என்ன மஹிந்திரா இதெல்லாம்? சர்வீஸ் கூட விட முடியாமல் தவிக்கும் கஸ்டமர்கள்!
பெங்களூர்: பவர்ஃபுல் இன்ஜின், ஜெர்மானிய சொகுசு கார்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள சேஸிஸ், பிஎம்டபிள்யூவிலுள்ள மியூசிக் சிஸ்டம், இன்ன பல அம்சங்களுடன் ஓனர்களுக்கு ஓவர் பூரிப்பை கொடுக்கும் மஹிந்திரா கார்கள், சர்வீஸ் என வந்துவிட்டால் தலைவலியை கொடுத்து வருகின்றன. அதற்கு ஒரு நல்ல உதாரணம், தற்போது நடைபெற்று வரும் சாப்ட்வேர் அப்டேட்தான்.
முதல் சர்வீஸ் 2 ஆயிரம் கிலோ மீட்டரில் விட வேண்டியது XUV 7XO போன்ற ப்ரீமியம் கார்களுக்கான வரைமுறையாக வகுத்துள்ளது மஹிந்திரா, ஆனால், முதல் சர்வீசை கூட செய்ய முடியாமல் உரிமையாளர்கள் ஒவ்வொரு சர்வீஸ் சென்டருக்கும் புக் செய்து, வாகனத்தை சரிபார்க்க ஆளில்லாமல் புக்கிங்கை ரத்து செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர், கண்ணன் என்பவர் நம்மிடம் பேசுகையில், விளக்கமாகவே கூறினார். நான் முதல் சர்வீசுக்கான கிலோ மீட்டர் வரம்பை கடந்துவிட்டேன். தற்போது 2300 கி.மீ கார் ஓடிவிட்டது. சர்வீஸ் புக்கிங்கை ஆப் மூலமாக மட்டுமே செய்ய முடியும் என்பதால் செய்து வைத்தேன். சர்வீஸ் தேதி வந்த பிறகும் யாருமே தொடர்பு கொள்ளாததால் சந்தேகப்பட்டு கால் செய்து கேட்டேன். ஆனால் சாப்ட்வேர் அப்டேட் நடப்பதால் சர்வீசுக்கு வாகனங்களை எடுக்க முடியாது என திடீரென தெரிவித்தனர்.
வேறு சர்வீஸ் சென்டருக்கு புக் செய்துவிட்டு, ஏற்கனவே பட்ட அனுபவம் நடக்க கூடாது என்பதற்காக உடனே கால் செய்து புக் ஆகிவிட்டதா என்று கேட்டேன். அவர்களும் சாப்ட்வேர் அப்டேட் என்ற அதே காரணத்தைக் கூறி, சர்வீசுக்கு வாகனத்தை எடுக்க முடியாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டனர். எனக்கு வெறுப்பே வந்துவிட்டது. "அப்படியானால் உங்கள் சர்வீஸ் சென்டர் ஊழியர்களுக்கு லீவு கொடுத்துவிட்டீர்களா?" என்று நேரடியாகவே கேட்டேன். "ஆம்" என்று பதில் வந்தது என்றார் ஆதங்கத்துடன்.
பெங்களூரைச் சேர்ந்த டாக்டரான ஆகாஷ் என்பவர் நம்மிடம் பேசுகையில்.., "ஆப் மூலமாக புக் செய்யும்போது புக்கிங் ஆகிவிட்டது என காண்பிக்கிறது. நாமும் நம்பி இருக்கிறோம், ஆனால் கடைசி நிமிடம் வரை யாரும் நம்மை தொடர்புகொள்வதில்லை, நாமே கேட்டபிறகுதான், புக்கிங்கிற்கு எடுப்பதில்லை என்ற உண்மை தெரிகிறது.
முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட வாகனங்களை சர்வீஸ் செய்த நிலையில், தற்போது ஆப் மூலமாக 30 ஸ்லாட்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்கிறார்கள். நான் XUV 7XO பெட்ரோல் வாகனம் வைத்துள்ளேன். நீண்ட தூர பயணங்களுக்கு அதை ஓட்டிச் செல்வது அலாதியான அனுபவம். ஆனால் சர்வீஸ் செய்யாமல் என்னால் ஓட்ட முடியவில்லை. திருமணம் நிச்சமாகிவிட்ட பிறகு, திருமண தேதியை தள்ளிக்கொண்டே போவதை போல உள்ளது எனது மன ஓட்டம்" என்றார் கோபம் கலந்து நகைச்சுவையுடன்.
இதுகுறித்து மஹிந்திரா சர்வீஸ் சென்டர்களை தொடர்பு கொண்டு கேட்டோம்.. "சாப்ட்வேர் அப்டேட் என்பது தலைமையிடமிருந்து எங்களுக்கு வந்துள்ள தகவல். ஆப் மூலமாக மட்டுமே இனிமேல் புக்கிங்கும் செய்ய முடியும். நேரடியாக வாகனத்தை சர்வீஸ் சென்டரில் விட்டு சர்வீஸ் செய்ய முடியாது. அப்படி செய்தால் பில் கூட ரெடி செய்ய முடியாத அளவுக்கு சிஸ்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் அப்டேட் ஆகும்வரை இப்படித்தான் தாமதமாகும்" என்றனர்.
சென்னையின் பல சர்வீஸ் சென்டர்கள் நாங்கள் சர்வீசுக்கு எடுக்க ஓகே எனக் கூறியதை நமது கள ஆய்வு உறுதி செய்தது. ஆனால் பெங்களூரில்தான் இந்த பிரச்சினையாம்.
ஜப்பானின் சுசுகியோ, டோயோட்டோவோ, ஜெர்மானிய ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா போன்ற பிராண்டுகளோ, கொரியாவின் கியா, ஹுண்டாய் போன்ற பிராண்டுகளிலுள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் இணைத்து, அதாவது ஜப்பான் கார் நிறுவனங்கள் தரும் இரைச்சலற்ற அனுபவம், ஜெர்மன் கார்களின் டிரைவர் ஃபோகஸ் கொண்ட டிரைவிங் அனுபவம், கொரிய நிறுவனங்கள் வைத்துள்ள பல வகை ஃப்யூச்சர்களை இணைத்து XUV 7XO போன்ற ப்ரீமியம் கார்களை மஹிந்திரா தந்தபோதிலும், சமையலை சிறப்பாக செய்துவிட்டு பந்தி வைக்க ஆளில்லாமல் தேடும் நிலையில் அதன் சர்வீஸ் சென்டர்கள் நடந்துகொள்வது தகுமா? என்ன இருந்தாலும் இந்திய பிராண்டுகள் இப்படித்தானே கஸ்டமர்களை கையாளுகின்றன என்ற அவப்பெயர் தேவையா?


Click it and Unblock the Notifications
