ஆன் ரோடு விலை அள்ளும்.. மாரி செல்வராஜூக்கு உதயநிதி ஸ்டாலின் தந்த காரின் விலை தெரியுமா?
சென்னை: நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் சொகுசு காரை பரிசாக வழங்கி உள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ளது மாமன்னன் படம். ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், தனித்தொகுதி அரசியல், இடஒதுக்கீடு என்று பல்வேறு அரசியல்களை வலுவாக இந்த படம் பேசுகிறது.

முக்கியமாக என்னதான் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலில் மேலே வந்தாலும், தனித்தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆனாலும் கூட அவர்களால் கடைசி வரை அதிகார வர்க்கத்தில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் மேலே வந்தாலும் கூட அவர்களை ஒடுக்க அங்கேயும் சாதி இருக்கிறது என்பதை வலுவாக இந்த படம் காட்டி இருக்கிறது.
முக்கியமாக ரிலீஸ் ஆன நாளில் இருந்தே இந்த படம் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பட்ஜெட்டை விட தற்போது அதிக வசூலை இந்த படம் பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே அதிக வசூல் வாங்கிய படம் இதுதான் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்த படமும் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி காரணமாக பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நடிகர் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இன்று கார் ஒன்றை பரிசளித்தார்.
மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று பரிசளித்தார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க 'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி, என்று கூறியுள்ளார்.
இதற்கு மாரி செல்வராஜ் அளித்த பதிலில், மாமன்னன் கதை எந்த புள்ளியில் தொடங்கியதோ சரியாக அந்த புள்ளியில் நின்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் கரம் பற்றி பெரும் நெகிழ்ச்சியோடும் சொல்கிறேன் அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி ஸ்டாலின் சார், என்று கூறியுள்ளார்.
இந்த கார் மினி கூப்பர் கண்ட்ரிமேன் கார் ஆகும். இதன் மதிப்பு 47 லட்சம். ஆன் ரோடு மதிப்பு 52 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications