பிரபுவின் சாப்பாட்டு கேரியரை கண்டதுமே ஓடிவந்த டாப் ஹீரோ.. மறக்க முடியாத ஏவிஎம் ஸ்டுடியோ: பிரபலம்
சென்னை: 70, 80களில் திரையுலகம் ஒரு பொற்காலமாக இருந்ததாகவும், இப்போதுதான் கேரவன் கலாச்சாரம் வந்து, நல்லுறவுகளிடமிருந்து விலக்கி வைத்து விடுவதாகவும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் அன்று ஏவிஎம் ஸ்டுடியோ எப்படி கலகலவென காணப்பட்டது என்பதையும் பேட்டி ஒன்றில் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
Thiraikural என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்து பாலாஜி பிரபு, "நடிகர்கள் கோடிக் கணக்கில் அதாவது 250 கோடி, 150 கோடி, 50 கோடி என்றெல்லாம் சம்பளம் வாங்குகிறார்கள்.. அதில், சில நடிகர்கள், தங்களுக்கான சிகரெட்டையோ அல்லது குவார்ட்டரைகூட சொந்த செலவில் வாங்கி கொள்வதில்லை.. அதுவும் தயாரிப்பாளர் கணக்கில்தான் எழுதுவார்கள்..

555 சிகரெட் நடிகர்
எனக்கு தெரிந்து ஒரு நடிகர் காலையில் ஷூட்டிங் வந்ததுமே, '555' சிகரெட் பாக்கெட் 5 வேண்டும் என்று கேட்டு வாங்கிடுவார்... 5 பாக்கெட்டையும் அவரால் பிடிக்க முடியுமா தெரியாது.. ஆனால், 5 பாக்கெட் சிகரெட் கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால், அந்த நடிகர் காரை விட்டே இறங்க மாட்டார். சிகரெட் கிடைத்த பின்பே அவர் கீழே இறங்கி வருவார்...
ஏவிஎம் ஸ்டுடியோ வசந்த காலம்
ஆனால் அன்றிருந்தது ஒரு வசந்த காலம்.. ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் மரங்கள் பூத்து குலுங்கும்.. இப்போது அந்த பகுதியை கடக்கும்போது இப்போது நெஞ்சு பாரமாக இருக்கு.. அன்று 7 ஃப்ளோர்கள் இருந்தன..
70-80களில், ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் ஒரே ஸ்டுடியோவில், ஒரே நேரத்தில் வேற வேற ஃப்ளோர்களில் ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருப்பார்கள்.. பிரேக் என்றதுமே, ஒருவரையொருவர் நேரில் சென்று சந்தித்து பேசி கொள்வார்கள்..
பிரபு வீட்டு சாப்பாடு
ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.. பிரபுவின் வீட்டிலிருந்து பெரிய கேரியரில் சாப்பாடு வரும்.. பிரபு ஷூட்டிங்கில் இருக்கிறார் என்றாலே, ரஜினி, கமல் உட்பட மற்ற நடிகர்கள் ஓடிவந்து கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.. யூனிட் சாப்பாடு ஒருபக்கம் இருக்கும், பிரபலங்கள் வீட்டிலிருந்து வந்த சாப்பாடு மறுபுறம் இருக்கும்.. இவைகளை எல்லாம் கலந்து எல்லாருமே சாப்பிடுவார்கள்..
பிரேக்கின் போது ஒருவரை ஒருவர் பார்க்கச் செல்வார்கள், ஒன்றாக உட்கார்ந்து சிரித்து பேசுவார்கள்.. சிலர் சிகரெட் பிடித்து கொண்டிருப்பார்கள்.. சிலர் சாப்பிட்டு முடித்து பீடா போட்டு கொண்டிருப்பார்கள்..
ஆனால், இன்று கேரவன் கலாச்சாரம் வந்துவிட்டது.. நடிகர்கள் கேரவனுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. ஒன்-டு-ஒன் சீனில் நடிக்கும்போது, உடன் நடிப்பவர் யார் என்று இன்னொரு நடிகருக்கு தெரியாது..
கோடம்பாக்கத்தில் குடை
மழை, வெயில் இல்லாதபோதும் ஹீரோ , ஹீரோயின்களுக்கு குடை பிடிப்பார்கள். இப்படியான அநாகரீகமான போக்கு கோடம்பாக்கத்தில் மட்டுமே பார்க்க முடியும்..
சில ஹீரோயின்கள், ஷூட்டிங்கில் சாப்பாடு கேட்பார்கள்.. அதை கொடுக்க போனால், தன்னுடைய தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, குழந்தைகள் என தனித்தனி கேரியரில் தன்னுடைய வீட்டுக்கு சாப்பாடு அனுப்ப சொல்லுவார்கள்.. இதுவும் தயாரிப்பாளர்கள் செலவில்தான் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் ஒழுங்காக நடித்து தர மாட்டார்கள்..
ஆனால் இதெல்லாம் 4 வருஷம்தான்.. அதுக்கப்பறம் அந்த நடிகைகளுக்கு மார்க்கெட் காலியாகிவிடும்.. அவரவர் வீட்டில் அரை கிலோ கறி வாங்கி, நாலு துண்டு சாப்பிடும் நிலைமை வந்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்தள்ளார்.












Click it and Unblock the Notifications