கையில் இருக்கும் மொத்த காசும் கரைஞ்சிடும்.. கார் மீது கை வைக்கும் முன்பு இதை 5 விஷயங்களை மறக்காதீங்க
சென்னை: சொந்தமாக ஒரு கார் என்பது இப்போதும் கூட பல கோடி இந்தியர்களுக்கு கனவாக இருக்கும். அப்படி ஆர்வத்தில் கார் வாங்க செல்லும்போது நாம் சில விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிடுவோம்.. அது அப்போது சிறிய விஷயங்களை போல தெரிந்தாலும் கூட பிறகு அதுவே நமக்கு மிக பெரிய செலவை வைத்துவிடும்.
முதல் முறையாக கார் வாங்குபவர்கள் ஷோரூமில் சொல்லும் விலையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்வார்கள். ஆனால், காரை வீட்டுக்கு எடுத்து செல்லும் போது நாம் செலுத்தும் தொகை அவர்கள் சொல்வதை விட எப்போதுமே அதிகமாகவே இருக்கும். எக்ஸ்-ஷோரூம் விலையுடன் சாலை வரி, வாகன பதிவு, இன்சூரன்ஸ், கூடுதல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட ரேட்டும் சேரும்போது ஆன்-ரோடு விலை கணிசமாக உயர்கிறது.

கார் வாங்கும் உற்சாகத்தில் சில முக்கிய செலவுகளை பலரும் கவனிக்க தவறிவிடுகின்றனர். எனவே, கார் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 5 செலவுகள் குறித்து நாம் பார்க்கலாம்!
1. இன்சூரன்ஸ்
காரை ஷோரூமிலிருந்து வெளியே எடுப்பதற்கு முன்பு இன்சூரன்ஸ் பெறுவது அவசியம். இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயம். ஆனால், இது மட்டும் இருந்தால் உங்கள் காருக்கு ஏற்படும் சேதத்தை இது கவர் செய்யாது. அதாவது உங்களிடம் 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் மட்டும் இருக்கிறது என வைத்து கொள்வோம். எதிர்பாராத விதமாக நீங்கள் விபத்தில் சிக்கினால் எதிரே வந்தவருக்கு உங்களிடம் இருக்கும் 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் கவரேஜ் கிடைக்கும். ஆனால், உங்களது காருக்கு ஏற்படும் சேதத்திற்கு பணம் கிடைக்காது.
எனவே, புதிய கார் வாங்குபவர்கள் தங்களின் விரிவான காப்பீட்டைத் தேர்வு செய்யலாம். குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசியே சிறந்தது என்று கருதக்கூடாது. வாகனத்தின் காப்பீட்டு மதிப்பு, விலக்குகள், கிளைம் உதவி மற்றும் கேஷ்லெஸ் வசதி கொண்ட கேரேஜ்கள் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
2. இன்சூரன்ஸ் ஆன்-ஆன்கள்
புது கார்களுக்கு bumper to bumper இன்சூரன்ஸ் போடுவது சிறந்தது. ஆனால், இந்த ஜீரோ டெப்ரிசியேஷன், இன்ஜின் பாதுகாப்பு, சாலையோர உதவி ஆகியவை ஆட் ஆன்களாகவே இருக்கும். அதாவது கட்டாயம் இல்லை. நீங்கள் கூடுதல் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் வாங்குவது ப்ரீமியம் தொகையை கணிசமாக அதிகரிக்கும்.. அதேநேரம் பிரீமியத்தை குறைப்பதற்காக அனைத்தையும் நிராகரிப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. காரின் மதிப்பு, பயன்படுத்தும் இடம், பார்க்கிங் வசதி, பயன்பாடு ஆகியவற்றை பொறுத்து சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.
3. முக்கியமான செலவு
ஃப்ளோர் மேட், சீட் கவர், இன்ஃபோடெயின்மென்ட் வசதிகள், டாஷ் கேமரா உள்ளிட்ட ஆக்சஸரீஸ்கள் தனி உதிரி பாகங்களாகவே இருக்கும். அவையும் காரின் இறுதி விலையை கணிசமாக உயர்த்தும். ஷோரூமில் வழங்கப்படும் ஒவ்வொரு பொருளும் அவசியமானது என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளின் விலையையும் தனித்தனியாக கேட்டு, அது வேண்டுமா.. வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்,
4. வாரண்டி- கவனிக்க வேண்டியது!
கார் வாரண்டியும் மோட்டார் இன்சூரன்ஸும் தனித்தனியானது. வாரண்டி என்பது அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, உற்பத்தி குறைபாடுகள் அல்லது உதிரிப்பாகங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும். ஆனால் விபத்து, திருட்டு, இயற்கை பேரிடர்கள் ஆகியவை வாரண்டியில் கவர் ஆகாது. இதற்கு தான் தனியாக இன்சூரன்ஸ் இருக்கிறது. வழக்கமான பராமரிப்பு, தேய்மானம் மற்றும் இயந்திர கோளாறுகள் சாதாரண காப்பீட்டில் இடம்பெறாமல் இருக்கலாம். எனவே, இரண்டிற்குமான வேறுபாட்டை தெளிவாக புரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள்
5. குறைந்த பிரீமியம்- அதிக செலவு
இன்சூரன்ஸ் எவ்வளவு குறைவு என்பதை பார்க்க வேண்டாம்.. தேவைப்படும் நேரத்தில் அது எவ்வளவு பாதுகாப்பு வழங்கும் என்பதை மட்டுமே கவனிக்க வேண்டும். குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசியில் காப்பீட்டு மதிப்பு குறைவாக இருக்கும். விலக்குகள் அதிகம் இருக்கும். கிளைம் உதவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்கள் திருப்திகரமாக இருக்காது. அதாவது இன்சூரன்ஸ் எடுக்கும்போது குறைந்த ப்ரீமியமாக இருந்தாலும் எதாவது சிக்கல் ஏற்பட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும். எனவே, காரின் மொத்த செலவின் ஒரு பகுதியாகவே இன்சூரன்ஸை கருத வேண்டும்!
எனவே, எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் கேட்காமல்.. பதிவு கட்டணம், சாலை வரி, இன்சூரன்ஸ், ஆக்சஸரீஸ் மற்றும் இதர கட்டணங்கள் அடங்கிய முழுமையான ஆன்-ரோடு விலையை மிக தெளிவாக டீலரிடம் கேட்க வேண்டும். இன்சூரன்ஸை பொறுத்தவரை, அதன் விலை எவ்வளவு என்பதை காட்டிலும் கவரேஜ் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
