நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்.. முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
பெங்களூர்: நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பிரகாஷ் ராஜுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரகாஷ் ராஜுக்கு எதிரான பிடி வாரண்ட் திரும்பப் பெற்று, அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதுதொடர்பாக திலீப் குமார் என்பவர் 48வது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம், 2 முறை அழைத்தபோதும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பிரகாஷ் ராஜ் நேற்று தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டார்.
நீதிமன்ற சம்மன் நகல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், ஊடகங்கள் மூலமாகத்தான் இது தெரியவந்ததாகவும், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பிரகாஷ் ராஜ் பெயர் நீக்கப்பட்டதாகவும் பிரகாஷ் ராஜ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு ரூ.4,000 ரொக்கப் பிணை வழங்குமாறு உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கியது. பிரகாஷ் ராஜுக்கு எதிராக எழுந்துள்ள வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகார் குறித்து வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications