“மைக் முன்னாடிதான் பேசுறாங்க.. ஆக்ஷன் இல்லை".. வேலுமணி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி!
சென்னை: "அனைவரும் மைக் முன்னால் பேசுகின்றனர்.. ஆனால் ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை" என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி பெறாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது கோவை, சென்னை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி கடந்த ஆண்டு நவம்பரில் அனுப்பிய கடிதம் இன்னும் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்கில் நான் யாரையும் சும்மா விடமாட்டேன். 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரஅனுமதி பெறுவதில் இன்னும் எத்தனை நாட்களாக இதே காரணத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்.
எனவே, அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கின் நிலை குறித்த ஆவணங்களுடன் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்" எனக் கூறி விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும், "ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பாக அனைவரும் பேசுகின்றனர். அப்படி பேசினால் மட்டும் போதாது. அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தங்களை யாரும் தொட முடியாது என அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்கின்றனர். இந்த குற்றம் நடந்து தற்போது 2 தேர்தல்கள் முடிந்துவிட்டன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்" எனவும் நீதிபதி கருத்து தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications