சோபியா கடைசியாக ஆண் நண்பருக்கு போட்ட போன்.. கறி வெட்டும் கத்தியுடன் நின்ற கணவர்.. கலங்கிய மாங்காடு
சென்னை: மாங்காடு சோபியா வீட்டில் நடந்த ஒரு குடும்ப சண்டை, கடைசியில் ஒரு உயிரையே அநியாயமாக பறித்து விட்டது.. கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய ஒரு செல்போன் பேச்சு, தொடர்ந்து தம்பதிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி வந்திருக்கிறது. அதுக்காக இவ்வளவு பெரிய விபரீதத்தில் முடியும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன நடந்தது சென்னை அருகே?
மாங்காடு அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் முஜைதீன் (30). இவர் கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோபியா (26). 2 பேருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

சென்னை மாங்காடு
கடந்த சில நாட்களாக சோபியா செல்போனில் அடிக்கடி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதைப் பார்த்த முஜைதீன், யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். ஆனால், சோபியா சரியான பதில் சொல்லவில்லையாம்.. இதனால் சோபியா மீது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.
சந்தேகப்பட்டு கேட்டும்கூட, சோபியா தொடர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டேயிருந்துள்ளார்.. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போனில் நீண்ட நேரம் பேசக்கூடாது என்று முஜைதீன் மனைவியை கண்டித்திருக்கிறார்.
சோபியா ஆண் நண்பர்
இந்த நிலையில், நேற்றிரவும் சோபியா ஒரு ஆணுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த முஜைதீன் பயங்கர கோபமடைந்து விட்டார்.. சோபியாவை கண்டித்ததுடன், இனிமேல் செல்போனில் பேசக்கூடாது என்றும் கறாராக சொன்னார்..
அதற்குப் பிறகும் சோபியா தொடர்ந்து செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முஜைதீன், வீட்டில் இருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, சோபியாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட சோபியா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். காயம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மனைவி இறந்துவிட்டதை உறுதி செய்த பிறகு முஜைதீன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே மாங்காடு போலீசார் அங்கு வந்து சோபியாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கறிக்கடைக்காரர் தந்த அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முஜைதீனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மாங்காடு பஸ் ஸ்டாண்டு அருகே நின்று கொண்டிருந்த முஜைதீனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை ஸ்டேஷனுக்கும் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இதே மாங்காடு பகுதியில் கடந்த 26-ம் தேதியும் செல்போன் தொடர்பாக ஒரு கொலை நடந்திருந்தது. காதலிக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறி யுவனேஷ் (20) என்பவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்தனர். கொலை வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, நண்பர்கள் சேர்ந்து யுவனேஷ் உடலை பெரிய கல்லுடன் சேர்த்து, மாடு கட்டுவதற்கு பயன்படுத்தும் கயிறு மூலம் இறுக்கி கட்டி, அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் வீசி சென்றனர்.
இப்போது அதே மாங்காடு பகுதியில் செல்போனில் நீண்ட நேரம் பேசியது தொடர்பான சந்தேகத்தில் சோபியா கொலை செய்யப்பட்டிருக்கிறார்... ஏற்கனவே தமிழகத்தில் வன்முறைகள் பெருகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.. இப்போது ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 கொடூர சம்பவங்களும் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.


Click it and Unblock the Notifications
