உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய நடிகை ஸ்ருதிஹாசன்.. கண்ணீருடன் பெற்றோர் சொன்ன வார்த்தை
சென்னை: (Shruti Haasan Lifesaving Support to Child) திரையுலகில் நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் பலர். ஆனால் திரைக்கு வெளியே மனிதநேயத்தால் வாழ்க்கையை மாற்றும் சிலரே உண்மையான ஹீரோக்களாக மாறுகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதி ஹாசன் செய்த ஒரு உதவி, இன்று ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே மாற்றி இருக்கிறது.
அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முக்கிய பங்கு வகித்த ஸ்ருதி ஹாசன், அந்தக் குழந்தையை நேரில் சந்தித்த தருணம் சமூக வலைதளங்களில் பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

அரிய நோயால் போராடிய குழந்தை
2023ஆம் ஆண்டு பிறந்த ஆழ்வி என்ற பெண் குழந்தைக்கு MSMD (Mendelian Susceptibility to Mycobacterial Diseases) எனப்படும் அரிய மரபணு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் காரணமாக குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து, அடிக்கடி தீவிர உடல்நலப் பிரச்சனைகளால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை செய்யப்பட்டு இருந்திருக்கிறது. 2025ஆம் ஆண்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant) செய்ய வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த மிகக் கடினமான சூழலில் தான், ஸ்ருதி ஹாசன் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையாக நுழைந்தார். சிறந்த மருத்துவர்களை தொடர்பு கொள்ள உதவியது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிபுணர்களை இணைத்துக் கொடுத்தது, மருத்துவ சிகிச்சைக்கான வழிகளை விரைவாக ஏற்பாடு செய்தது என பல வழிகளில் அந்தக் குடும்பத்திற்கு அவர் துணையாக நின்றுள்ளார்.
குழந்தை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரங்களில் கூட, ஸ்ருதி ஹாசனும் அவரது குழுவும் உடனடியாக செயல்பட்டு, தேவையான உதவிகளை செய்து கொடுத்ததாக பெற்றோர் உருக்கமாக பகிர்ந்துள்ளனர். "ஸ்ருதிஹாசன் இல்லாமல் இருந்திருந்தால், இன்று எங்கள் மகள் உயிருடன் இருப்பாரா என்பதே தெரியாது" என்று உருக்கமாக பேசி இருக்கிறார்கள்.
திரைக்கு வெளியே ஒரு தாய்மை
சமீபத்தில் ஆழ்வியின் பெற்றோர், குழந்தையுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசனை நேரில் சந்தித்த தருணத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோக்களில், குழந்தையின் அருகில் அமர்ந்து மெதுவாக பேசும், விளையாடும், அவளை சிரிக்க வைக்கும் ஸ்ருதி ஹாசனின் இயல்பான மனிதநேய முகம் பலரையும் நெகிழ வைத்தது.
"ஹீரோக்களை நேரில் சந்திக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் ஸ்ருதி ஹாசனை சந்தித்த பிறகு, அந்தச் சொல் உண்மை இல்லை என்று தோன்றுகிறது" என்று குழந்தையின் பெற்றோர் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஸ்ருதிஹாசனின் பிரபலத்தைக் காட்டிலும், அவருடைய மனிதநேயமே எங்களை அதிகம் நெகிழ வைத்தது. எங்களை தனிப்பட்ட இடத்துக்குள் அழைத்து, குடும்பம் போல அணுகினார். ஆழ்வியுடன் அவர் காட்டிய பொறுமையும் பாசமும் எங்கள் மனதில் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். அந்தச் சிறு குழந்தையின் முகத்தில் வந்த சிரிப்பு தான், ஸ்ருதி ஹாசனின் உண்மையான வெற்றியாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.
சமூக பொறுப்பு கொண்ட ஸ்ருதி ஹாசன்
கமல்ஹாசனின் மகளாக பிறந்தாலும், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இசை, பாடல், ஓவியம் என பல கலைத் துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். திரைக்கு வெளியே மனநலம், பெண்களின் சுயமரியாதை, விலங்குகள் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சனைகள் குறித்தும் அவர் அடிக்கடி பேசி வருகிறார்.
இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம், ஸ்ருதி ஹாசன் சினிமாவைத் தாண்டி சமூக பொறுப்புடன் செயல்படும் ஒரு மனிதர் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. பெற்றோர் பகிர்ந்த அந்த உணர்வுபூர்வமான பதிவு, "பிரபலமாக இருப்பது ஒரு விஷயம்; மனிதராக இருப்பது இன்னொரு விஷயம்" என்ற கருத்தை பலரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குழந்தையின் உயிர் மீண்டு வந்தது, ஒரு நடிகையின் உதவியால். அந்த நன்றி உணர்வு இன்று சமூக வலைதளங்களில் பலரின் கண்களை ஈரமாக்குகிறது. "தேவைப்படும் நேரத்தில் கைகொடுக்கும் மனிதர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்" என்று, ஸ்ருதி ஹாசன் செய்த இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications