி உத்தரவை பொறுத்தமட்டில் அரசை தவிர பிற ஒழுங்கு அதிகாரிகள் 7 நாட்களுக்குள்ளும், அரசு மற்றும் துறை தலைவர்கள் 30 நாட்களுக்குள்ளும் பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications