"நீங்க ஏன் வந்தீங்க?" திருப்பதியில் MR Radha சொன்ன மாஸ் பதில்! ராதிகா பகிர்ந்த எமோஷனல் பிளாஷ்பேக்!
தமிழ் சினிமாவின் 'நடிப்பு அரக்கன்' எனப் புகழப்படும் எம்.ஆர். ராதா என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரது கணீர் குரலும், அனல் பறக்கும் பகுத்தறிவுப் பேச்சுகளும்தான். ஆனால், ஒரு தீவிர நாத்திகவாதியாக அறியப்பட்ட அவர், திருப்பதி ஏழுமலையான் சன்னிதானத்திற்குச் சென்றால் எப்படி இருக்கும்? அங்கிருந்த மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த நக்கல் கலந்த பதிலடி மற்றும் தனது மகள் ராதிகாவுக்கு அவர் கொடுத்த அந்த 'பவர்ஃபுல்' ஆசீர்வாதம் குறித்த சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

திருப்பதியில் பரவிய பரபரப்பு
ராதிகா தனது சிறுவயதில் அம்மாவோடு திருப்பதி சென்றபோது, யாரும் எதிர்பாராத விதமாக எம்.ஆர். ராதாவும் அவர்களுடன் சென்றுள்ளார். பகுத்தறிவுப் பகலவனின் சீடரான இவரைச் சன்னிதானத்தில் பார்த்ததும் அங்கிருந்த பக்தர்களுக்குப் பெரிய அதிர்ச்சி. "என்னது, இவர் எங்கே இங்கே?" என்ற ஆச்சரியப் பார்வையோடு பலரும் அவரைப் பார்த்துள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சிலர், "நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க?" என்று நேரிடையாகவே கேட்டுவிட்டனர். அதற்குத் தனது டிரேட்மார்க் ஸ்டைலில் பதிலளித்த எம்.ஆர். ராதா, "உன் வேலை என்னவோ அதைப் போய் பாரு... நான் வந்திருக்கேன், நீ உள்ளே போ!" என்று அதிரடியாகக் கூறி அங்கேயே நின்றாராம்.
அப்போது ராதிகா சாமிக்குச் சந்தனம் கொடுத்ததைப் பார்த்த எம்.ஆர். ராதா, அவரிடம் "ஏய்.. என்ன இவ்வளவு சந்தனம் போடுவீங்களா ஸ்வாமிக்கு?" என்று நக்கலாகக் கேட்டுள்ளார். ஒரு நாத்திகராகத் தன் கொள்கையில் உறுதியாக இருந்தாலும், மகளின் செயலை அவர் கவனித்துக் கிண்டல் செய்த அந்தத் தருணம் இன்றும் பசுமையாக நினைவிருப்பதாக ராதிகா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அப்பாவின் அந்த ஒரு பொட்டு... மாறிய தலைவிதி
ராதிகா முதன்முதலில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் புகழ்பெற்ற 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் படப்பிடிப்புக்காக ராதிகா தயாராகிக் கொண்டிருந்தார். வீட்டில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தபோது உள்ளே வந்த எம்.ஆர். ராதா, "என்னடா மேக்கப் போடுறியா?" என்று கேட்டுள்ளார். பின்னர் ராதிகாவின் நெற்றியில் பொட்டு வைத்து, "என் தொழில் உனக்கு இருக்கட்டும்" என்று மனதார ஆசீர்வதித்துள்ளார். 15 வயதில் அந்த வார்த்தைகளின் கனம் ராதிகாவுக்குப் புரியவில்லை என்றாலும், இன்று அவர் அடைந்திருக்கும் அத்தனை புகழுக்கும் அந்த ஆசீர்வாதமே அஸ்திவாரம் என்பதை அவரது தாயார் இப்போதும் நினைவுபடுத்துவாராம்.
கலைஞர் கொடுத்த கௌரவம்
தந்தை கொடுத்த அந்த நடிப்புத் திறமையால்தான், கலைஞர் கருணாநிதியால் 'கலையரசி' என்ற பட்டம் தனக்குக் கிடைத்ததாக ராதிகா பெருமையுடன் கூறுகிறார். கலைஞரைத் தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் ராதிகா, வரவிருக்கும் 'தாய் கிழவி' படத்திலும் தனது பெயருக்கு முன்னால் 'கலையரசி ராதிகா' என்றே டைட்டில் கார்டு வரும் என்று ஒரு அப்டேட்டையும் கொடுத்துள்ளார். நாத்திகத் தந்தை, ஆன்மீகப் பயணம், கலைஞரின் பட்டம் என ராதிகா பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications