தமிழ்நாடு உள்ளே வரும் முதல் எக்ஸ்பிரஸ் வே! ரூ.20000 கோடியில் ராட்சச பசுமை வழிச்சாலை! எங்கே வருது?
சென்னை: சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது 6 முதல் 7 மணி நேரமாக உள்ள சென்னை - திருச்சி இடையேயான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
இங்கே ரூ. 20,000 கோடி மதிப்பீட்டிலான புதிய பசுமை வழிச்சாலை திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்துள்ளது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் விஜய் விடுத்த முக்கிய கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த மெகா திட்டத்திற்கான முதற்கட்ட நிலம் கையகப்படுத்துதல் மற்றும் திட்டமிடல் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் இரண்டாவது நீண்ட எக்ஸ்பிரஸ்பேவே
தற்போது கட்டுமானத்தில் இருக்கும் சென்னை - பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அமையவிருக்கும் இரண்டாவது மிக நீளமான அதிவேகச் சாலை திட்டம் இதுவாகும். தமிழ்நாடு உள்ளே நீண்ட தூரம் வரக்கூடிய முதல் எக்ஸ்பிரஸ்வே ஆகும் இது.
சுமார் 300 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய சாலை, தற்போதைய சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கே அமையவுள்ளது. இந்தச் சாலை சென்னை ரிங் ரோட்டில் தொடங்கி, மொத்தம் 12 மாவட்டங்கள் வழியாகச் சென்று திருச்சியை அடையும்.
கிராமங்களில் உள்ளே வாகனங்கள் நுழையாத வண்ணம் கட்டுப்பாடுகளுடன் அமைக்கப்படும் இந்த 6 வழிச்சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சட்டப்பூர்வமாக பயணிக்க அனுமதிக்கப்படும். மேலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க முழுமையாக ஜிபிஎஸ் சார்ந்த டோல் கட்டண முறை இதில் அமல்படுத்தப்பட உள்ளது.
திருச்சியில் தொழில் வளர்ச்சி
தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சிக்கு சாலை செல்வதன் மூலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் மாவட்டங்களின் பயண நேரமும் பெருமளவு குறையும். அதுமட்டுமின்றி, கோயம்புத்தூர், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கும் மக்கள் திருச்சியிலிருந்து எளிதாக பயணிக்க முடியும். தற்போதைய சூழலில் சென்னை, கோயம்புத்தூர் போல திருச்சியில் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி உள்ளது. இது மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பசுமை வழிச்சாலை சென்னை துறைமுகத்தை இணைக்கும் புறவழிச்சாலையுடன் இணைக்கப்படுகிறத.
இதனால் திருச்சியில் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெறும் 3 மணி நேரத்தில் திருச்சிக்கு கொண்டு சேர்க்க முடியும். இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பண்டிகை கால போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி
பொங்கல், தீபாவளி, பொதுத்தேர்தல் மற்றும் வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிப்பதால், தற்போதைய தேசிய நெடுஞ்சாலையில் விக்ரவாண்டி முதல் மதுராந்தகம், செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய மாற்று வழிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் திருச்சி நெடுஞ்சாலையையே நம்பியுள்ளனர். இந்த புதிய பசுமை வழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது தற்போதைய நெடுஞ்சாலையின் வாகன நெரிசல் பாதியாகக் குறையும்.
வனப்பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்கள் வழியாக இந்தச் சாலை கடந்து செல்வதால், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் சில சவால்கள் உள்ளன. இருப்பினும், முதல்வர் விஜய் இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதால், மாநில அரசின் வருவாய்த்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதோடு, ஒரு வருடத்திற்குள் அனைத்து சட்டப்பூர்வ பணிகளும் நிறைவடையும் எனத் தெரிகிறது. திருச்சியினுள் இந்தச் சாலை நுழைவதற்கு ஏதுவாக காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலமும் கட்டப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications